கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-14)
போன episode-ல் "பாவையின் முகத்தை
பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை" என்று ஆச்சரியப் பட்டோம். அவள் அதை
பார்க்கவில்லை என்றால் 'அவர் அவளைப் பார்க்கிறார்' என்பது அவளுக்கு எப்படி தெரியும்?
இதுவே தலை சுற்றலாக இருந்தால், சீனாவின் தத்துவக்
கவிஞனின் இந்த ஆங்கில மொழியாக்க கவிதைக்கு என்ன சொல்லு-வீர்கள்?
"I know
that
You know that
I love you;
What I want
you
To know is
I know
You love
me!"
இக்கவிதையின் தமிழாக்கம் இதோ: "நான் உன்னை விரும்புகிறேன் என்பது
உனக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும். நீ என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று
நான் விழைகிறேன் என்றால், நீ என்னை விரும்புவதை
நானும் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான்."
நாற்பது ஆண்டுகள் முன்பு எங்கோ படித்த இதை நான் கவிஞர் ஜெயலன் அவர்களுக்கு
கடிதம் எழுதி அனுப்ப, அவர் இந்த கவிதையை
தமிழில் அப்போதே இப்படி எழுதி இருந்தார். "Miss
Understanding" என்ற தலைப்பில் வெண்பாவில் அவர் வடித்திருக்கிறார்:
"காதலியே நானறிவேன் நீயறிவாய் நானுன்னை
காதலிக்கி
றேனென்று; வான்மதிநேர்
சீதளமே
நீயறிய
வேண்டுமென நான்விழைவ தெல்லாமுன்
காதலன்நான்
என்றறிவேன் என்று."
இருவருக்கும் தெரியும் அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள் என்று.
அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது, சுற்றி இருக்கிற அனைவருக்கும் அவர்கள் காதலில் மூழ்கி
இருக்கிறார்கள் என்பது தெரியும் என்பதுதான். கவிதையை விட விளக்கம் இன்னும் தலைசுற்ற
வைக்கிறதோ? போதும் ஏற்கனவே ஜோடிகளுக்கும் காதல் மயக்கத்தில் தலை
சுற்றிக் கொண்டிருக்கிறது!
ஜோடிப் பொருத்தம் சூப்பர், ஆனால் கல்யாணத்தில் முடிந்ததா அல்லது தாடி தேவதாஸாக அவனும் அழுவாச்சி அழகியாக
அவளும் பிரிந்தார்களா? காதல் தோல்வியில் முடிந்த இருவரும் பாடும்
பாடல்கள் பலப்பல. ஆனால் வெற்றியடைந்து கல்யாணத்தில் முடிந்தபின்னும் கஷ்டப்-படும் ஜோடிகளும் உண்டு. முதலில் முதலாவது வகையை பார்ப்போம்.
ஏன் சார் எப்போதும் 'ஜோடிகள், காதலர்கள், தம்பதிகள்'
என்று போடுகிறீர்கள்? அவர்கள் பேரைச் சொல்ல வேண்டியதுதானே
என்று சிலர் கேட்கலாம். ஊரைச் சொன்னாலும், பேரை சொல்ல ப்டாது!
உதாரணமாக, நான் அவர்கள் சிவாஜி-பத்மினி மாதிரி என்று போட்டால்,
நேயர்கள் சிலர் 'சரி'யான
(ரைட்) பொருத்தம் என்பார்கள். மற்றவர்கள், 'தப்பு'
(wrong). சிவாஜி-சாவித்திரி தான் சூப்பர் என வாதிடுவார்கள். நான் மாறாக,
MGR-சரோஜாதேவி என எழுதினால், பலர் 'Good'
pair என்று கொண்டாடுவார்கள். இன்ன பிறர், 'Bad' சாய்ஸ், MGR-ஜெயலலிதாவை அடிச்சுக்க முடியாது என்று சண்டைக்கு
வருவார்கள்.
நான் ரவிச்சந்திரன்-காஞ்சனா போன்ற ஜோடி என்று வர்ணித்தால், உங்களில் பலர் 'Like' போடுவீர்கள்.
சிலர், we 'dislike' என்பீர்கள். இறுதியாக, உங்களில் பலர் 'Gemini -Savitri,
ஜெய்சங்கர் - L விஜயலக்ஷ்மி, முத்துராமன் - KR விஜயா' மாதிரி
வேண்டும் (Want) என, மீதம் பேர் 'வீ don’t வாண்ட்'. 'நாகேஷ்-மனோரமா'
போல வருமா என்று பட்டிமன்றம் நடத்துவீர்கள். மொத்தத்தில், நாம் முன்னே பார்த்தமாதிரி, personalities வந்தவுடனேயே
இந்த பர்சனல் 'Good Vs Bad, Right Vs Wrong, Like Vs Dislike & Want Vs
Don’t want' நுழைந்து விடும். மனித மனங்கள் சண்டைக்கு
இழுத்து மண்டை உடையும். 'ஜோடிகள், காதலர்கள்,
தம்பதிகள்' என்பது நியூட்ரல் வார்த்தைகள். Eckhart
Tolle, 'God' என்ற வார்த்தைக்கு பதிலாக 'Being' என்பார். இல்லையென்றால், 'My God, Your God' என்று ஆரம்பித்து
விடுவார்கள். வாசகர்கள் அவர்கள் அனுபவம், கற்பனைக்கு ஏற்ற மாதிரி
புகை போன்ற மனத்திரையில் அவர்களுக்குப் பிடித்தவர்களை கற்பனை செய்துகொள்ளலாம். அல்லது
அவர்களது தற்போதைய பார்ட்னர்களையே ரொமான்ஸ் பண்ணுங்கள். பொய்த்திரைக்கு, உடனிருக்கும் உயிருள்ள-வர்கள் நிஜம், இல்லையா!
ஜோடி பிரிந்தால் தாடியும் குடியும்தான் வழி ஆணுக்கு என்று பிராண்டு பண்ணிவிட்டார்கள்
இந்திய சினிமாவில். ஆண்களின் "இது வேறு உலகம்” என்றார் கண்ணதாசன். "கவலையை மறந்திடக் கூடுவார்,
அதை கண்ணாடி விளிம்பினில் தேடுவார்" என்று கிண்டல் அடித்தார் 'நிச்சய தாம்பூலம்' படத்தில். "இருந்ததும் நடந்ததும்
பொய்யடா, இருக்கிற உலகம் மெய்யடா" என்று தத்துவம் பேசும்
தலைவன் '"யாருக்காக?"
என்று இறைந்து அழுகிறான் காதல் தோல்வியில் (படம்: வசந்த மாளிகை):
“கண்கள் தீட்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது
அங்கிருந்து ஆட்டுகின்றவன்
\தினம்
ஆடுகின்ற நாடகம் இது.”
குறிப்பாக ஒரு காதல் தோல்விக்குப் பிறகு ஆண்கள் ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்
என்று ஏதேனும் வாசகர் யோசித்தால், லூஆன் பிரிசென்டைன் (Louann Brizendine) எழுதிய “ஆண்
மூளை (The Male Brain): ஒவ்வொரு ஆணுக்குமான ஒரு அத்தியாவசிய உரிமையாளர்
கையேடு, மற்றும் ஒவ்வொரு பெண்ணுக்குமான ஒரு சுருக்கக் குறிப்பு!”
என்ற புத்தகத்திலிருந்து தொடங்குவது ஒரு நல்ல வழியாகும். டெஸ்டோஸ்டிரோன் என்ற பழம்பெரும்
ஆண் ஹார்மோனைத் தாண்டி, வாசோபிரசின், ஆக்ஸிடோசின்,
புரோலாக்டின், கார்டிசோல், ஆண்ட்ரோஸ்டெனெடியோன் மற்றும் டோபமைன் ஆகிய இரசாயனங்களின் மாயாஜாலக் கலவையின்
விளைவுகளை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்.
இது பெண்களுக்கும் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவமாகும். ஏனெனில், ஆண்கள் கருவாகப் பிறப்பது, சிறுவனாகச்
சுறுசுறுப்பாக இருப்பது, பருவமடைதல், முதிர்ந்த
வயது, முதுமை போன்ற வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்,
அந்த இரசாயனங்களே அவர்களின் பார்வை, உணர்வுகள்
மற்றும் நடத்தையைத் தீர்மானிக்கின்றன என்ற ரகசியத்தை இது வெளிப்படுத்துகிறது. நூலாசிரியர்
கூறுகிறார், “ஆண்களுக்குரிய நரம்பணுக்கள், வழக்கமான ஆண் நடத்தைகளுடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர்.” மேலும், ஆண்கள் ஒன்றாக இருக்கும்போது போதைப்
பொருள் மற்றும் மதுப்பழக்கம் அதிகரிப்பதாகக் கூறப்பட்டாலும், அந்தப் பொருட்கள் இல்லாமலேயே, ஆண்கள் வாழ்க்கையில் அதிக
வாய்ப்புகளை எடுத்துக்கொள்கிறார்கள் மற்றும் உறவுகளில் தோல்விகளைச் சந்திக்கிறார்கள்.
அவர்களின் ஹார்மோன்களும், சமூகப் பழக்கவழக்கங்களும், வளர்ப்பு முறையும், தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த அனுமதிக்காததால்,
அவர்களால் தங்கள் 'இழப்பை' சமாளிக்க முடிவதில்லை. எனவே, அவர்கள் அதைத் தனிமையில்
உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு, மற்ற ஆண் துணையுடன் தங்கள் காயங்களை
('புண் பட்ட நெஞ்சை புகை விட்டும்') ஆற்றிக் கொள்கிறார்கள்.
மீண்டும் கவியரசரின் அழுவாச்சி
நாயகர்களுக்கு வருவோம்: "நான் உன்னை அழைக்கவில்லை, என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக்கொண்டால், மனதில் எண்ணம் மறைவதில்லை" என்றும் அழைத்து உருகிப் பார்க்கிறான் தலைவன்
(படம்: எங்கிருந்தோ வந்தாள்). தவற விட்டவன் சொல்கிற "அவன்
நினைத்தானா இது நடக்குமென்று?" செல்ஃபிட்டியையும் காட்டினார்
கவிஞர் (படம்: செல்வ மகள்). ரொம்ப விரக்தியடைந்த ஆண்கள் இப்படியும் யோசிப்பார்கள் என்று சொல்கிறார்
கவிகள் (படம்: வாழ்க்கைப் படகு):
"கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்
பெண்களே
பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்
நெஞ்சமே
நெஞ்சமே நினைப்பதை இனி மேல் நிறுத்தி விடு
மஞ்சமே
மஞ்சமே மயக்கத்தை இனி மேல் மறந்து விடு
கன்னியர்
மேனி பொன்னிறம் கண்டு காதலர் கண்ணீர் விட வேண்டாம்"
துணைக்கு கனவையும், நிலவையும், மலரையும் அழைத்துக் கொண்டு, கவிஞர் பெண் கட்சிக்கும் பலமாக வாதிடுகிறார், இப்பாடல்கள்
மூலம்: “ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் –அதை உள்ளத்தில் வைத்தே
வாடுகின்றாள் வெளியே சொல்லவும் மொழியில்லை வேதனை தீரவும் வழியில்லை” (படம் : வானம்பாடி), “ஊரெங்கும் தேடினேன் ஒருவரை
கண்டேன் உள்ளமெங்கும் தேடினேன் உறவினை கண்டேன், அந்த
உறவினிலே மூழ்கினேன் பிரிவினை கண்டேன்” (படம்: தேன் நிலவு), “ஆருயிரே மன்னவரே, அன்பு மயில் வணக்கம், உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்,
புரியவில்லை எனக்கும்” (படம்: குலமகள் ராதை),
“மலரே மலரே தெரியாதோ? மனதின் நிலைமை புரியாதோ?”
(படம்: தேன் நிலவு). அடுத்த பாடலில் அவர் மொத்த
சமுதாயத்தையும் ஆண் இனத்தையும் சாடுகிறார்: "இறைவன் இருக்கின்றானா?"
(படம்: அவன் பித்தனா):
"ஒன்றையே நினைத்திருந்தும், ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப்
பிறந்தவரை, கண்ணாக யார்
நினைத்தார்
இருந்தால்
இருந்த இடம், இல்லையேல்
மறந்து விடும்
இவர்
தான் மனிதரென்றால், இயற்கையும்
நின்று விடும்
மனிதன்
இருக்கிறானா?"
கண்ணதாசன் 'பட்டிக்காடா
Vs பட்டணமா' என்று காதலில் புதிய ட்விஸ்ட்டையும் கொடுக்கிறார் "பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்" பாடலில் (படம்: பெரிய இடத்துப் பெண்):
"பட்டணத்துக் காதலப்பா பாதியிலே மறையுமப்பா
பட்டிக்காட்டு
காதலுக்கு கெட்டியான உருவமப்பா"
'பட்டிக்காடா பட்டணமா' படப் பாடலில் "நல் வாழ்த்து
நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று…" பாடி சண்டையை சமாதானமும் செய்கிறார் கவிஞர்:
"யாரிடம் குறை இல்லை யாரிடம் தவறில்லை
வாழ்வது
ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை வா!"
ஜான் கிரே (John Gray) தனது
"Men are from Mars, Women are from Venus" (ஆண்கள்
செவ்வாய் கிரகத்திலிருந்தும் பெண்கள் சுக்கிரன் கிரகத்திலிருந்தும் வந்தவர்கள்) என்ற
புத்தகத்தில், தம்பதிகள் மற்றும் தனிநபர்களுக்குப் பல ஆண்டுகளாக
வெற்றிகரமாக ஆலோசனை வழங்கிய அனுபவத்தின் அடிப்படையில், இருபாலரிடையே
தகவல் தொடர்பு முறைகள், உணர்வுப்பூர்வமான தேவைகள் மற்றும் நடத்தைகளில்
உள்ள வேறுபாடுகளைக் கையாண்டு, அவர்களுக்கு இடையே சிறந்த புரிதலை
வளர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார். அவரது வார்த்தை-களிலேயே
சொல்வதானால்: "ஆண்களுக்கும் பெண்-களுக்கும் வெவ்வேறு வகையான
உணர்வுப்பூர்வமான தேவைகள் உள்ளன என்பது பொதுவாக அவர்களுக்குத் தெரிவதில்லை. இதன் விளைவாக,
ஒருவருக்கொருவர் எவ்வாறு ஆதரவளிப்பது என்பது அவர்களுக்கு இயல்பாகவே தெரிவதில்லை.
உறவுகளில், ஆண்கள் பொதுவாகத் தங்களுக்குத் தேவையானவற்றையே மற்றவருக்கும்
அளிக்கிறார்கள்; அதேபோல பெண்களும் தங்களுக்குத் தேவையானவற்றையே
அளிக்கிறார்கள். மற்றவருக்கும் அதே தேவைகளும் விருப்பங்களும் தான் இருக்கும் என்று
ஒவ்வொருவரும் தவறாகக் கருதுகிறார்கள். இதன் விளைவாக, இறுதியில்
இருவருமே அதிருப்தியும் மனக்கசப்பும் அடைகிறார்கள்."
கீழ்வரும் பாடலில் கண்ணதாசன் பெண்ணின் பரிதவிப்-பையும் பாடுகிறார் (படம் பாக்கியலஷ்மி):
“மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு
கண்டேன் தோழி
மனதில்
இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம்
ஏன் தோழி
இன்பம்
சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி”
“இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில்
மறைந்தது சில காலம்
தெளிவும்
அறியாது முடிவும் தெரியாது
மயங்குது
எதிர் காலம்”
தன் காதல் தோல்விக்கு கடவுளைத் திட்டுவது பலருக்கு வழக்கம். கண்ணதாசனும்
கடவுளைப் பிடித்து துவைக்கிறார் இந்த பாடல்களில்: "இருவரை இணைத்து திரை போட்டு இது இறைவன் நடத்தும் விளையாட்டு"
(படம்: நிலவே நீ சாட்சி), “கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்,
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்” (படம்:
வானம்பாடி), “ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா..இது
இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா” (படம்: சரஸ்வதி சபதம்)
(பாடல்/கதை context ஏழ்மையாக இருந்தாலும் கவிஞரின்
'ஒய்வு நேர விளையாட்டு' என்கிற சொல் விளையாட்டு
அருமை.). கவியரசர் இந்தப் பாடலில் 'மனிதத்
தோல்வி'க்கான கடவுளைத் தூற்றுவதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்
செல்கிறார் (படம்: குலமகள் ராதை):
“உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி”
மேலும், காலம், விதி மற்றும் இறைவனால் ஜோடி சேர்க்கும் பணியில் செய்யப்பட்ட கணித ரீதியான தவறான
கணக்கீடு (mathematical mistake) ஆகிய பிற காரணிகளையும் அவர்
குறை கூறுகிறார்:
“நினைக்க வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்...
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி”
காதல் தோல்வியை எதிநோக்கும் மனிதன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே பந்தாடப்படுவதை எளிய மொழியில் வெளிப்படுத்தினார் கவியரசர் இப்பாடலில் (திரைப்படம்: தாயை காத்த தனயன்):
“நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்”
விரக்தியின் உச்சிக்கு போனவனின் 'எங்கிருந்தாலும் வாழ்க' மூடுக்கும்
அழைத்துச் செல்கிறார் இந்த பாட்டில் (படம்: எங்க மாமா):
“எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்...
உன்பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்”
ஒரே மனித இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் ஏன் செவ்வாய் (Mars) மற்றும் சுக்கிரன் (Venus) போன்ற வெவ்வேறு கிரகங்களிலிருந்து
வந்தவர்-களைப் போல இவ்வளவு மாறுபட்டுத் திகழ்கிறார்கள்?
சுவாரஸ்யமாக, ஷெல்டன் பி. காப் (Sheldon
B. Kopp) தனது "If You Meet the Buddha on the Road,
Kill Him!" என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: "ஒரு ஆண்
தனக்குள் இருக்கும் பெண்மையின் கூறுகளை (female double) ஏற்றுக்கொண்டு
இணக்கம் காணாதவரை, அவன் முழுமையான ஆணாக இருக்க முடியாது. பெண்களுக்கும்
இது பொருந்தும்; அவர்களும் தங்களுக்குள் இருக்கும் ஆண்மையின்
நிழல் வடிவங்களை (male shadows) அங்கீகரிக்க வேண்டும். தங்கள்
ஆளுமையின் மறுபக்கத்தை அறியாதவர்கள், தாங்கள் அடைய விரும்பும்
அடையாளங்களின் அபத்தமான கேலிச்சித்திரங்களாகவே இருக்கிறார்கள். தங்களுக்குள் மறைந்திருக்கும்
அந்த மறுபக்கத்தை அறியாததால், அவர்கள் எதிர் பாலினத்தவரை வெறுக்கவும்
சந்தேகிக்கவும் செய்கிறார்கள்."
கவனிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், Y குரோமோசோம் கொண்ட கருக்கள், தாயின்
கருப்பையில் உயிர் தொடங்கிய நான்கு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகுதான் ஆண் குழந்தைகளாக
வளர்ச்சியடையத் தொடங்குகின்றன. மேலும், ஆண்களின் உடலில் இயற்கையாகவே
ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone)
போன்ற பெண்மைக்-குரிய ஹார்மோன்கள் உள்ளன. குறிப்பாக,
ஒரு ஆண் தந்தையாகும்போது - அதாவது அவனது துணை குழந்தை-யைப் பெற்றெடுக்கும் நேரத்திலும் அதற்குப் பின்னரும் - அவனது உடலில் புரோலாக்டின்
(Prolactin) சுரக்கிறது; இதனால் அவன் பிறந்த
குழந்தையின் மீது பாதுகாக்கும் தாய்மை அன்பு உணர்வைப் பெறுகிறான். அதேபோல, பெண்களின் உடலிலும் வாழ்நாள் முழுவதும் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone),
DHEA, ஆண்ட்ரோ-ஸ்டினெடியோன் (Androstenedione)
போன்ற ஆண்மைக்குரிய ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன்கள்) இயற்கையாகவே காணப்படுகின்றன.
இதில் உள்ள வித்தியாசம் அளவில்தானே தவிர, ஒரு பாலினத்திற்குரிய
ஹார்மோன் மற்றவரிடம் முற்றிலும் இல்லாமல் இருப்பதில்லை. இந்திய ஆன்மீகம் ஏற்கனவே சிவனும்
சக்தியும் இணைந்த வடிவமான 'அர்த்தநாரீஸ்வரர்' தத்துவத்தின் மூலம் இதை வெளிப்-படுத்தியுள்ளது.
ஆசிரியர் மேலும் குறிப்பிடுகையில், "திருமணத்தில் மக்கள் தேடுவது, குறைந்தபட்சம் ஒரு பகுதியிலாவது, தங்கள் ஆளுமையின் மறுபாதியைத்தான்.
நம் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வகையில் முழுமையின்மை உள்ளது; நம்
மனிதத்தன்மையின் சில அம்சங்கள் அதிகமாக வளர்ச்சி அடைந்தும், வேறு
சில அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டும் இருக்கின்றன. நமக்குள் இல்லாத அல்லது நாம் உரிமை
கோராத பண்புகளை நாம் மற்றவரிடம் தேடுகிறோம். ஒரு வகையில், நம்
குறைகளை ஈடுசெய்துகொள்ளவே நாம் திருமணம் செய்துகொள்கிறோம். பெரும்பாலும், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் ஏறக்குறைய ஒரே அளவிலான நல்ல மற்றும் கெட்ட குணங்களைக்
கொண்டவர்களே என்று நான் நம்புகிறேன்."
மீண்டும் கவியரசரிடம் வருவோம்; பின்வரும் பாடலில், முரண்பாடுகளை நகைச்சுவை உணர்வுடன்
கையாண்டு, அவர் ஒரு தத்துவார்த்தமான கருத்தை வெளிப்படுத்துகிறார்
(படம்: அன்னை):
“புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை
கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு”
சீட்டுக்கட்டு மாளிகை போன்ற வாழ்க்கையிலே போதும் சார் துன்பப் பட்டது. ஜோடியை சேர்த்து வைங்க என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கவி ஞானியே அதை காமெடியாக செய்து விட்டார் இந்தப் பாடலில் (படம்: வேட்டைக்காரன்):
“சீட்டு கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பி பாரு லேசா லேசா
சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே
இப்போதான் நீ ஆம்பிளே
தனி தனியா நடந்து வந்தோம்
சேர்ந்து போவோம் வீட்டிலே”
நாமும் மனமயக்கம் கொண்டவர்களை
கவிஞர் வழியில் போய் இப்படி வாழ்த்துவோம் (படம்: மயங்குகிறாள் ஒரு மாது):
“வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது
தரவேண்டும் வளர் காதல் இன்பம்
உனக்கென
நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக என்றும்
உந்தன்
முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன்
விழி பட்டால் எண்ணம் மலரும்
காவியம்
போல் தொடரட்டுமே
என்
காதல் சாம்ராஜ்யம் நிலையாகவே!"
அதிகம் அறியப்படாத
கவிஞர் AS மணி என்பவர், “நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு, நடப்பது நலமாகும் நான் இருந்தால்
உன்னோடு” என்று பாடினார். நடந்த மணவாழ்வு நலமாக இருந்ததா?
பார்ப்போம்
அடுத்த எபிசோடில்…..
-ஜேயெஸ் (www.jeyes.in)
Comments
Post a Comment