கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-26)
"கண்கள் கலந்து விட்டால் பேச தோன்றுமா?", "வாயிருந்தும்
வார்த்தை வரவில்லை" என்றெல்லாம் படித்திருக்கிறோம், சிலர்
அனுபவித்தும் இருப்போம். இது ஒரு வித மௌனம். செவ்வியல் தமிழ் இலக்கியங்களில்—குறிப்பாகச்
சங்கப் பாடல்களில்—இத்தகைய வெளிப்பாடுகளை ஒத்த பல கருத்துகள் காணப்படுகின்றன. திருவள்ளுவரின்
திருக்குறள் இவ்வாறு வினவுகிறது: "கண்கள் சந்தித்துப் பேசிக் கொள்ளும்போது,
வாயால் பேசும் சொற்களுக்கு என்ன பயன்?" (“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல”). இது பார்வைகளின் மூலமே நிகழும் ஒரு முழுமையான காதல் உரையாடலை
விவரிக்கிறது. கண்ணதாசன் இதனை இப்படி வைத்தார் திரைப்பாடலில் (படம்: சங்கே முழங்கு):
“இரண்டு கண்கள் பேசும்
மொழியில் எழுத்துக்கள் இல்லை, இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை.”
சங்க இலக்கியத்தில் இதற்குப் பல இணையான சான்றுகள் உள்ளன. சொற்களைக் காட்டிலும்
பார்வைகளின் மூலம் காதலர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளும் கருத்து, குறுந்தொகை, அகநானூறு மற்றும் நற்றிணை
ஆகியவற்றில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. தலைவன் தலைவியின் கண்களைக் கொண்டே அவள்
மனதை அறிந்துகொள்வது, தலைவி ஒரு பார்வையின் மூலம் தன் சம்மதத்தைத்
தெரிவிப்பது, மற்றும் தோழிகள் வெறும் பார்வைப் பரிமாற்றத்தைக்
கொண்டே காதலை உணர்ந்துகொள்வது போன்ற பல காட்சிகள் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
உரையாடலுக்குப் பதிலாக அங்கு மௌனம், கண்ணீர், புன்னகை அல்லது தழுவல்
ஆகியவை இடம்பெறுகின்றன. உணர்ச்சியின் தீவிரம் சொற்களின் தேவையை இல்லாம-லாக்குகிறது. நாக்கு வெளிப்படுத்த முடியாததை இதயம் அறியும் என்பது சங்க இலக்கியத்தில்
வரும் ஒரு கருத்தாகும். காதலர்கள் ஒருவரையொருவர் உள்ளுணர்வால் புரிந்து கொள்கிறார்கள்.
பிறர் அருகில் இருப்பதால் பேசத் துணியாத காதலர்களைப் பற்றிய பல பாடல்கள் குறுந்தொகையில்
உள்ளன. அதற்குப் பதிலாக, அவர்கள் கண்கள் சந்திக்கின்றன,
முகங்கள் மலர்கின்றன, சொற்கள் இல்லாமலே ஒருவருக்-கொருவர் எண்ணங்களைப் புரிந்து கொள்கிறார்கள். கண்கள் இதயத்தின் தூதுவர்கள்
என்பதை இப்பாடல்கள் மீண்டும் உணர்த்துகின்றன. அகநானூற்றில், "சொற்கள் சென்றடை-வதற்கு முன்பே இதயம் காதலரைச் சென்றடைகிறது"
என்ற கருத்து வருகிறது. அதாவது, காதலர்கள் இயல்பாகவே ஒருவரையொருவர்
புரிந்து கொள்வதால், பேச்சு என்பது கிட்டத்தட்ட தேவையற்றதாகி விடுகிறது.
கலித்தொகையில், சொற்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதற்கு வெகு காலத்திற்கு
முன்பே காதலர்கள் தங்கள் கண்களின் வழியாகவே 'பேசிக்கொண்டனர்'
என்று தலைவியின் தோழி அடிக்கடி குறிப்பிடுகிறார்.
கவிஞர் கண்ணதாசனை எடுத்துக்கொண்டால், 'சாரதா' திரைப்படத்தில் இடம்பெற்ற
அவரது “ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன?” பாடலில், பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது
ஏற்படும் மற்றொரு வகையான மௌனத்தைப் பற்றியும் அவர் பாடியுள்ளார், வழக்கமான கேள்வி-பதில் பார்மட்டில்:
"பெண்: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு
பெண்மையின் நிலை என்ன?
ஆண்:
மௌனம்!"
இன்னொரு பாடலிலும் இந்த மௌனத்தை, கடவுள் லெவெலுக்குக் கொண்டு செல்கிறார் கவிஞர் ("காதல் சிறகை காற்றினில்
விரித்து வான வீதியில் பறக்கவா?" (படம்: பாலும் பழமும்):
"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து
சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி!"
காதலர்கள் மீண்டும் இணையும்போது, அது அவர்களைப்
பேச்சற்றவர்களாக ஆக்குகிறது. நீண்ட பிரிவுக்குப் பிறகு காதலர்கள் முதலில்
தழுவிக்கொள்ளும்போதும், கண்ணீர்
பெருகி வார்த்தைகள் வராமல் போகும்போதும் ஏற்படும் அந்தத் தருணத்தை பல சங்கப்
பாடல்கள் விவரிக்கின்றன. கவி சக்கரவர்த்தி கம்பன் தனது கம்ப ராமாயணத்தில், ராமரும் சீதையும் பார்வைகளால் மட்டுமே அர்த்தங்களைப் பரிமாறிக் கொள்ளும்
பல காட்சிகளையும், பிரிவுக்குப் பிறகான சந்திப்பு பேச்சைக்
காட்டிலும் கண்ணீராலும் தழுவல்களாலும் அதிகம் குறிக்கப்படுவதையும் கொண்டு
வருகிறார். துன்பங்களுக்குப் பிறகு ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான
சந்திப்புகளின்போது, பேச்சைக் காட்டிலும் கண்ணீரும், புன்னகையும், தழுவல்-களுமே அதிக அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன என்பதை அவர் அழகாகச்
சித்தரிக்கிறார். "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என்று அருமையாகவும்
எளிமையாகவும் சொல்லியிருந்தார் கம்பர். நட்ரிணையில், பிரிவுக்குப்
பிறகான சந்திப்பை பல பாடல்கள் விவரிக்-கின்றன. உரையாடலைக்
காட்டிலும் அந்த மௌனமே அன்பை வலிமையாக வெளிப்படுத்துகிறது.
கவியரசர் எப்படி திரைப்படைப்புகளிலேயே அருமையான தமிழ் இலக்கிய கருத்துக்கள், மேலும் பக்தி இலக்கியம், உபநிஷத்து
எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்த்தி-ருக்கிறார் என்பதை சுருக்கமாகப்
பார்ப்போம். கம்பனின் 'வண்ணம் என்ற வார்த்தை உபயோகத்தை, கண்ணதாசன் எதனை விதமாக தன் பாடல்களில் கொண்டு வந்திருக்கிறார் என்பதை முன்பே
பார்த்தோம். உதாரணமாக, 'பால் வண்ணம் பருவம் கண்டு" பாடலிலும்
இன்னும் பிற படப் பாடல்களிலும். மேலும் "கண்டேன் சீதையை" என்கிற கம்பனின்
சாதுர்யமான வார்த்தைப் பிரயோகத்தை பல மேடை பேச்சுக்களில் கேட்டிருக்கிறோம். இதை கவியரசர்
"பொன் ஒன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை, என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா? பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?" என் பாட்டில் வைத்தார் (படம்:
படித்தால் மட்டும் போதுமா).
ஆழ்வார் மற்றும் ஆண்டாள் பாசுரங்களின் அழுத்தமான பாதிப்பில் கவியரசர்
"மல்லிகை முல்லை" பாடலில் (படம்:
அண்ணன் ஒருகோவில்), "சூடிக் கொடுத்தாள் பாவை
படித்தாள், சுடராக எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள்,
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்,கோபாலன் இல்லாமல் கல்யாணம்
வேண்டாள்" என்று வடித்தார். அப்படியே கண்ணனின் காதலிக்குப் 'பச்சை விளக்கு' (படம்) காட்டினார்: "குத்து விளக்கெரிய கூடமெங்கும்
பூ மணக்க, மெத்தை விரித்திருக்க மெல்லிடையாள் காத்திருக்க,
வாராதி-ருப்பானோ வண்ணமலர் கண்ணன் அவன்,
சேராதி-ருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை".
அதுபோல, "தோள் கண்டேன் தோளே கண்டேன்,
தோளில் இரு கிளிகள் கண்டேன், வாள் கண்டேன் வாளே
கண்டேன், வட்டமிடும் விழிகள் கண்டேன்" (படம்: இதய கமலம்)
என்ற பாடலில் கவி கம்பனின் "தோள் கண்டார் தோளே கண்டார், தொடுகழல் கமல மன்னர் தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டார்" பாட்டிலிருந்து
எடுத்தாண்டிருக்கிறார், கண்ணதாசன். தன் அறிவுத்தாய் ஆண்டாளின்
சொல்லைத் தட்டாமல் (படம்: தாய் சொல்லைத் தட்டாதே),
கண்ணதாசன் பாசுரத்தில் பாதிப்பில் எழுதியது இந்த பாடல்: "ஒருத்தி
மகனாய்ப் பிறந்தவனாம், உருவில் அழகாய் வளர்ந்தவனாம், ஒருத்தி மனதில் நிறைந்தவனாம், உயிரில் உயிராய்க் கலந்தவனாம்."
கண்ணதாசனுக்கு ஒரு மனம், அது பக்தியை காதலாக எளிமைப் படுத்தி
உருக வைப்பது, பாசுரங்களின் பாதையில் சென்று (படம்: அவளுக்கென்று
ஓர் மனம்): "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னை உள்ளமெங்கும்
அள்ளித் தெளித்தேன்." காதல் பாடல்களில் கடவுளைக் கலக்கும் கில்லாடித்தனம்,
கவி ஞானியின் கைவண்ணம். தன் ஆதர்ச கவி கம்பனின்
'சீதை நிலவை'ப் பார்த்து பாடும் காட்சியை
ரொம்ப பிரசித்தமான கொத்தவால் சாவடி பாடலில் "அத்திக்காய் காய் காய்" கொண்டு
வந்தார் கண்ணதாசன் (படம்: பலே பாண்டியா).
அப்படின்னா, எல்லாம் 'அட்டை காப்பியா' சார், என்று கேட்பவர்களும்
இருக்கிறார்கள். “அனுபவிக்கனும் ஆராய கூடாது!” ஒரு சினிமா தத்துவ ஞானி சொல்லியிருக்கிறார்! இதெல்லாம் காப்பி
அடிப்பது இல்லையா என்று கேட்டால், நம் பதில் கேள்வி: 'யாராவது குறுந்தொகை. குரள் அல்லது, கம்பனையும் ஆழ்வார்
பாசுரங்களையும் படிக்கிறீர்களா? இப்போதிய GenZ அந்தப் பக்கம் தலை வைத்துப் படு(படி)ப்பார்களா? படித்தால்
மட்டும் போதுமா? ஏதாவது புரியுமா? வாழ்க்கையின்
இயல்பாக, அதனை கோடி மக்களையும் ஞானம் எட்டுவது பின் எப்படி?
அப்போ இந்த 'எடுத்தாண்டு' எளிமைப் படுத்ததுதல் தப்பில்லையா என்று அப்பாவியாக கேட்டால், விளக்கமான பதில் இதோ:
யதேச்சையாக என் பழைய ஸ்கூல் காலேஜ் நாள் கதை எழுதும் நோட்டை நோண்டிக் கொண்டிருந்தபோது
கிடைத்த பொக்கிஷம் இது. சரியாக 15th ஆகஸ்ட் 1983 (43 ஆண்டுகளுக்குமுன்) எழுதிய 'வடிகால்' காலத்திய வரிகள் இவை: "ஒரு உண்மையை சொல்லட்டுமா?
இது எழுதப் படுவது நிச்சயம் யாருக்காகவும் அல்ல! எனக்காக மட்டுமே எழுதுகிறேன்.
காலத்தின் வீச்சால், என்னுடைய அருமையான-இளமையான அனுபவங்ககளில்
தூசி படிந்து மங்கி, என் மூளையின் ஞாபகப் பிரதேசத்திலிருந்து
மறைந்து விடுமுன், வார்தைகளாக்கவே எழுதுகிறேன். இதே போல் 22
வருடம் கழித்து, 44-ஆவது வயதிலோ, அல்லது 66-ஆவது வயதிலோ படித்துப் பார்த்து, நினைவுகளை
புதுப்பித்து, நாளங்களில் புது ரத்தம் பாய்ச்சிக்கொள்ளவே,
சிம்பிள் ஆக சொல்லப் போனால், வயதாகிப் போன மனதையும்
உடலையும் பிற்காலத்தில் overhaul செய்து கொள்ளவே இது. (ஆச்சரியமாக-மிக அதிசயமாக இந்த நோட்டை திறந்து படிக்கிற இப்போது எனக்கு வயது 66!)"
நிறைய லைப்ரரி புத்தகங்கள் படித்து எழுதும் ஆர்வம் தலைகேறியபோது, 'வடிகால்' கையெழுத்துப் பத்திரிகையில்
என் ஒரு விஞ்ஞான சிறுகதைக்கு (பின், Rs 250 இக்கதைக்கு 'மயன்' பத்திரிக்கையில்
மூன்றாம் பரிசு வேறு கிடைத்தது!) ஒருவர் Letters to எடிட்டர்-ல்
'நான் சுஜாதா பாணியை காப்பி அடிப்பதாக கிண்டல் செய்திருந்தார்.
'காப்பி' என்பதை பற்றிய என் அன்றைய வியாக்கியானம்
இது: "இருபத்தி-யிரண்டு வருடம் முன்பு ஜனித்த போது ரத்த
சிவப்பாக, மெல்லிய தளிர் போன்ற தலைமுடியோடு, பிஞ்சு போல் சுருண்டுகொள்ளும் விரல்களோடு அம்மாவின் அணைப்பில் துணிச்சுருளுக்குள்
இருந்திருப்பேன். என் சின்னஞ்சிறு விழிகள் அம்மாவின் அலை பாயும் விழிகளைத்தவிர வேறு
எதை ஆச்சரியமாகப் பார்த்திருக்கும்? 'டேய் இங்க பார்டா!'
என்ற அப்பாவின் கட்டைக்குரலும் பட்டுக் கன்னத்தில் கைவிரல் உறுத்தலாக
குறுக்கிட்டபோது... 'டேய் கண்ணா, அங்க பாருடா, அப்பா பாருடா!' என்று அன்பாய் சொல்லி என் கண்களிலிருந்து
அப்பாவின் முகத்துக்கு தன் பார்வையால், தலையை சீராக ஆட்டி அம்மா
கோடு வரைந்து, கழுத்தை பூவாய் திருப்பி, என் பார்வையின் பரிமாணத்தை அதிகரித்து, அம்மாவைக் 'காப்பி' அடித்துத் தான் நான் என் அப்பாவையே கண்டேன்!
அம்மாவும் அப்பாவும் பேசுவதை 'காப்பியடித்துதானே' நான் பேசவே ஆரம்பித்தேன். என் அண்ணன்
கவிஞர் ஜெயலன் எழுதுவதை பார்த்து 'காப்பி' அடித்திருக்காவிட்டால், இப்படி இப்போது பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்க முடியுமா? உலகில் பல விஷயங்களையும் மற்றவர்களை ‘பார்த்து,
செய்து’ பழகித்தான் மனிதன் கற்றுக் கொள்கிறான்
இல்லையா? இசையில் 'காப்பி'யடிப்பதாக சொல்லப்படுகிற வேதா,
சங்கர்-கணேஷ், இலக்கியத்தில் காப்பி அடித்த கண்ணதாசன்
போன்றவர்களும்" நம் அனைவருக்கும் இசை/அறிவை
'சொல்லிக் கொடுத்தார்களா' இல்லை
காசுக்காக 'காப்பி' மட்டும் அடித்தார்களா?
சில தசாப்தங்களுக்கு முன்பு, பல குழந்தைகளைக் கொண்ட பெற்றோரைப் பார்த்து, "உங்களிடம்
என்ன ஜெராக்ஸ் மெஷினா இருக்கிறது?" என்று கேட்டு மக்கள்
கேலி செய்வதுண்டு. வேடிக்கை ஒருபுறம் இருக்க, ஒரு தனி உயிரணுவிலிருந்தே
(cell) நாம் அனைவரும் 50 டிரில்லியன் உயிரணுக்களைக்
கொண்ட ஒரு பெரிய 'தோல் பையாக' மாறியிருப்பது
எப்படி என்று சற்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். அது உயிரணுப் பெருக்கத்தின் (cell
copying) மூலமாகவே நிகழ்ந்தது. சொல்லப்போனால், வெளிப்படாத, எல்லையற்ற, பெயரிட
முடியாத, அந்த ஒரே மூலத்திலி-ருந்துதான்
(ONE Supreme Original) ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும்
'எளிமையான நகல்களாக' உருவானதாக இந்தியாவின்
மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆன்மீக ஞானிகள் உறுதியாகக் கூறுகின்றனர்.
பாட்டிமார்கள் சொன்ன அல்லது பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் படித்த 'தொப்பி விற்பவரும் குரங்குகளும்' என்ற கதை உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். அந்தக் கதை உண்மையில் எதைச்
சுட்டிக்காட்டுகிறது என்றால், நம் முன்னோர்களான குரங்குகள்,
அவற்றின் பரிணாம வளர்ச்சி-யின்போது மூளையின் முன்பகுதிப்
பகுதியில் (Pre-Frontal Cortex) 'கண்ணாடி நரம்பணுக்களை'
(mirror-neurons) முதலில் உருவாக்கிக்கொண்டன. மற்றவர்களின் குறிப்பிட்ட
செயல்-களையும் நடத்தைகளையும் உற்றுநோக்கிப் பின்பற்றுவதற்கு இந்த
நரம்பணுக்கள் உதவின. குரங்கு இனத்திலிருந்து மனிதர்களாக நாம் பரிணமித்தபோது,
மனிதர்களிடமே அதிக அளவிலான கண்ணாடி நரம்பணுக்கள் இருப்பது அறிவியல் பூர்வமாக
நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் மனிதர்-களால் சமூகங்களாக வாழவும், நெருப்பைச் சுற்றி அமர்ந்து
உணவருந்தும்போது தங்கள் அனுபவ அறிவை கதைகள் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் முடிந்தது.
இன்று நம்மிடம் நூலகங்கள், கூகுள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும்
செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவை உள்ளன; இதன்
மூலம் மனிதகுலத்தின் அனைத்து உறுப்பினர்களும் உலகத்தைப் பற்றிய தங்கள் புரிதலை 'நகலெடுத்து' (copying) மேம்படுத்திக் கொள்ள முடிகிறது.
"சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு" (Sapiens:
A Brief History of Humankind) என்ற தனது புத்தகத்தில், ஆசிரியர் யுவால் நோவா ஹராரி, ஹோமோ எரெக்டஸ், ஹோமோ எர்காஸ்டர் மற்றும் நியாண்டர்தால் போன்ற நம் முன்னோர்களின் கதைகள் மூலம்
மனித வளர்ச்சியின் வரலாற்றை விவரிக்கிறார். மானுடவியல், வரலாறு,
புவியியல், உயிரியல், சமூகவியல்
மற்றும் பல துறைகள் வழியாக நம்மை அழைத்துச் சென்று, தனது சுவாரஸ்யமான
கதை சொல்லும் பாணியில், நாம்—அதாவது ஹோமோ சேப்பியன்ஸ்—மட்டும்
ஏன் ஆதிக்கம் செலுத்தும் வெற்றிகரமான இனமாக உருவெடுத்தோம் என்பதை யுவால் நிரூபிக்கிறார்.
நெருப்பைக் கண்டுபிடித்தது, விலங்கினங்களுடனான போராட்டங்கள்,
புரட்சிகரமான விவசாய மற்றும் தொழிற்புரட்சிகள், கட்டுக்கதைகள், வதந்திகள் மற்றும் முரண்பாடுகள் என மனிதனின்
பல்வேறு பரிமாணங்களை இது உள்ளடக்கியது. நீண்ட கால வரலாற்றை ஒரே தொகுப்பில் பதிவு செய்வதற்கான
ஒரு உண்மையான முயற்சியாக இது அமைந்துள்ளது.
மனித அனுபவங்கள் மூலம் திரட்டப்பட்ட அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவதன் மூலமும், மற்ற உயிரினங்களை விட நாம் வெற்றிபெற முடிகிறது என்பதே அவர் முன்வைக்கும் அடிப்படைக்கருத்து.
இன்று நாம் அடைந்துள்ள நிலையும், நாம் உருவாக்கியுள்ள அனைத்துத்
தொழில்நுட்ப அதிசயங்-களும் நம் முன்னோர்களிடமிருந்து நாம் 'நகலெடுத்ததன்' (copying) விளைவே ஆகும். இப்போது சொல்லுங்கள்,
கவிஞானி கண்ணதாசன் செவ்வியல் தமிழ் இலக்கியங்களின் ஞானத்தை எளிமைப்படுத்தி,
மயக்கும் இசையுடன் கூடிய ஈர்க்கக்கூடிய திரைப்பட ஊடகத்தின் மூலம் நமக்கு
வழங்கியிருக்கா விட்டால், உலகம் முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்தத்
தமிழ்ச் சமூகமும் அந்தச் சிக்கலான பழைய தமிழ் இலக்கியங்களைத் தனித்தனியாகப் படித்து
அவற்றைப் புரிந்துகொண்டிருக்க முடியுமா?
"ஒரு புத்தகத்திலிருந்து நகலெடுத்தால் அது 'திருட்டு'
(plagiarism); ஆனால் பல புத்தகங்களிலிருந்து நகலெடுத்தால் அது 'ஆய்வு' (research)!" என்று ஒரு அறிஞர் வேடிக்கையாகக்
கூறினார். வேடிக்கை ஒருபுறம் இருக்க, சிம்பன்சிகளிடம் 'கண்ணாடி நரம்பணுக்கள்' (mirror neurons) இருப்பதும்,
மரபணுக்கள் மூலம் செல்கள் இரட்டிப்பாவதும் சமீபத்திய நரம்பியல் அறிவியல்
ஆய்வுகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, 'மூளையில்
உள்ள கண்ணாடிகள்' (Mirrors in the Brain) என்ற புத்தகம்,
கண்ணாடி நரம்பணுக்கள் பற்றிய ஒரு திட்டவட்டமான நூலாகும். மக்காக் குரங்குகளில்
கண்ணாடி நரம்பணுக்களைக் கூட்டாகக் கண்டுபிடித்த நரம்பியல் விஞ்ஞானிகளான ஜியாகோமோ ரிசோலாட்டி
மற்றும் கொராடோ சினிகாக்லியா ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூல், இந்த
நரம்பணுக்கள் குரங்குகளில் முதன்முதலில் எவ்வாறு அடையாளம் காணப்பட்டன என்பதையும்,
அவை பின்பற்றுதல், மொழி, பச்சாதாபம் மற்றும் மனித பரிணாம வளர்ச்சிக்கு என்ன அர்த்தம் தரக்கூடும் என்பதையும்
விளக்குகிறது.
'அனுபவித்தல் காரணி' (The Imitation Factor) என்ற புத்தகத்தின்
ஆசிரியர் லீ ஆலன் டுகட்கின், மனிதர்கள் மற்றவர்களைக் கவனிப்பதன்
மூலம் எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துகிறார். அவர் குழந்தைகளின்
பின்பற்றுதல், சமூகக் கற்றல் மற்றும் நகலெடுக்கும் நடத்தைக்குப்
(copying behaviour) பின்னால் உள்ள நரம்பியல் பற்றி விவாதிக்கிறார்,
மேலும் பரந்த சான்றுகளில் கண்ணாடி நரம்பணு ஆராய்ச்சியையும் உள்ளடக்குகிறார்.
நமக்கு ஏற்கனவே தெரிந்த, வேடிக்கை விரும்பும் நரம்பியல் விஞ்ஞானி
டாக்டர் வி. எஸ். ராமச்சந்திரன், தனது 'கதை சொல்லும் மூளை' (The Tell-Tale Brain) என்ற புத்தகத்தில்
கண்ணாடி நரம்பணுக்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அத்தியாயத்தை ஒதுக்கியுள்ளார். அவை மனித
கலாச்சாரம், மொழி மற்றும் நாகரிகத்தில் முக்கிய பங்கு வகித்தன
என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஸ்டீவ் ஸ்டீவர்ட்-வில்லியம்ஸ் எழுதிய 'பிரபஞ்சத்தைப் புரிந்துகொண்ட குரங்கு' (The Ape
That Understood the Universe) என்ற மற்றொரு சுவாரஸ்யமான புத்தகம்,
முதல் இனங்களில் பின்பற்றுதலும் கவனித்தல் வழிக் கற்றலும் எவ்வாறு பரிணமித்தன
என்பதை விளக்குகிறது. அவர் கண்ணாடி நரம்பணுக்களை பரந்த சூழலில் உள்ளடக்குகிறார். பரிணாம
உளவியல். "தி கல்ச்சுரல் அனிமல்" என்ற புத்தகத்தின்
ஆசிரியர் ராய் எஃப். பாமெய்ஸ்டர், பிரதிபலிப்பு நரம்பணு ஆராய்ச்சி
உட்பட, பின்பற்றுதலுக்கு அடிப்படையான மூளை இயக்கமுறைகளைப் பற்றி
விவாதிக்கும்போது, மனிதர்கள் மற்றவர்களைப் பார்த்து, அவர்களிடமிருந்து நகலெடுப்பதன் (duplicating) மூலம் சமூக
ரீதியாக எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள் என்பதை விவரிக்கிறார்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதில் ஏன் விதிவிலக்காகச் சிறந்தவர்களாக
ஆனார்கள் என்பதை விளக்கும் வில்லியம் வான் ஹிப்பலின் "தி சோஷியல் லீப்" என்ற
புத்தகம், பின்பற்றுதல், பச்சாதாபம் மற்றும் அது தொடர்பான நரம்பியல் தலைப்புகளைப் பற்றிய விவாதங்களை
உள்ளடக்கியுள்ளது. மற்றவர்களைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சாத்தியமான உயிரியல் அடிப்படையாக
பிரதிபலிப்பு நரம்பணுக்களைச் சுட்டிக்காட்டி, ஃபிரான்ஸ் பி. எம்.
வாலின் "தி ஏஜ் ஆஃப் எம்பதி" என்ற தலைப்பு, மனிதர்களிடம்
உள்ள பச்சாதாபத்தை விளக்க சிம்பன்சிகள் மற்றும் குரங்குகளின் ஆய்வுகளைப் பயன்படுத்துகிறது.
இறுதியாக, முன்னோடியும்
புகழ்பெற்ற ஆங்கில இயற்கை-வாதியுமான சார்லஸ் டார்வினின்
"தி டெசென்ட் ஆஃப் மேன்" என்ற புத்தகம், மனிதர்களுக்கும்
மற்ற முதல் உயிரினங்-களுக்கும் இடையிலான தொடர்ச்சியைப் பற்றி
விவாதிக்-கிறது; இந்தக் கருத்து பின்னர்
பிரதிபலிப்பு நரம்பணு ஆராய்ச்சி மூலம் ஆராயப்பட்டது. இந்தப் புத்தகங்கள் அனைத்தும்,
குரங்குகள், சிம்பன்சிகள், மனிதக் குரங்குகள் மற்றும் மனிதர்கள் மற்றவர்களைக் கவனித்து, அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் எவ்வாறு திறன்களைப் பெறுகிறார்-கள் என்பதை விளக்குவதோடு, பிரதிபலிப்பு நரம்பணுக்கள்
பின்பற்றுதலுக்கு எவ்வளவு பங்களிக்கின்றன என்பது குறித்த சான்றுகளையும், நடந்துகொண்டிருக்கும் அறிவியல் விவாதத்தையும் விவாதிக்கின்றன.
போதும் சார் போதும், ஒரு பெரிய லைப்ரரியையே கொண்டு அடுக்கிட்டீங்க! ராமன்
பதினாலு வருடம் காட்டில் இருந்தார் என்று தெரியும். நானும் பதினாலு வருஷம் அந்த காடுகளின்
மரங்களை அழித்து அச்சிடப்பட்ட புத்தகங்களைக் கொண்ட லைப்ரரியை நிர்வகித்து வந்தேன் (முப்பது வருடம் முன்பு மும்பை என்கிற கான்கிரீட் jungle-ல்!). அதான் புத்தகமா கொண்டு இறக்கிட்டேன், மேலே படிக்கிற
ஆர்வமுள்ளவர்-களுக்காக. அது சரி, வாட்ஸப்
தாண்டி ஏதாவது இளைய தலைமுறை படிக்கிறதா என்ன? இங்கே முதிய ஜெனெ-ரேஷனும் மொபைலய்தான் நோண்டிக்
கொண்டிருக்-கிறார்கள். யார் இவ்வளவு படிப்பாங்க?
அதானே, சரஸ்வதி யாருக்கு வேணும்? உலகமே லட்சுமி பின்னாடிதான் ஓடிட்டு இருக்கு!
தவிர, இதெல்லாம் வெள்ளையா இருக்கிறவன்
எழுதினது. நம்மூர் சரக்கு ஏதாச்சும் உண்டா என்று நீங்கள் கேட்டால், இருக்கு. "ஸ்டோரீஸ் அட் வொர்க்" என்ற தனது
புத்தகத்தில், இந்திய எழுத்தாளர் இந்திரனில் சக்ரவர்த்தி,
பின்வரும் உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்: "...கற்றல்,
தொடர்பு கொள்ளுதல், பச்சாதாபம் மற்றும் மொழி போன்ற
மிக அடிப்படையான மனிதத் திறன்களில் 'கண்ணாடி நரம்ப-ணுக்கள்' (mirror neurons) ஈடுபட்டுள்ளன. அதே செயலை விவரிக்கும்
வார்த்தைகளை நாம் படிக்கும்போது அல்லது கேட்கும்போது கூட கண்ணாடி நரம்பணுக்கள் தூண்டப்
படுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, நாம் அந்தச் செயலைச்
செய்தாலும், அது செய்யப்படுவதைப் பார்த்தாலும் அல்லது அதைப் பற்றிக்
கேட்டாலும், அதே நரம்பணுக்கள்தான் ஒளிர்கின்றன. இது, ஒரு செயலைப் பற்றிக் கேட்கும்போதும், அதே செயலைச் செய்யும்போதும்
நாம் ஒரே மாதிரியாக உணர வழிவகுக்கிறது. எனவே, ஒருவர் தான் அனுபவித்த
வலியை விவரிக்கும்போது, நாமும் அதேபோல உணர்கிறோம். உதாரணமாக, ஒருவர் ஒரு சோகக் கதையைச் சொல்லும் போது, நாம் சோகமாக உணர்கிறோம்.
ஒருவர் ஒரு திகில் கதையைச் சொல்லும்போது, நாம் பயப்-படுகிறோம் (‘காதலிக்க நேரமில்லை’
படத்தில் நாகேஷ் பாலையாவிடம் ஜாலியான திகில் கதை சொன்னது நினைவிருக்கிறதா?). இந்த உணர்வு பச்சாதாபத்திற்கு (empathy) வழி வகுக்கிறது."
எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அனைவரும் குரங்குகளிலிருந்து வந்தவர்கள்,
எனவே யூகிக்க வேண்டிய அவசியமில்லை: "குரங்கு பார்க்கும்,
குரங்கு செய்யும், குரங்கு உணரும்"
(“Monkey see, Monkey do, Monkey feel”).
'ஓகே சார் ஒத்துக்குறோம், நாமெல்லோருமே காப்பிதான். அதுக்காக,
என்ன சார், ஒரேடியா கண்ணதாசன் பாட்டுன்னு சொல்லி
hype பண்ணுறீங்களே, வெறும் சினிமா பாட்டுதானே'
என்று நினைப்பவர்களுக்கு ஒரு யோசனை: ஒரு பழைய படத்தை, எல்லா பாட்டையும் உருவி விட்டு (டோட்டல் ஸ்கிப் பண்ணி) பாருங்கள்,
ஒரு எலும்பு கூடு தான் தெரியும். நான் பார்த்தேன், "இதய கமலம்" படத்தை. வறட்சியானதும், சலிப்பூட்டுவதுமான
அந்த வெறும் எலும்புக்கூடு போன்ற கதைக்கு, கண்ணதாசனின் தேன் போன்ற
இனிமையான பாடல்களும் அவற்றின் அபாரமான இசையும்தான் உயிர், சதை,
ரத்தம் மற்றும் உணர்வுகளை ஊட்டி உயிர்ப்பிக்கின்றன.
மேலும் கவிஞானியின் மனதை வருடும் வித்தைகளை அவர் பாடல்கள் மூலம் பார்ப்போமே...அடுத்த
எபிசோடில்..
-ஜேயெஸ் (www.jeyes.in)
Comments
Post a Comment