கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-18)
போன எபிசோடை தொலைபேசியோடு முடித்திருந்தோம். சினிமாக்களில் காதலர் நடுவே
டெலிபோன் நுழைந்து பல காலமாகிறது, வயர் பிடித்து வழிந்த நேரத்திலிலிருந்து கணவன்-மனைவியாக கரம் பிடித்தபின் அதுவே
'தொல்லை'-பேசியாகிவிடுகிறது. ஏன் இப்படி?
"Why Men Don't Listen & Women Can't Read Maps: How we're different and
what to do about it" என்ற தங்கள் புத்தகத்தில், எழுத்தாளர்கள் ஆலன் மற்றும் பார்பரா பீஸ் இதற்கான காரணங்களை விளக்குகிறார்கள்:
"ஆண்கள் தொலைபேசியை மற்றவர்களுக்குத் தகவல்-களையும் செய்திகளையும்
பரிமாறிக் கொள்வதற்கான ஒரு கருவியாகப் பார்க்கிறார்கள்; ஆனால்
பெண்கள் அதை ஒருவருக்கொருவர் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளும் வழியாகக் கருதுகிறார்கள்.
'ஒருமுறை நான் என் மனைவியிடம் ஆறு மாதங்கள் பேசவில்லை' என்று ஒரு நகைச்சுவை நடிகர் கூறினார்; 'அவர் பேசுவதற்கிடையில்
நான் குறுக்கிட விரும்பவில்லை' என்பதே அதற்குக் காரணம். ஒரு பெண்
உங்களிடம் அதிகமாகப் பேசுகிறாள் என்றால், அவளுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது
என்று அர்த்தம். அவள் உங்களிடம் பேசவில்லை என்றால், நீங்கள் சிக்கலில்
இருக்கிறீர்கள் என்று பொருள். தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதன் மூலமே பெண்கள்
மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதை விட, தாங்கள் சொல்வதை
கணவர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். திருமண வாழ்க்கையில்
நல்ல அம்சங்களும் உள்ளன. நீங்கள் தனியாக இருந்திருந்தால் தேவைப்பட்டிருக்காத விசுவாசம்,
பொறுமை, சகிப்புத்தன்மை, சுயக் கட்டுப்பாடு மற்றும் பிற மதிப்புமிக்க பண்புகளை அது உங்களுக்குக் கற்றுக்
கொடுக்கிறது!
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான பாலின வேறு-பாடுகள் மிக அதிகமாக இருந்தபோதிலும், அவர்களுக்-கிடையிலான உறவுகள் சிறப்பாகவே செயல்படுகின்றன.
இதற்கான பெருமையில் பெரும்பகுதி பெண்களையே சாரும்; ஏனெனில்,
உறவுகளையும் குடும்பத்தையும் நிர்வகிப்-பதற்கான
திறன்கள் அவர்களிடம் உள்ளன. உறவுகளில் நாம் எதிர் கொள்ளும் மன அழுத்தத்தில் பெரும்பகுதி,
ஆண்களும் பெண்களும் இப்போது ஒரே மாதிரியானவர்கள் என்றும், அவர்களுக்கு ஒரே மாதிரியான முன்னுரிமைகள், உந்துதல்கள்
மற்றும் விருப்பங்கள் உள்ளன என்றும் நம்பும் தவறான கண்ணோட்டத்திலிருந்தே உருவாகிறது.
21-ஆம் நூற்றாண்-டின் தொடக்கத்திலும்கூட,
பள்ளிகளில் ஆண்-பெண் உறவுகள் குறித்த அடிப்படை புரிதலை நாம் இன்னும் கற்றுக் கொடுக்கவில்லை என்பது
வியப்பிற்குரியது!"
மணந்தவருக்குள் மனஸ்தாபம் என்பது வேறு, ஊடல் என்பது வேறு. ஊடல் இல்லாத உறவு இருக்கிறதா என்ன?
கண்ணதாசன் அவர்கள் இந்த சல்லாபத்துக்கு முன்பான சலசலப்பையும் தன் பாடல்களில்
இருவருக்கும் இடையே புகுந்து விளையாடி இருக்கிறார் (படம்: போலீஸ்காரன் மகள்):
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த
மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
கனிமொழிக்கென்மேல்
என்னடி கோபம் கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது"
சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது "Life and Death in One Breath" (ஒரே மூச்சில்
வாழ்வும் மரணமும்) என்ற புத்தகத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக்
குறிப்பிடுகிறார்: "பூமியில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தான் அதிக மோதல்கள் நடக்கின்றன. ஒரே
வித்தியாசம் என்ன-வென்றால், அங்கு குண்டுகள் வெடிப்பதில்லை,
அதனால் அந்தச் சத்தம் வெளியே கேட்பதில்லை. ஒருவேளை அவர்கள்
ஒருவருக்கொருவர் பேசாமல் மௌனப் போரில் (silent treatment) ஈடுபடலாம்.
மக்களின் எதிர்பார்ப்புகள் மாறிக்கொண்டி-ருப்பதாலும், அந்த
மாற்றங்கள் ஒரே வேகத்தில் நிகழாமல் வெவ்வேறு வேகங்களில் நிகழ்வதாலும் தான் இது
நடக்கிறது... இந்த விஷயங்களை வைத்துக்கொண்டு ஏதோ நிர்வாகம் செய்வதையோ அல்லது
சர்க்கஸ் வித்தை காட்டுவதையோ போல நடந்துகொண்டால், அதாவது
மற்றவரின் மனதை ஊகித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொண்டே இருக்க
முயன்றால், நீங்கள் மனதளவில் சிதைந்து போவீர்கள்."
திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, குடும்ப நலனுக்காக அந்த உறவை எப்படியாவது 'புரிந்து கொண்டு நிர்வகிப்பதே' சிறந்தது என்று பல
தம்பதிகள் நினைக்கிறார்கள். ஆனால் ஜக்கி ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறார்:
"மற்றவர் யார் என்பதைப் பற்றிய ஒவ்வொரு சிறு விஷயத்தையும் நீங்கள்
புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. சொல்லப்போனால், எல்லாவற்றையும் நீங்கள் புரிந்துகொண்டால் அவர்கள் அச்சுறுத்-தலாக உணரக்கூடும். மக்கள் புரிதலைத் தேடுவதாகச் சொன்னாலும், உண்மையில் அவர்கள் அதைத் தேடுவதில்லை. ஒரு உறவில் நீங்கள் தேடுவது 'அனைவரையும் உள்ளடக்கும் தன்மை' (inclusiveness) தான்...
உங்கள் தரப்பிலிருந்து அந்த உள்ளடக்கும் தன்மை இல்லாத இடத்தில்தான் சிக்கல்கள்
எழுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களை நிர்வகிக்கவோ அல்லது நிர்வாகம்
செய்யவோ முயற்சிக்-காதீர்கள். மக்களுக்கு இவை பிடிப்பதில்லை.
யாராவது உங்களை நிர்வகிப்பது உங்களுக்குப் பிடிக்குமா? இல்லை.
அப்படியிருக்க, மற்றவர் அதை விரும்புவார் என்று ஏன்
நினைக்கிறீர்கள்? அவர்களுக்கும் அது பிடிக்காது. யாராலும்
நிர்வகிக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை, ஆனால் எல்லோரும்
மற்றவர்களுடன் ஒன்றிணைந்து இருக்கவே (உள்ளடக்கப்படவே) விரும்புகிறார்கள்."
வேறு சில தம்பதிகள், "எப்படியாவது மற்றவரை மகிழ்ச்சிப்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்"
என்ற பொறியில் சிக்கிக்கொள்கிறார்கள். இதற்கும் அந்த நவீன கால குருவின் நேர்மையான
அறிவுரை இதுதான்: "நீங்கள் யாரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
பூக்கள் உங்களையோ அல்லது வேறு யாரையாவது மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கின்றன என்று
ஒருபோதும் கற்பனை செய்து பார்க்காதீர்கள். அவை உங்களைப் பற்றிக் கவலைப்படுவதே
இல்லை. ஆனால் இனிமையாக இருப்பது அவற்றின் இயல்பு, அதனால் அவை
இனிமையாக இருக்கின்றன. அவை இனிமையாக இருப்பதால் தான் நாம் அவற்றை நம் அருகில்
வைத்திருக்க விரும்புகிறோம். நீங்களும் இனிமையானவராக இருந்தால், எல்லோரும் உங்களை அருகில் வைத்திருக்க விரும்புவார்கள், அவ்வளவு-தான். நீங்கள் அவர்களைக் கையாள
வேண்டியதில்லை, மக்களிடம் இனிமையாக நடந்துகொள்ள வேண்டும்
என்று கட்டாயமில்லை. யாருடனும் இனிமையாகப் பழக முயற்சிக்க வேண்டியதில்லை. நீங்கள்
இயல்பாகவே இனிமையானவராக இருந்தால் போதும், நீங்கள் எப்படிப் பட்டவராக இருந்தாலும் சரிதான்."
"ஆஹா என்னப் பொருத்தம்!" என்று அடித்துக்
கொண்ட தம்பதியை முன்பே பார்த்தோம். அதுவே மனம் பொருந்திய ஜோடியின் சின்ன
மனக்கசப்பு என்றால் நடுவில் மாட்டிக்கொண்ட சின்னக் கண்ணன் தலை உருளும்
திண்டாட்டம். ஆனால் கண்ணனின் தாசனுக்கோ கொண்டாட்டம் (படம்: காத்திருந்த கண்கள்):
“வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா
கண்ணா - அவள்
வடித்து
வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக்
கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட
இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?”
எக்கார்ட் டோல் (Eckhart Tolle) தனது அதிகம் விற்பனையான "The Power of Now" (நிகழ்காலத்தின் சக்தி) என்ற
புத்தகத்தில், திருமணத்திற்கு முன் ஒருவரையொருவர்
மிகவும் நேசித்த தம்பதிகள், திருமணத்திற்குப்
பிறகு எப்படி ஒருவரை-யொருவர் கடுமையாக வெறுக்கும் நிலைக்கு
மாறுகிறார்கள் என்று வியக்கிறார். ஒரு சுவிட்சை 'ஆன்' (on) நிலையிலிருந்து 'ஆஃப்' (off) நிலைக்கு மாற்றுவது
போல, காதல் உறவு எவ்வாறு அதற்கு நேர்மாறான
நிலைக்கு மாறுகிறது என்பதற்கான காரணங்களை ஆராயுமாறு அவர் நம்மை வலியுறுத்துகிறார்.
"What Women Want Men to Know" (ஆண்கள்
தெரிந்துகொள்ள வேண்டியவை என்று பெண்கள் விரும்புவது என்ன?) என்ற புத்தகத்தின் ஆசிரியர் பார்பரா டி ஏஞ்சலிஸ் (Barbara De Angelis), உறவுகளில் ஆண்களும் பெண்களும் கடந்து
செல்லும் மனரீதியான மற்றும் உணர்வுப்பூர்வமான செயல்-முறைகளை
விரிவாக விளக்குகிறார். நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், ஒரு பெண்ணின் கனவு நாயகனாகத் திகழ என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய இந்தப்
புத்தகத்தைப் படியுங்கள். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் இயல்பு ஏன் அப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும், நீங்கள் விரும்பும் உறவைப் பெறவும் இந்தப் புத்தகத்தைப் படித்து, அதை உங்கள் காதலனிடம் அல்லது கணவரிடம் கொடுங்கள். அவர் இவ்வாறு கூறுகிறார்:
"உண்மையான அர்ப்பணிப்பு என்பது ஒரு மோதிரத்திலோ, ஒரு காகிதத்திலோ அல்லது துணையுடன் எத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தீர்கள்
என்பதிலோ இல்லை. அது, நீங்கள் நேசிக்கும்
நபரை ஒவ்வொரு நாளும் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதில்தான் உள்ளது. உங்கள்
நெருக்கமான உறவுதான் நீங்கள் மேற்கொள்ளும் மிக முக்கியமான மற்றும் மதிப்புமிக்க
முதலீடு."
கவியரசர் பாடலுக்கு வருவோம். "நீ/ங்க கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே மாறிட்டே/டீங்க" என்கிற மிக அதிகமாக தம்பதியினர் சொல்லும் டைலாக்-கை அழகாக கொண்டுவருகிறார்.
“காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே கண்ணா! - தாலி
கட்டியவள் மாறி விட்டாள்! ஏனடா கண்ணா?
அந்தக் காதலிதான் மனைவி என்று கூறாத கண்ணா
- அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா?”
'காதலித்தபோது
'கண்ணை மூடி'க் கொண்டிருந்த நிலைமை நிச்சயம்
பரிச்சயமாக இருக்குமே? திருமணமான ஆண்களுக்கு பார்பரா சில
முக்கியமான அறிவுரைகளை வழங்குகிறார்: "பெண்கள் மற்றும் காதல் குறித்து
நீங்கள் எவ்வளவு அதிகமாகத் தெரிந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த கணவராகவோ அல்லது
காதலனாகவோ நீங்கள் திகழ்வீர்கள்; அத்துடன் உங்கள் வாழ்க்கையின் மீதான உங்கள் கட்டுப்பாடும் அதிகரிக்கும்.
காதலில் இருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை ஆண்கள் ஒரு நாள் முழுவதும் உணர்ந்து
பார்க்க முடிந்தால், அவர்கள் நிச்சயம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைவார்கள் என்று நான்
எப்போதும் சொல்வதுண்டு; ஏனெனில், நாங்கள் வேறு எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்போம், அவர்கள் மீது மிகுந்த கவனத்துடனும்
இருப்போம். உங்கள் துணையை உணர்வுரீதியாகப் புறக்கணித்தால் அல்லது அன்பின்றி
நடத்தினால், அவர் எரிச்சல், கோபம், பொறுமையின்மை மற்றும் மிகை உணர்ச்சிவசப்படும் தன்மை கொண்டவராக
மாறிவிடுவார். சொல்லப்போனால், நீங்கள் வெறுக்கும் அத்தனை குணங்களும் கொண்ட ஒருவராக உங்கள் துணையை நீங்களே
மாற்றிவிடுவீர்கள்.
ஆண்கள் என்ன செய்யலாம்? உங்கள் துணை தான் வருத்தமாக
இருப்பதாகவோ அல்லது அதிருப்தி அளிக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியோ உங்களிடம்
கூறும்போது, அதற்கு முழு கவனம் செலுத்துங்கள். அந்த
உரையாடலை அவசரமாக முடித்துவிடாமல், அவர் என்ன உணர்கிறார் என்பதைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்லுமாறு
கேளுங்கள். மேலோட்டமாகத் தெரிவதை விட ஆழமான விஷயங்கள் அங்கு இருக்கலாம் என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள். இந்த யோசனை கேட்பதற்கு அவ்வளவு ஈர்ப்புடையதாகத் தோன்றாது
என்பது எனக்குத் தெரியும்; ஆனால், ஒரு பெரிய காட்டுத்தீயை எதிர்கொள்வதை விட, ஆரம்பத்திலேயே தோன்றும் சிறிய
தீப்பொறிகளை அணைத்து விடுவதுதானே சிறந்தது?"
“தினம்
தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா? - அவள்
தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா?
நினைப்பதெல்லாம்
வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா? – அதை நீ பிறந்த
பின்பு கூற இயலுமா கண்ணா?”
கவிஞர் ஜித்தர். கல்யாணமான ஜோடிகள் சில நாட்களில்/ மாதங்களில் பேசும் அத்தனை வசனங்களையும் பாட்டில் பிடித்து வைத்திருக்கிறார். அதுதான் கண்ணதாசன் என்கிற ஞானியின், எல்லா தரப்பு மக்களையும் எளிமையாக மனதைத் தொடும்/சென்றடையும் யுக்தி. "இப்பல்லாம் நீங்க சிடு சிடுன்னு இருக்கீங்க, முன்னமாதிரி கொஞ்சி பேசறதையே மறந்துட்டீங்க"/"நீ மட்டும் என்னவாம், எப்போதும் கடுகடுன்னு இருக்கே!" என்கிற சாமானிய வீட்டு டைலாக்-கள் ஞாபகம் வருமே? கணவன் அன்பாகப் பேசி மனைவியை ஐஸ் கிரீம் போல உருக வைத்து விடலாம் என்று 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பாட்டிலேயே ஆண்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டார் கவியரசர்:
"சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு
உந்தன்
பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு
பார்வையை திறந்து விடு"
தம்பதியினரின் உறவில் ஏற்படும்
விரிசலுக்கு, இரு பாலினத்தவரின் இயல்பாகவே மாறுபட்ட அணுகு முறைகளே காரணம் என்று ஜான்
கிரே தனது "ஆண்கள் செவ்வாய் கிரகத்திலிருந்தும் பெண்கள் வெள்ளி
கிரகத்திலிருந்தும் வந்தவர்கள்" என்ற நூலில் கூறுகிறார்: “ஆண்களுக்கும்
பெண்களுக்கும் இடையிலான மிகப்பெரிய வேறுபாடுகளில் ஒன்று, அவர்கள் மன அழுத்தத்தை எவ்வாறு
கையாளுகிறார்கள் என்பதுதான். ஆண்கள் அதிக கவனம் செலுத்தி, தங்களைத் தனிமைப்படுத்திக்
கொள்கிறார்கள், அதே சமயம் பெண்கள் அதிக மனச் சுமைக்கு ஆளாகி, உணர்ச்சி ரீதியாக அதில் மூழ்கி விடுகிறார்கள்.
இத்தகைய நேரங்களில், ஒரு ஆணின் மனநிறைவுக்கான தேவைகள் ஒரு பெண்ணின் தேவைகளிலிருந்து வேறுபடுகின்றன.
அவன் பிரச்சனை-களைத் தீர்ப்பதன் மூலம்
மனநிறைவு அடைகிறான், ஆனால் அவள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதன் மூலம் மனநிறைவு அடைகிறாள்.”
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான
தகவல் தொடர்பு பாணிகளில் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி, நூலாசிரியர் கூறுகிறார், “தங்கள் உணர்வுகளை முழுமையாக
வெளிப்படுத்த, பெண்கள் கவித்துவ சுதந்திரத்தை எடுத்துக் கொண்டு, பல்வேறு உயர்வு நயங்கள், உருவகங்கள் மற்றும்
பொதுமைப் படுத்தல்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆண்கள் இந்த வெளிப்பாடுகளைத் தவறாக
நேரடிப் பொருளில் எடுத்துக்கொள்கிறார்கள். அதன் உண்மையான அர்த்தத்தை அவர்கள்
தவறாகப் புரிந்துகொள்வதால், பொதுவாக ஆதரவற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள்.”
அப்படியானால், திருமண உறவில் உள்ள ஆணும் பெண்ணும் என்ன செய்ய வேண்டும்? கிரே இந்த முக்கியமான ஆலோசனையை வழங்குகிறார்: “ஒரு பெண் தனது உணர்வுகளைப் பற்றிப் பேசும்போது, அதைச் சரியாகப் புரிந்துகொண்டு அவளுக்கு ஆதரவளிப்பது ஆண்களுக்கு உள்ள பெரிய சவால்களில் ஒன்றாகும். ஒரு ஆண் பேசாதபோது, அதைச் சரியாகப் புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவளிப்பதே பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். பெண்கள் மௌனத்தை மிக எளிதாகத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.”
தம்பதியினர் தங்கள் பிடிவாதமான மனநிலைகளிலிருந்து இறங்கி வர வேண்டிய சூழலில், அதற்கான தீர்வைக் காண நாம் கண்ணதாசனிடம் செல்வோம்:
“இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில்
கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய்
வந்தவள்தான் கூறடா கண்ணா”
தம்பதியினரிடையே எழும் 'ஈகோ' (அகங்காரம்) சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிகளை அறிய, மேற்கத்திய எழுத்தாளர் ஜான் கிரேவின் கருத்துக்களை இப்போது நாம் காண்போம்:
"வாக்குவாதங்களைத் தவிர்க்க, ஒரு விஷயத்தை நாம் *என்ன*
சொல்கிறோம் என்பதற்காக அல்ல, மாறாக *எப்படிச்* சொல்கிறோம்
என்பதற்காகவே நம் துணை அதிருப்தி கொள்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
வாக்குவாதம் செய்வதற்கு இருவர் தேவை, ஆனால் அதை
நிறுத்துவதற்கு ஒருவர் மட்டுமே போதுமானது. பெண்கள் தங்கள் உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ளும்போது நேரடியாகப் பேசாமல் இருப்பதன் மூலமே பெரும்பாலும் அறியாமலேயே
வாக்குவாதங்களைத் தொடங்கி விடுகி-றார்கள். தங்கள்
அதிருப்தியையோ ஏமாற்றத்தையோ நேரடியாக வெளிப்படுத்து-வதற்குப் பதிலாக, அவர்கள் சில கேள்விகளை (பதிலை எதிர்பாராத கேள்விகளை) எழுப்பி, அதன் மூலம் மறைமுகமாகத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
பெண்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது தாங்கள்
கவனிக்கப்படுவதையும் புரிந்துகொள்ளப் படுவதையும் எவ்வளவு முக்கியமாகக்
கருதுகிறார்களோ, அதேபோல ஆண்கள் தாங்கள்
இருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்ளப்படுவதை மிக முக்கியமாகக் கருதுகி-றார்கள். அவர்களை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும்,
'அவர்கள் போதுமான அளவு நல்ல நிலையில் இல்லை' என்பதால்தான்
அவர்களை மாற்ற முயல்கிறீர்கள் என்ற எண்ணத்தையே அவர்களுக்கு ஏற்படுத்துகிறது."
திருமணத்திற்குப் பிறகு தங்கள் துணைகளால் 'திருத்தப்-படுவது' அல்லது 'மேம்படுத்தப்படுவது'
ஆண்களுக்குப் பிடிப்பதில்லை; ஏனெனில், தாங்கள் இருக்கும் நிலையிலேயே தங்கள் துணைகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை
என்று அவர்கள் உணர்கிறார்கள். பெண்கள் தங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருக்கவும்,
மனதளவில் நிம்மதி பெறவும் தங்கள் துணைகளிடமிருந்து நிலையான
உணர்வுப்பூர்வமான ஆதரவை எதிர்பார்க்கிறார்கள்.
வெற்றிகரமான ஆலோசனை நிபுணர்களான ஆலன் மற்றும் பார்பரா பீஸ் (Allan & Barbara
Pease) தம்பதியினரின் "Why Men Don't Listen &
Women Can't Read Maps" (ஆண்கள் ஏன் கேட்பதில்லை & பெண்கள் ஏன் வரைபடங்களைப் புரிந்துகொள்வதில்லை) என்ற புத்தகத்தைப்
பார்த்தால், ஆண்களுக்கும் பெண்களுக்குமான வேறுபாடுகள்
குறித்தும், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும்
அவர்கள் விரிவாக விளக்கியிருப்பதை அறியலாம். ஆசிரியர்களின் வார்த்தைகளில்
சொல்வதானால், "அடிப்படைப் பிரச்சனை மிகவும் எளிமையானது:
ஆண்களும் பெண்களும் வேறுபட்டவர்கள். ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவரோ அல்லது
தாழ்ந்தவரோ அல்ல - வெறும் வேறுபட்டவர்கள் மட்டுமே. ஆனால், ஆண்களும்
பெண்களும் ஒரே மாதிரியான திறன்கள், ஆற்றல்கள் மற்றும்
சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளனர் என்று நம்புவதில் இன்றைய சமூகம் உறுதியாக உள்ளது.
ஆண்களும் பெண்களும் வேறு பட்டவர்கள் என்பது அறிவியலுக்குத் தெரியும்; ஆனால்,
'அரசியல் ரீதியான சரியான அணுகுமுறை' (political correctness)
என்ற பெயரில் அந்த உண்மையை மறுக்க எல்லா முயற்சிகளும் மேற்- கொள்ளப்படுகின்றன. ஹார்மோன்களின் தாக்கத்தாலேயே நாம் நாமாக இருக்கிறோம்;
நமது உடலின் வேதியியல் மாற்றங்களின் விளைவே நாம். தனிப்பட்ட
பலவீனங்களை மையமாகக் கொள்வதற்குப் பதிலாக, ஆண்களுக்கும்
பெண்களுக்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வதன் மூலமே நமது கூட்டு பலத்தை நாம்
உண்மையாகவே கட்டமைக்கத் தொடங்க முடியும்."
பெண்களின் உணர்வுகளின் தொகுப்பைப் புரிந்து கொள்வதில் ஆண்களுக்கு இயல்பாகவே
உள்ள ஒரு பலவீனத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (குடும்பம்
piece-piece-ஆகாமல் peaceful ஆக மாற்றுவதனால்
இவர்களை Pease couple என்பதற்கு பதிலாக Peace couple என்றே நாம் அழைக்கலாம்!) Peace (சமாதானத்) தம்பதியினர் கூறுவது போல, "மற்றொரு பெண் வருத்தமாகவோ அல்லது மனவேதனையுடனோ இருக்கும் போது அதை ஒரு
பெண் எளிதில் புரிந்துகொள்கிறாள்; ஆனால், ஒரு ஆணோ, கண்ணீர், கோபத்தின்
வெளிப்பாடு அல்லது முகத்தில் அறையப்படுவது போன்றவற்றை நேரில் காணும் வரை, அங்கே ஏதோ ஒரு பிரச்சனை நடக்கிறது என்பதைக் கூட உணர்வதில்லை."
மேலே குறிப்பிடப்பட்ட முதல் புத்தகத்தின் தொடர்ச்சியாக அமைந்த "Why Men Lie &
Women Cry" (ஆண்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் & பெண்கள் ஏன் அழுகிறார்கள்) என்ற நூலில், அவர்கள்
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளனர்:
"ஆண்களின் மூளை அமைப்பு 'ஒரே நேரத்தில் ஒரு வேலையை
மட்டும் கவனிக்கும்' (mono-tracking) வகையிலேயே அமைந்துள்ளது;
அவர்களால் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த
முடியும். ஆனால், பெண்களின் மூளை 'ஒரே
நேரத்தில் பல பணிகளைச் செய்யும்' (multi-tasking) திறனுக்கு
ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்களால் ஒன்றுக்கொன்று
தொடர்பில்லாத பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடிகிறது; மூளைச்
சோதனைகள் (brain scans) காட்டுவது என்னவென்றால், பெண்களின் மூளை ஒருபோதும் ஓய்வெடுப்பதில்லை; அவர்கள்
தூங்கும் போது கூட அது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஆண்களின் இந்த 'ஒரு நேரத்தில் ஒரு
விஷயம்' என்ற மனநிலையைப் புரிந்துகொள்வது, ஆண்கள் குறித்து பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில்
ஒன்றாகும். நினைவில் கொள்ளுங்கள், விலங்குகளை
வேட்டையாடுவதிலும் எதிரிகளுடன் போரிடு-வதிலுமே ஆண்களின்
பரிணாம வளர்ச்சி அமைந்திருந்தது; மாறாக, மற்றவர்களைப் புரிந்துகொள்வதிலோ அல்லது அவர்களின் உணர்வுப்பூர்வமான
தேவைகளை உணர்ந்து நடந்து கொள்வதிலோ அல்ல. ஆண்கள் மற்றவர்களின் மனதை அறியும் ஆற்றல்
இல்லாதவர்கள் என்பதல்ல விஷயம்; மாறாக, அவர்களில்
பெரும்பாலோர் பெண்களின் மனநிலையை உணர்ந்து புரிந்துகொள்வதில் அவ்வளவு கூர்மையான
உணர்திறன் கொண்டிருப்பதில்லை என்பதே உண்மை."
தம்பதியருக்குள் சண்டை முடிந்து சமாதானம் ஆனதா? அடுத்த
எபிசோடில் பார்ப்போம்... [காதலும், கல்யாணமும்,
குடும்ப வாழ்க்கையும் ஆரம்பிச்ச உடனே episode சைஸ்
'பெரிசா வருதே' என்று editor நினைக்கலாம். பரவாயில்லை. காதல் ஜோடிக்கும், தம்பதிக்கும்
'சண்டை பெரிசா ஆகாம' காப்பாதுவோமே!].
-ஜேயெஸ் (www.jeyes.in)
(Both the
English & Tamil versions of this series are available at: https://jeyeswrites.blogspot.com/?m=1)
Comments
Post a Comment