கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-15)

 

பள்ளி நாட்களில் சயன்ஸில் 'அயல் மகரந்த சேர்க்கை' என்று சொல்லிக் கொடுத்தது புரியவில்லை. பிடிக்கவும் இல்லை. ஆனால் கண்ணதாசன் மலர்-வண்டு என்று பாடிய போது அந்த சிறுவயதில்  கொஞ்சம் அரசல் புரசலாக புரிந்த மாதிரி இருந்தது, ஆனால் ரொம்பவும் பிடித்திருந்தது. கண்ணன், ராதை, மீரா, வீணை, ராமன், சீதை, கங்கை, யமுனை, நதி, ஓடம்,  அலை, பிருந்தாவனம், நிலவு என்று கவிஞர் ஆயிரக் கணக்கில் பாட்டு எழுதியிருந்தாலும், மலரைத் தேடும் வண்டுக்கும்  பஞ்சம் வைக்கவில்லை.

மூத்தவர் மருதகாசியின் 'முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே'யை (படம்: உத்தம புத்திரன்) முன்பே பார்த்தோம். அவர் மேலும் 'வெள்ளி அலை மேலே துள்ளும் கயல் போலே, அல்லி விழி தாவ கண்டேன் என் மேலே' என்றும் தொடர்ந்தார். கவியரசர் அதே பாதையில் வித்தியாசமாக இப்படி சொல்கிறார் (படம்:  இரு வல்லவர்கள்):

"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்" 

காதலன் தன் காதலிக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதை நாம ஊர் கவிஞர் ஜெயலன் 'கன்னிக்கு கண்ணி வைத்த வேடன்' என்று பாடியிருந்தார். முதலில் தன் ஜோடியை சுவையாக வர்ணித்து விட்டுத் தொடர்கிறார் (அதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். முழுக் கவிதையையும் எழுதினால் அது ஆசிரியர் கத்திக்கு இறையாகி விடும்!): 

" beep beep beep ......மருண்டதோர்

கலைமானின் கண்ணிரண்டு – இவைகண்டு

நிலையிழந்தேன் எனைமறந்தேன் – அறிவிழந்து

புலையனானேன் புல்லனானேன் – பிதற்றியாங்கே

இலையுனக்கு ஈடுஇணையென – அணைந்ததினால்

விலையில்லா நின்கற்பால் – சுட்டெரித்தாய்

சிலையம்பு போற்சொல்லால்  - துளைத்தெடுத்தாய்

கலைகூடும் கடிமணத்தில் – நாமினிதாய்

இலைகாம்பு இருத்தற்போல் – இணைந்திடலாம்

தொலைதூரம் இலையன்பே – என்றாய்எனை

வலையருகு அமர்வேடன் – ஆக்கினையே!" 

[கவிஞர் ஜெயலன் என் சகோதரர் மட்டுமல்ல, எனக்கு எழுத்தறிவித்த ஆசானும், நாங்கள் நடத்தி வந்த 'வடிகால்' என்கிற கையெழுத்துப் பத்திரிக்கையின் ஆசிரியரும் ஆவார்.  கல்லூரி நாட்களுக்குப் பின் 1980-களில் திருவிடைமருதூரில் இளைஞர்களை beyond school syllabus படிக்கவும் எழுதவும் ஊக்கப் படுத்தியவர். TDRTimes ஆசிரியர் S.முத்துக்குமார் எங்கள் கையெழுத்து பிரதியின் ஓவியர். நான் பிரதியின் writing, binding, publishing, circulation இன்ன பிற சில்லுண்டி வேலைகளை பார்த்துக் கொண்டேன். நாங்கள்  வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்ட  போது, அன்புள்ள எங்கள் அப்பா எல்லா வடிகால் இதழ்களையும் எடைக்குப் போட்டு விட்டார் என்று கேள்விப் பட்டு வாடினோம். Tdr இல் யாராவது வாசகருக்கு வடிகால் பார்த்த ஞாபகம் இல்லையோ?’ ஐம்பது வருடங்களுக்குப் பின் அதிர்ஷ்ட வசமாக ஒரு வடிகால் பிரதி கிடைத்தால் அனைவரும் தேன் குடித்த நரியாகி விடுவோம். மன வண்டு எங்கெங்கோ பறந்து விட்டது. கையில் மலரோடு காதலுக்கு காத்திருக்கும் ஜெய்சங்கரிடம் செல்வோம். By the way, 'சின்ன ஜேயெஸ்' என்று அக்காலத்தில் அழைக்கப் பட்டவர், எங்கள் சொந்தத் தம்பி ஜெய்சங்கர்! ம்..ம்..மன வண்டு மறுபடி பறக்கிறது]. 

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற" 

புகழேந்திப் புலவர் தன் நளவெண்பாவில் இந்தக் காட்சியை பழந்தமிழில் பாடியிருக்கிறார். அடுத்த மலர்-வண்டு பாடலில் கவி கண்ணதாசன் இப்படி சொல்கிறார் (படம்: வீட்டுக்கு வீடு):

"அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்

நங்கை முகம் நவரச நிலவு"

"மாதுளம் பூவினில் பொன்நிற வண்டுகள்

மயங்கி களிக்கும் அழகோ" 

தன்  பாட்டிலேயே தனக்கு சபாஷ் போட்டுக் கொள்கிறார் கவிஞர் "கற்பனை அற்புதம், காதலே ஓவியம், தொட்டதும் பட்டதும், தோன்றுமே காவியம்!" என்று. கண்ணன் ஒரு குறும்புக்காரன். கண்ணதாசன் மட்டும் குறை வைப்பாரா என்ன? பழக்கத்திலே குழந்தையைப்போல அப்பாவி ராஜா கணவன் 'சாந்தி என்றால் என்ன?' என்று கேட்க, பாலக்காடு அம்மாஞ்சி மாமி அவருக்கு நாசூக்காக/பக்குவமாக சொல்லிக் கொடுக்கிறார் இப்படி (படம்: வியட்னாம் வீடு): 

"பூக்களிலே வண்டுறங்கும் பொய்கையை கண்டாராம்

தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்

மரக்கிளையில் அணில் இரண்டு ஆடிடக் கண்டாராம்

ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்

ஏனம்மா அது ஏனம்மா" 

"ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தார்" என்று பாட்டு முடிவில் புரிந்து கொண்ட பாலக்காடு ராஜா பின்னர் 'சாந்தி'யைத் தொலைத்துவிட்டு, "எங்கே நிம்மதி?" என்று ஒரு 'புதிய பறவை'யைத் தேடி அலைந்த கதையை பிறகு பார்க்கலாம். ஆனால் அதே 'புதிய பறவை'யில் புரிந்து கொண்ட புது நாயகி "மொட்டு அவிழ்ந்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே" என்று "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்த' கதையை பாடுகிறார். ஜோடியை மாற்றினால், செல்வமகள்" திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற "ஏய் பறந்து செல்லும் சிட்டுக்குருவி" பாடல் மூலம் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் காதலிக்கு இப்படி சொல்லிக்கொடுக்கிறார்: 

"மல்லிகைப் பூவில் வண்டாட்டமா

மயங்கட்டுமா அதில் மிதக்கட்டுமா?" 

அவரே  "இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது, இந்த பார்வைக்கு தானா பெண்ணானது" பாடலில் மலர்-வண்டு உவமையை கொண்டு வருகிறார் (படம் : வல்லவன் ஒருவன்): 

"செண்பக பூவில் வண்டு விழுந்து தேன் குடித்தாடுதல் போலே

சேர்ப்பதை சேர்த்து பார்ப்பதை பார்த்து வாழ்ந்திட துடிப்பதனாலே

இனி பிரிவதில்லை உன்னை விடுவதில்லை" 

அங்கே "ஆலயமணி"யை அடித்தால், "மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு" "செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும்" நாயகன் வடிவில். மேலும் பாடுகிறார் கண்ணதாசன் "ராஜ ராஜ ஸ்ரீ ராஜனையும் ராணியையும்" வரவேற்று (படம்: ஊட்டி வரை உறவு) "இணைந்த கண்ணும் கண்ணல்ல, மலர்ந்த பூவும் பூவல்ல, அமர்ந்த வண்டும் வண்டல்ல" என்று சூசகமாக சொல்லிக் கொடுத்தார். 'காதலிக்க நேரமில்லை' (படம்) என்பவர்களுக்கு, "மலரென்ற முகமின்று சிரிக்கட்டும், மனமென்ற கருவண்டு பறக்கட்டும், உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும், உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்" என்று உற்சாகம் தந்தார். தவிர வாலி வேறு எழுதியிருக்கிறார், "பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு"  (படம்: மாலை சூடவா). 

மலரும் தேனீயும் பழமையான தமிழ் காதல் கவிதைகளில் மிகவும் நீடித்து நிற்கும் கற்பனைகளில் ஒன்றாகும். பெண்ணின் முகம் (அல்லது கண்கள்) ஒரு தாமரைக்கு ஒப்பிடப்படுகிறது, அதே சமயம் ஆணின் கண்கள் (அல்லது சில சமயங்களில் அவனது மனம்) அந்த மலருக்கு தவிர்க்கமுடியாமல் இழுக்கப்பட்ட தேனீயுடன் ஒப்பிடப் படுகிறது. உதாரணமாக: “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! அரிவை கூந்தலின் நறியவும் உளவோ?” என்று குறுந்தொகையில் கவிஞர் இறையனார் கேட்கிறார். நாயகன் ஒரு தேனீயை நோக்கி, தன் காதலியின் கூந்தலைப் போன்ற மணம் கொண்ட பூவை இதுவரை அறிந்திருக்கிறதா என்று கேட்கிறான். இங்கே, தேனீ ஈர்க்கப்பட்ட காதலனைக் குறிக்கிறது. 

திருக்குறளில் நம் மதிப்பிற்குரிய வள்ளுவர், தேனீயைக் குறிப்பிடாமல், நாயகியின் கண்களை நீலத் தாமரையுடன் பலமுறை ஒப்பிட்டுப் பேசுகிறார்: “கண்ணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று” “தாமரை தன் கண்களுக்குச் சமமாக இருக்க முடியாது என்று வெட்கித் தலைகுனிந்திருக்கும்.” கலித்தோகையில் உள்ள பல காதல் கவிதைகள், தாமரைகளைச் சுற்றி வட்டமிடும் தேனீக்களை விவரித்து, அழகான பெண்களை அணுகும் காதலர்களுக்கு அவற்றை உருவகங்களாகப் பயன் படுத்துகின்றன. தாமரை, தேனீக்கள், காதல் மற்றும் ஆசை ஆகியவற்றின் தொடர்பு, மீண்டும் மீண்டும் வரும் ஒரு கவிதை மரபாகும். "கன்னிப் பெண்ணின் முகம் ஒரு தாமரை; இளைஞனின் கண்கள் அதைச் சுற்றி வட்டமிடும் தேனீக்கள்" என்பது ஒரு மரபுசார்ந்த சங்கக் கவிதைப் பாட்டர்ன். கம்பர், அருணகிரிநாதர் மற்றும் பல இடைக்காலக் கவிஞர்கள் உட்பட பிற்காலக் கவிஞர்கள் இதே படிமத்தை விரிவாகப் பயன்படுத்தினர். 

காதலர்களைக் குறிக்க மலர்-தேனீ உருவகம் பயன் படுத்தப்படுவதை இப்போது மேற்கத்திய நாடுகளில் பார்ப்போம். கிரேக்க, ரோமானிய, பாரசீக, ஆங்கில மற்றும் ரொமாண்டிக் கவிதைகளில் இது காணப்படுவதால், காதலைப் போலவே இதுவும் உலகளாவியதாகத் தோன்றுகிறது. வில்லியம் ஷேக்ஸ்பியர் அழகை மலர்களுடனும், காதலர்களை அவற்றால் ஈர்க்கப்படும் உயிரினங்களுடனும் மீண்டும் மீண்டும் ஒப்பிடுகிறார். அவர் தேனீயை நேரடியாக அடிக்கடி பயன்படுத்தாவிட்டாலும், மலர்கள் ரசிகர்களை ஈர்க்கும் படிமம் அவரது சானெட்டுகள் மற்றும் நாடகங்களில் பொதுவானதாக உள்ளது. ஷெல்லியும் தேனீக்களை மலர்களுடன் காதல், அழகு மற்றும் பரஸ்பர ஈர்ப்பின் சின்னங்களாக இணைக்கிறார். 

மற்றொரு கவிஞரான ஜான் கீட்ஸின் படைப்புகள், இனிமை, ஆசை மற்றும் காதலின் போதையைக் குறிக்க மலர்களைச் சந்திக்கும் தேனீக்களால் நிரம்பியுள்ளன. மீண்டும், ராபர்ட் பர்ன்ஸ் சில சமயங்களில் காதலரைத் தேனைத் தேடும் தேனீயுடன் இணைத்து, அழகின் தவிர்க்க முடியாத ஈர்ப்பை வலியுறுத்துகிறார். பாரசீக ரூமி இந்த உருவகத்தை ஒரு ஆன்மீக நிலைக்கு எடுத்துச் செல்ல அடிக்கடி பயன் படுத்துகிறார்: "தேனீ மலரைத் தேடுகிறது, ஏனெனில் இனிமை எங்கே இருக்கிறது என்று அதற்குத் தெரியும்", தேனீ ஆன்மாவையும், மலர் தெய்வீகத்தையும் குறிக்கிறது. 

மலரும் வண்டும் சேர்ந்து வருவதுபோல கண்களும் பெண்களும் அடிக்கடி வரும் கவியரசர் பாடல்களில். உதாரணமாக, “எங்கே நிம்மதி?" பாடலில் (படம்: புதிய பறவை) "கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே" என்று புலம்புகிறான் நாயகன். இன்னொரு நாயகனோ, இப்படி அரற்றுகிறான் (படம்: வாழ்க்கை படகு): 

கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்
பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்
 

சோகத்தை விட்டு மகிழ்ச்சிக்கு இடம் பெயர்ந்தால், அதே 'வாழ்க்கை படகில்' போகும் நாயகி "உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார்?" பாடலில் கண் பார்க்கும் பாவத்தின் சுமையை மாமியார் மேலேயே சாமர்த்தியமாகத் திருப்பி விடுகிறாள் நாயகி: 

காதலித்தல் பாபம் என்றால் கண்களும் பாபமன்றோ?

கண்களே பாபம் என்றால் பெண்மையே பாபமன்றோ?

பெண்மையே பாபமென்றால் மன்னவரின் தாய் யாரோ?" 

கண் செய்வது பாவம் இல்லை, தலைவன் தலைவி கண்ணில் மருந்துதான் போடுகிறான் என்றும் பாடியிருக்கிறார் கண்ணதாசன். இன்னொரு ஜோடியான விருந்தும்-மருந்தும் வருவது "விழியே விழியே உனக்கென்ன வேலை? விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை?" பாடலில் (படம்: புதிய பூமி):

"விருந்து என்றாலும் வரலாம் வரலாம்

மருந்து தந்தாலும் தரலாம்..

இதில் நாளை என்ன? நல்ல வேளை என்ன?

இங்கு நான்கு கண்களூம் உறவாட..." 

மருந்து என்ன என்று தெரியவில்லை. 'கண்ணில் மண் தூவினான்' என்பார்கள். இருக்காதே! காதலன் போட்ட மருந்து 'சொக்குபொடி'யாக இருக்குமோ? இன்னொரு சுவையான "ஹலோ ஹலோ சுகமா?" பாடலில் (படம்: தர்மம் தலை காக்கும்), டெலிபோன் ஜோடிகள் கேள்வி-பதில் வட்டத்தில் இறங்குகிறார்கள்: 

"காலையில் நான் வரட்டுமா? கண்ணில் மருந்து தரட்டுமா?

மருந்து தந்தால் போதுமா? மயக்கம் அதில் தீருமா?

தீர்த்து வைப்பேன் நானம்மா! தேவை என்ன கேளம்மா!

நேரத்தோடு கிடைக்குமா? நினைக்க நினக்க இனிக்குமா?" 

அதே போல் "கன்னம் எண்ணம் வண்ணம்" ஜோடிகளுக்கு கண்ணதாசன் பஞ்சம் வைக்கவில்லை. முன்பே பல பேச்சாளர்களும், யூடுபர்களும், எழுத்தாளர்களும் "பால் வண்ணம் பருவம் கண்டு" பாடலை துவைத்து எடுத்து வைத்து விட்டார்கள். நாம் அந்தப் பக்கம் போக வேண்டாம். வண்ணம் என்றல் ஓவியம் வர வேண்டுமே? இந்த பாடலைப் பார்ப்போம் (படம்: சிவந்த மண்): 

"பார்வை யுவராணி கண்ணோவியம்

நாணம் தவறாத பெண்ணோவியம்

கால் வண்ணம் சதிராடும் கைவண்ணம் விளையாடும்

தென்னாட்டுப் பொன் வண்ணமே

மான் வண்ணம் என்றாலும் மலர்வண்ணம் என்றாலும்

குறைவென்று தமிழ் சொல்லுமே

வண்ணம் பாட புது வார்த்தை நான் தேடினேன்

எங்கும் தேடி முகம் பார்த்து பதம் பாடினேன்" 

வார்த்தை ஜாலம் போதவில்லை என்று தமிழ் குறை சொல்கிறது என தான் கவியரசர் ஆன காரணத்தையே தமிழுக்கு அர்ப்பணித்து இந்தப்  பாட்டில் தன்னையே கிண்டல் செய்துகொள்கிறார்: 

"பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும்

ஏனென்று தேன் வாடுமே

நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும்

தேர்க் கொண்ட ஊர்கோலமே

இன்று நானும் கவியாக யார் காரணம்

அந்த நாலும் விளையாடும் விழி காரணம்" 

'அந்த நாலும்' என்ன என்று சொல்லாத் தேவையில்லை. பெண் விழியில் விளையாடும் 'அச்சம், நாணம், மடம் பயிர்ப்பு'தான். பூக்கள்-வண்டு உவமைக்குத் திரும்பி வருவோம். மலர்களுக்கு மகரந்த சேர்க்கை சரி. ஆனால் மனிதர்களுக்கு "இதயத்தில் ஒரு திருமண மாலை" விழ வேண்டுமே? அப்போதானே  "இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை, உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம், உலகம் நமக்கினி ஆனந்த கோலம், இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை" என்று 'எங்கள் தங்கராஜா'வும் (படம்) ராணியும் பாட முடியும்!

 

காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப்போவது மஞ்சம் 

இயல்பான இனிமையான வார்த்தைகளில் இதயத்தைத் தொடுகிறார் கண்ணதாசன் இந்தப்  பாடலில் (படம்: இதயக்கமலம்): 

மலர்கள் நனைந்தன பனியாலே, என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

மலர்கள் நனைந்தன பனியாலே, என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

பொழுதும் விடிந்தது கதிராலே, பொழுதும் விடிந்தது கதிராலே

சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே” 

மகிழவான மகரந்த சேர்க்கையையும் விரசம் இல்லாமல் இதமாக சொல்லுவதில் கவிஞர் ஜித்தர்: 

"சேர்ந்து மகிழ்ந்து போராடி, தலை சீவி முடித்தே நீராடி

கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி,

பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி" 

சற்று குறும்புத்தனம் கலந்த இந்த வெளிப்பாட்டைப் பற்றிச் பழைய தமிழ் இலக்கியம் என்ன சொல்கிறது? சங்க காலக் காதல் கவிதைகளில் ஒரு பிரபலமான காட்சி உண்டு: காதலனுடனான கூடலுக்குப் பிறகு, தலைவி தன் உடலில் பதிந்துள்ள நகக்குறி அல்லது கலைந்த கூந்தல் மற்றும் அணிகலன்கள் போன்ற அடையாளங்களை அறியக் கண்ணாடியில் தன்னை உற்றுநோக்குவாள். இக்கருப்பொருள் பல பாடல்களில் காணப்படுகிறது; குறிப்பாகக் கபிலர் இயற்றியதாகக் கருதப்படும் 'கலித்தொகை'யின் 'குறிஞ்சிக் கலி'ப் பாடல்களில் இது விரிவாக விவரிக்கப் பட்டுள்ளது. ரகசியக் கூடலுக்குப் பிந்தைய காதலர்களின் நிலையை, குறிப்பாகத் தலைவன் ஏற்படுத்திய உடல் அடையாளங்-களைத் தலைவி கவனித்து வெளிப்படுத்தும் உணர்வுகளை இப்பாடல்கள் தத்ரூபமாகச் சித்தரிக்கின்றன. 'அகநானூறு' மற்றும் 'குறுந்தொகை' ஆகியவற்றிலும் கூடல் அடையாளங்-களைத் தாங்கிய தலைவியின் உடல்நிலை குறித்த பாடல்கள் உள்ளன; இருப்பினும், அவற்றில் கண்ணாடி பற்றிய குறிப்பு எப்போதும் வெளிப்படையாக இடம்பெறுவதில்லை. 

காதல் அடையாளங்களைச் சரிபார்க்கத் தலைவி கண்ணாடியில் பார்க்கும் காட்சி, சங்க காலத்திற்குப் பிந்தைய மற்றும் இடைக்காலத் தமிழ் இலக்கியங்களான 'சீவக சிந்தாமணி', 'கம்பராமாயணம்' மற்றும் 'பெரியபுராணம்' ஆகியவற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிற்காலத்தில் மு. வரதராசன், புலியூர் கேசிகன் அல்லது கி. வா. ஜகன்னாதன் போன்றோர் தமிழ்க் காதல் கவிதைகள் குறித்து விவாதிக்கும்போது, பழைய தமிழ் அழகியலை விளக்குவ-தற்கு இக்கருப்பொருளைப் பெரும்பாலும் மேற்கோள் காட்டியுள்ளனர். 

வெளிக் காயங்களைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, திருமணம் எனும் சூதாட்டத்தில் தம்பதியினர் சந்திக்கும் 'உள்மன' உணர்வுப்பூர்வமான காயங்களைப் பார்ப்போம்... அடுத்த எபிசோடில்...

-ஜேயெஸ் (www.jeyes.in)

 

 

Comments

Popular posts from this blog

Book Review: Most and More by Mahatria Ra

Book Review: Jugaad Innovation by Navi Radjou, Jaideep Prabhu & Simone Ahuja

Who Am I?