கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-12)
ஆதாம்
ஏவாள் காலத்து காதலுக்கு பின் மனிதனை சிந்திக்க வைத்து தெளிய வைக்க எல்லா ஞானிகளும்
கேள்விகளாக கேட்பார்கள். கவி ஞானி கண்ணதாசனோ கேள்வி தொடரால் துளைப்பார் பல பாடல்களில்.
இன்னும் சில பாட்டில் பதிலும் சொல்லுவார். சிலர் பாடல்களில் கேள்வியிலேயே பதிலும் வைத்து
காட்டுவார். உதாரணமாக இப்பாடலில் 'காதல் இல்லாத வாலிபமா?'
என்று கேட்கிறார் (படம்: ஆனந்த ஜோதி):
“பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத
முக்கனியா இசையில்லாத
முத்தமிழா”
வார்த்தை
வித்தககர் பதிலே கேள்வியாகப் பாடியிருக்கிறார். ஆனால் ஒரு வரியில் வரப்போகும் குடும்ப
வாழ்க்கையில் நடக்கப் போவதை கூடலுக்குப்பின் ஊடல் போல பொடி வைத்து சொல்லியிருக்கிறார்:
“நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர்
போலே பேசுவதும் பருவம்
செய்யும் கதையல்லவா”
தனது
“பெண் மூளை” (The Female Brain) என்ற புத்தகத்தில்,
லூஆன் பிரிசென்டைன் (Louann Brizindine) கூறுகிறார்,
“இருவருக்கு இடையேயான குறுகிய மற்றும் நீண்ட கால ‘ஈர்ப்பு’ தற்செயலானது
போல் தோன்றலாம், ஆனால் உண்மை என்னவென்றால், நம் மூளைகள் நன்கு அறிந்திருக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளன. மனித இனப்
பெருக்கப் போட்டியில் நமது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய துணைகளை நோக்கி அவை
நுட்பமாகவும் உறுதியாகவும் நம்மை வழிநடத்துகின்றன.”
“ஒருவர் காதலில் விழுந்தவுடன், மூளையில் உள்ள எச்சரிக்கையான,
விமர்சன சிந்தனைப் பாதைகள் செயலிழந்துவிடுகின்றன. நாம் ஒரு துணையைக்
கண்டுபிடித்து, பின்னர் அந்த ஒரு நபரின் மீது பிரத்தியேகமாக கவனம்
செலுத்துவதை உறுதி செய்வதற்காக, பரிணாமம் இந்தக் காதல் மூளைச்
சுற்றுகளை உருவாக்கியிருக்கலாம் என்று ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் (Rutgers
University) மானுடவியலாளர் ஹெலன் ஃபிஷர் (Helen Fisher, an
anthropologist) கூறுகிறார். காதலிப்பவரின் தவறுகளைப் பற்றி அதிகம் விமர்சன
ரீதியாக சிந்திக்காமல் இருப்பது இந்தச் செயல்முறைக்கு உதவும்.”
கவியரசர்
இதை மாலை மயக்கம் என்றும் சொல்லி ஜோடிகள் நாள் பொழுது வீணாக்காமல் இணையத் துடிப்பதை
வெளிப்படுத்துகிறார் (படம்: ஊட்டி வரை உறவு):
"அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக!
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்!"
ஆண்-பெண்
காந்த இழுப்பை குறும்பாகவும் இப்படிப் பாடுகிறார் (படம்: வெண்ணிறாடை):
"ஒருவன் காதலன் ஒருத்தி காதலி
உறவு ஓ ஹோ ஹோ என்றது
அருகில் வா வா வா என்றது"
இந்த
இளையவர்கள் நிலையையும் இயற்கை போட்ட திட்டம் என்கிறார் கவிஞர் (படம்: பணத்தோட்டம்):
"ஒருவர் ஒருவராய் பிறந்தோம் இருவர் இருவராய் இணைந்தோம்
இறைவன்
போட்டததிந்த தோட்டம் இதில் இனிமை ஒன்று தான் நாட்டம்
நாளை என்றேதுவும் இல்லை இன்று நடக்கும் வாழ்க்கை தான் எல்லை"
நாம்
முன்பு பார்த்த கவியரசரின் “ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்” பாடலுக்குத் திரும்பிப் பார்த்தால், ஆசிரியர் லூஆன், ‘காதலில் விழுவதன்’ ரகசியத்தை வேடிக்கையாக வெளிப்படுத்துவது தெரிகிறது: “இது
ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்பனை செய்யக்கூடிய மிகவும் பகுத்தறிவற்ற நடத்தைகளில் (irrational behavior) அல்லது மூளை நிலைகளில் (brain states) ஒன்றாகும். புதிய
காதலின் தீவிரத்தில் மூளை ‘பகுத்தறிவற்றதாக’ மாறுகிறது; காதலரின்
குறைகளைக் காணமுடியாதபடி குருடாகிவிடுகிறது. இது ஒரு தன்னிச்சையற்ற நிலை. தீவிரமாகக்
காதலிப்பது அல்லது மோகக் காதல் என்று அழைக்கப்படுவது இப்போது ஆவணப்படுத்தப்பட்ட ஒரு
மூளை நிலையாகும். இது வெறி, சித்தப்பிரமை, போதை, தாகம் மற்றும் பசி போன்ற நிலைகளுடன் மூளைச் சுற்றுகளைப்
பகிர்ந்து கொள்கிறது. இது ஒரு உணர்ச்சி அல்ல, ஆனால் இது மற்ற
உணர்ச்சிகளைத் தீவிரப்படுத்துகிறது அல்லது குறைக்கிறது. காதலில் இருக்கும் சுற்றுகள்
முதன்மையாக ஒரு உந்துதல் அமைப்பாகும், இது மூளையின் பாலியல் உந்துதல்
பகுதியிலிருந்து வேறுபட்டது, ஆனால் அதனுடன் ஒன்றுடன் ஒன்று இணைகிறது.
இந்தத் தீவிரமான மூளைச் செயல்பாடு டோபமைன், ஈஸ்ட்ரோஜன்,
ஆக்ஸிடோசின் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் மற்றும் நரம்பியல்
வேதிப்பொருட்களால் இயங்குகிறது.”
கவியரசர் இந்த வேதிப்பொருள் (chemical cocktail) மயக்கத்தை இயற்கையின் இடி, மழைக்கு ஒப்பிட்டு 'மனக் கதவு திறந்ததாக' இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறார் (படம்: நீதிக்குப் பின் பாசம்):
“இடி
இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில்
இருந்த வாசல் திறந்து வச்சு
இரண்டும்
ஒண்ணாச்சு”
இன்னொரு பாடலில் (படம்: நெஞ்சிருக்கும் வரை) இப்படிச் சொல்கிறார்:
“முத்துக்களோ... கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த
வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை”
இந்த வாலிப மயக்கத்தை 'மேஜர் சந்திரகாந்த்' திரைப்பட பாடலில் (“ஒருநாள் யாரோ, என்ன பாடல் சொல்லித் தந்தாரோ, கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம், என்னென்று சொல் தோழி”), வாலி இப்படி பாடுகிறார்: “உள்ளம் விழித்தது மெல்ல, அந்தப் பாடலின் பாதையில் செல்ல, மெல்லத் திறந்தது கதவு, என்னை வாவெனச் சொன்னது உறவு.”
மருதகாசியோ புகுந்து விளையாடுகிறார் (படம்: உத்தம புத்திரன்) இப்படி: “முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே, உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே, விந்தை மிகும் மகுடி முன்னாலே, நாகத்தை போலே, எந்தன் மனம் ஆட கண்டேன், சிந்தை நிலை மாறினதாலே, எந்தன் முன்னாலே, செம்பவழம் நெருங்க கண்டேன், என் மனம் போலே”
ஆனால், ‘காதலில் விழுவதைத்’ தவிர்க்குமாறு மூளையின் வெவ்வேறு கட்டமைப்புகளும் எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்புகின்றன. லூவானின் வார்த்தைகளில்: “இன்சுலா என்பது மூளையின் ஒரு பழைய பகுதியில் உள்ள ஒரு பகுதி, அங்குதான் உள்ளுணர்வுகள் முதலில் செயலாக்கப் படுகின்றன. பெண்களில் பெரியதாகவும், எளிதில் செயல்படக்கூடியதாகவும் இருக்கும் ஆன்டீரியர் சிங்குலேட் கார்டெக்ஸ் (Anterior Cingulate Cortex), எதிர்மறை உணர்ச்சிகளை எதிர்பார்த்தல், மதிப்பிடுதல், கட்டுப் படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிற்கான ஒரு முக்கியமான பகுதியாகும்.” அதே “ஒருநாள் யாரோ” பாடலில், வாலியும், “நில்லடி என்றது நாணம், விட்டுச் செல்லடி என்றது ஆசை, நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம், உன்னிடம் சொல்லிட நினைக்கும் மனம், உண்மையை மூடி மறைக்கும்.”
இன்னொரு பாடலில் (படம்: பாரத விலாஸ்)
("மின்மினி பூச்சிகள் கண்களில் தென்படும்") வாலி இப்படி சொல்கிறார்: "போ போ என்று வெட்கம்
என்னை விட்டுச் சென்றது, வா வா என்று
ஆசை என்னை பற்றி கொண்டது.” இடை மருதன் இடை வெளியில் 'காசி'க்குப் போய் 'வாலா'ட்டாமல்,
கண்ணதாசனின் "முத்துக்களோ கண்கள்" பாடலுக்குத் திரும்புவோம்:
“ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம்
பின்னிப் பார்ப்பதென்ன?”
லூஆன் தனது புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: "பெண் குழந்தைகள் பிறக்கும்போதே பெண்மைக்கான இயல்புகளுடனும், ஆண் குழந்தைகள் ஆண்மைக்கான இயல்புகளுடனும் பிறக்கிறார்கள். பிறக்கும்போதே அவர்களின் மூளைகள் வெவ்வேறாக அமைந்துள்ளன; இந்த மூளைகளே அவர்களின் உந்துதல்கள், விழுமியங்கள் மற்றும் அவர்களின் எதார்த்தமான உலக அனுபவம் ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றன... நாம் பார்க்கும், கேட்கும், நுகரும் மற்றும் சுவைக்கும் விதத்தை மூளையே வடிவமைக்கிறது. நமது புலன் உறுப்புகளிலிருந்து நரம்புகள் நேரடியாக மூளைக்குச் செல்கின்றன; அந்தத் தகவல்களைப் புரிந்துகொண்டு அர்த்தப்படுத்துவது மூளையே ஆகும்."
இந்த பாட்டில் கவியரசர் பெண்ணின் உணர்வுக் கலவையை தானும் பெண்ணாகவே உணர்ந்து பாடியிருப்பது ஆச்சரியம் (படம்: 'தாயை காத்த தனயன்'):
“காவேரிக்
கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு
பூப் போல
பெண்ணிருக்கு, புரிந்து கொண்டால் உறவிருக்கு
என்னம்மோ
போலிருக்கு, எப்படியோ மனசிருக்கு
வெள்ளம்
போல் நினைவிருக்கு, வெட்கம் மட்டும் தடுத்திருக்கு”
இந்த உணர்ச்சிப் பெருக்கை உருவாக்கும் மூளையின் உள் கட்டமைப்புகளை வெளிப்படுத்தும் வகையில், ‘பெண் மூளை’ (Female Brain) என்ற நூல் பின்வருமாறு பட்டியலிடுகிறது: “இரு பாலினருக்கும், மூளையின் ஆழத்தில் அமைந்துள்ள பாதாம் வடிவ அமைப்பான அமிக்டாலாவே (Amygdala) உணர்ச்சிகளின் வாயிற்காப்பாளராகும். அமிக்டாலா என்பது மூளையின் உள்நாட்டுப் பாதுகாப்பு (Homeland Security) எச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு போன்றது. இது, உள்வரும் உணர்ச்சித் தூண்டுதல்களைக் கவனிப்பதற்காக, குடல், தோல், இதயம், தசைகள், கண்கள், முகம், காதுகள் மற்றும் அட்ரீனல் சுரப்பிகள் (Adrenal Glands) போன்ற உடலின் மற்ற அமைப்புகளைச் செயல்பட வைக்கிறது. அமிக்டாலா-விலிருந்து உடலுக்கு உணர்ச்சிகளைக் கடத்தும் முதல் நிலையம் ஹைப்போதாலமஸ் (hypothalamus) ஆகும்.”
கவிஞர் பின்வரும் வரிகளில், காதலர் இருவரின் விருப்பங்களும் திருமண பந்தத்தில் ஒன்றிணைந்து முழுமையடையும்
அடுத்த இயல்பான கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்:
“மேளங்கள்
முழங்கி வரும் மேடை என்னை அழைக்க வரும்
மாலை மணம்
சூட வரும் மங்கல நாளும் தேடி வரும்
காதலன்
என்ற வார்த்தை கணவன் என்று மாறி வரும்
மங்கை
என்று சொன்னவரும் மனைவி என்று சொல்ல வரும்”
ஆண்-பெண் இருவருக்கும் இடையிலான இயல்பு முரண்பாட்டைச் சுட்டிக்காட்டும் விதமாக, "ஜன்னலை மூடிவைத்தால் தூங்க முடியாத ஒரு ஆணுக்கும், ஜன்னலைத் திறந்துவைத்தால் தூங்க முடியாத ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஒரு ஒப்பந்தமே திருமணம்," என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா நகைச்சுவையாகக் கூறினார். தம்பதியினருக்கு மற்றொரு ஆலோசனையை வழங்கிய ஆங்டன் நாஷ், "உங்கள் திருமண உறவை மகிழ்ச்சி பொங்க வைத்திருக்க... நீங்கள் தவறு செய்திருந்தால் அதை ஒப்புக்கொள்ளுங்கள்; நீங்கள் சரியாக இருந்தால் அமைதியாக இருங்கள்," என்று கூறினார்.
நகைச்சுவை ஒருபுறம் இருக்கட்டும்...நரம்பியல்-ஹார்மோன் இயல் (neuroendocrinology) குறித்த பல தசாப்த காலத் திடமான ஆராய்ச்சியின் அடிப்படையில், ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை விரிவாக அலசும் லூவான் பிரிசென்டைன் (Louann Brizendine), அவர்களின் மூளைச் செயல்பாடுகள் குறித்த ஒரு கனிவான மற்றும் ஆழமான பார்வையை வழங்குகிறார். சொல்லப்போனால், இப்பூமியில் உயிர்வாழ்வதற்கேற்ப பிறப்பிலிருந்தே மாறுபட்ட மூளை அமைப்பைக் கொண்டவர்களாகவே ஆணும் பெண்ணும் உள்ளனர். ஆண்-பெண் இணைவு என்பது உலகளவில் ஏன் பெரிதும் விரும்பப்படும் ஒரு நிகழ்வாக அல்லது தேடலாக இருக்கிறது என்றால், அது பூமியிலேயே சொர்க்கத்தின் ஒரு மயக்கும் காட்சியை — அதுவும் ஒரு குறுகிய காலத்திற்கேனும் — நமக்கு அளிக்கிறது என்று எக்கார்ட் டோல் (Eckhart Tolle) கூறுகிறார்.
கணவன்-மனைவிக்கு இடையிலான கடமைகள் மற்றும் பொறுப்புகள் சார்ந்த குடும்பப் பிணைப்பை கண்ணதாசன் கறுப்பு-வெள்ளையில் (இல்லை... சிவப்பில்!) மேலும் வலுப்படுத்துகிறார் (படம்: பரிசு):
“கூந்தல் கருப்பு, ஆஹா குங்குமம்
சிவப்பு, ஓஹோ
கொண்டவள்
முகமோ ரோஜாப்பூ”
“இன்று முதல்
நீ என்னுரிமை என் இதயத்து மாளிகை உன்னுரிமை
ஒன்றிய
உள்ளம் வாழிய என்று சொன்னது கோவில் மணியோசை
என்ன
வந்தாலும் எது நடந்தாலும் இணைந்திருப்பேன் நான் உன்னுடனே
துன்பம் வந்தாலும்
துயரம் வந்தாலும்தொடர்ந்திருப்பேன் நான் உன்னிடமே”
மேற்கத்திய சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் திருமணத்தைப் பற்றிய சில புகழ்பெற்ற, நகைச்சுவையான மற்றும் முரண்பாடான கருத்துகள் இங்கே உள்ளன: ஆஸ்கார் வைல்ட், "திருமணம் என்பது புத்திசாலித்தனத்தின் மீது கற்பனைத்திறன் பெறும் வெற்றியாகும்; மறுமணம் என்பது அனுபவத்தின் மீது நம்பிக்கை பெறும் வெற்றியாகும்," என்று கூறினார். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது குறித்து அவர், "இருதார மணம் என்பது ஒரு மனைவி கூடுதலாக இருப்பது; ஒருதார மணமும் அதே நிலைதான்," என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆனால், "பரஸ்பர தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்த திருமணங்கள் மட்டுமே மகிழ்ச்சியானவை," என்று நம் அன்றாட வாழ்க்கையின் எதார்த்தத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆண்களுக்கு அவர் ஒரு அறிவுரையையும் வழங்கினார்: "பெண்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள், புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் அல்ல."
மேல் நாடுகளில் பல முறை டைவர்ஸ் செய்தபின்னும் பலமுறை மணந்து 'எதையோ' அந்த மற்றவரிடம் தேடும் ஆண்-பெண்களுக்கு, கவி ஞானி ஒரு அனுபவ உண்மையைச் சொல்லுகிறார் (படம்: மன்மத லீலை):
"மன்மதலீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திர கிண்ணத்தில் பேதம் இல்லை
உன் சிந்தையிலேதான் பேதமடா!"
மற்றொரு சிந்தனையாளரான எச். எல். மென்கென், புத்திசாலித்தனமான திருமணமாகாத ஆண்கள் குறித்துக் கூறும்போது, "திருமணமாகாத ஆண்களுக்குத் திருமணமான ஆண்களை விடப் பெண்களைப் பற்றி அதிகம் தெரியும்; இல்லையென்றால், அவர்களும் திருமணம் செய்து கொண்டிருப்பார்கள்," என்று குறிப்பிட்டார். அறிவார்ந்த ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, "திருமணம் பிரபலமாக இருப்பதற்குக் காரணம், அது அதிகபட்சமான ஈர்ப்பையும் அதிகபட்சமான வாய்ப்பையும் ஒன்றிணைப்பதே ஆகும்," என்று கவனித்தார். திருமண வாழ்க்கை குறித்த ஆண்களின் மனப்பான்மை பற்றி க்ரூச்சோ மார்க்ஸ், "திருமணம் ஒரு அற்புதமான நிறுவனம் (institution); ஆனால் ஒரு நிறுவனத்திற்குள் வசிக்க யார் விரும்புவார்கள்?" என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும், சாமுவேல் ஜான்சன் தர்க்கரீதியாகச் சிந்திக்கிறார்; அவர், "திருமணத்தில் பல துன்பங்கள் உள்ளன, ஆனால் பிரம்மச்சரியத்தில் எந்த இன்பமும் இல்லை," என்று குறிப்பிட்டார்.
காதலிப்பவரின் 'போதை'யடைந்த நிலையை, கவி ஞானி கண்ணதாசனும் இப்படிச் சொல்கிறார் (படம்: பாத காணிக்கை):
"காதல் கொண்டாலே ஆடவர்கள் பாவம்
புத்தி சொல்லாமல் கொள்ளாமல் போகும்
அவரை கண்டாலே ஊர் முழுதும் பேசும்
தோற்றம் கால்வாசி பைத்தியம் போல்
ஆகும்!
அந்த பைத்தியத்தை தீர்ப்பதற்கு மருந்து
பெண்கள் பார்வையிலே ஊறிவரும் விருந்து
இந்த வைத்தியர்கள் பக்கத்திலே இருந்து
கண்ணை வைத்து விட்டால் நோய்போகும் பறந்து!"
அப்புறம் என்ன சார்? "கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?" ஜோடிகள் "கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?" (படம்: பறக்கும் பாவை) ‘கெட்டி மேளம்தானே?’ என்று அவசர படாதீர்கள். "நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்" என்று நாம் அவசரப்பட்டு சொல்லிவிட்டால் பிற்பாடு கணவன்-மனைவி இப்படித் திட்டுவார்கள்: 'காதலிக்க(வே) நேரமில்லை' (படம்).
கண்ணதாசன் "என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல, கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல", நம்முடைய "எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்ல செல்ல" (படம்: வெண்ணிற ஆடை) கொஞ்சம் ஜோடிகளை காதல் செய்ய விடுவோமே. எப்படி ஆனாலும், "காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும்வரை, கல்யாணம் என்பது எதுவரை? கழுத்தினில் தாலி விழும்வரை. பெண்ணுக்கு இளமை எதுவரை? பிள்ளைகள் இரண்டு வரும்வரை. கண்ணனுக்கு அழகு எதுவரை? கையில் கிடைக்கும் நாள் வரை."
ஜோடிகள் 'தேடியது வந்ததா', 'ஊட்டி வளர்த்த
உறவுக்' கதவு திறந்ததா என்பதை அடுத்த எபிசோடில்
பார்ப்போம்...
-ஜேயெஸ் (www.jeyes.in)
Comments
Post a Comment