கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-30)

 

கடந்த அத்தியாயத்தில், குடும்பங்களில் குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோரிடையே ஏற்படும் மோதல்களின் உளவியல் ரீதியான தாக்கம் குறித்தும், சிறு குழந்தைகளை விழிப்புணர்வுடன் வளர்ப்பதற்கான வழிகள் குறித்தும் நாம் பார்த்தோம். ஜேம்ஸ் ஜே மேப்ஸ் தனது "குவாண்டம் லீப் திங்கிங்: ஆன் ஓனர்ஸ் கைடு டு தி மைண்ட்" என்ற புத்தகத்தில், குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர்களுக்கு இடையே ஏற்படும் விமர்சனங்களால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டுகிறார்: "விவேகமற்ற பெற்றோர்கள் (அல்லது மேலாளர்கள்-managers in the work place) விமர்சனத்தைப் பயன்படுத்தி (using criticism) மற்றவர்களைக் கையாளுவதில் கைதேர்ந்தவர்களாகி விடுகிறார்கள். அவர்கள் குழந்தை அல்லது ஊழியரின் படைப்பாற்றல் (creativity) உணர்வைத் தடுக்கிறார்கள். மறுபுறம், ஆக்கப் பூர்வமான ஆலோசனை - அதாவது அக்கறையுடனும் அன்புடனும் வழங்கப்படும் விமர்சனம் - ஆன்மாவையும் பெர்சோனாலிட்டியையும் சிதைக்காமல் பாதுகாக்கிறது. அப்போது விமர்சனம், அழிவுக்கான ஆயுதமாக இல்லாமல், கற்றலுக்கான ஒரு கருவியாக மாறுகிறது. நான் கல்வி முறைக்கு பொறுப்பாக இருந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் காட்சிப்படுத்துதல் (visualization) கற்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவேன். குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும், தங்கள் யதார்த்தத்திற்கு பொறுப்பேற்கவும் நான் கற்பிப்பேன்." 

ஊக்கமளிக்கும் எழுத்தாளர் ஜிக் ஜிக்லர் தனது "ரைசிங் பாசிட்டிவ் கிட்ஸ் இன் எ நெகட்டிவ் வேர்ல்ட்" என்ற புத்தகத்தில், பெற்றோர் வளர்ப்பில் உள்ள ஆண் ஆதிக்க மனப்பான்மையின் புதிய பரிமாணத்தை இந்த விவாதத்திற்கு எடுத்துச் செல்கிறார். இருவரும் வேலைக்குச் செல்லும் தம்பதியினரின் தற்போதைய நிலைமையையும், அதனால் எழும் சிக்கல்களையும் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறார்: "கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், இரவு உணவு தயாரித்தல், சமையலறையை சுத்தம் செய்தல், குழந்தைகளுக்கு வீட்டுப் பாடத்தில் உதவுதல் மற்றும் அவர்களை தூங்க வைப்பது போன்றவை மனைவி அல்லது தாயின் கடமை என்று பல ஆண்கள் நம்பும் வகையிலேயே வளர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் இரட்டை சுமையைச் சுமக்கிறார்கள்: ஒன்று, வீடு மற்றும் குடும்பத்தைப் பராமரிக்கும் பணி; மற்றொன்று, ஊதியத்திற்காக செய்யும் வெளியுலக வேலை. 

மறுபுறம், பெரும்பாலான ஆண்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், வீட்டு வேலைகளிலும் குழந்தைகளைப் பராமரிப்பதிலும் ஓரளவு உதவுவதோடு தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். உதவுவது பயனுள்ளது தான் என்றாலும், அது முழுமையாக செயல்படுவதில் இருந்து மாறுபட்டது; அது குடும்பத்தின் அடிப்படை பொறுப்பைத் தொடர்ந்து பெண்களிடமே விட்டுவிடுகிறது. கவலைகள், மன உளைச்சல், திட்டமிடல், நிர்வாகம் மற்றும் செயல்களைச் செய்து முடித்தல் என அனைத்தும் அவர்களையே சாரும். இதை எத்தனை ஆண்கள் புரிந்து கொள்கிறார்கள்? 

கைகளைப் பிடித்துக்கொள்வது, அன்பை வெளிப்படுத்துவது மற்றும் பாலியல் நோக்கமற்ற அரவணைப்பு போன்றவற்றின் மூலம் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையான அக்கறையுடனும் பாசத்துடனும் நடந்துகொண்டால், குடும்பம் என்பது அன்பான ஒரு பிணைப்பு என்பதையும், தனக்கென ஒரு துணையை அமைத்துக் கொள்வது எவ்வளவு சிறந்தது என்பதையும் குழந்தைகள் மிக இளம் வயதிலேயே கற்றுக் கொள்கிறார்கள். அன்பான பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் கருணையுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது, ​​எதிர் பாலினத்தவரிடம் எத்தகைய மனப்பான்மையுடனும் நடத்தையுடனும் இருக்க வேண்டும் என்பதை வேறு எந்த முறையை விடவும் சிறப்பாகக் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்." 

எப்படியாயினும், பல குழந்தைகளை வளர்ப்பதில் நம் பெற்றோர் படும் திண்டாட்டங்களை பார்த்தே நாம் அனைவரும் வளர்ந்துள்ளோம் என்பதுதான் உண்மை. நமது கடந்த கால மனப்பதிவுகள் மற்றும் நடத்தை கட்டமைப்பு-களிலிருந்து விடுபட்டு, குடும்பத்தில் நிகழும் இந்த நாடகத்தனமான மோதல்களை என்றென்றைக்குமாக நிறுத்துவது எப்படி? ஆலிஸ் மில்லர் தனது "The Drama of the Gifted Child" (திறமைமிக்க குழந்தையின் நாடகம்) என்ற நூலில் இதற்கான வழியைக் காட்டுகிறார்: கடந்த காலத்தின் அறியாத பலிகடாக்களாக இருக்கும் நிலையிலிருந்து மாறி, நமது கடந்த காலத்தை பற்றி விழிப்புணர்வுடன் இருந்து அதனோடு இணைந்து வாழக்கூடிய பொறுப்புள்ள தனி நபர்களாக நம்மை மாற்றிக் கொள்வதன் மூலமே நாம் விடுதலை பெறுகிறோம். பெரும்பாலான மக்கள் இதற்கு நேர்மாறாகவே செயல்படுகிறார்கள். கடந்த காலம் தங்கள் தற்போதைய செயல்களைத் தொடர்ந்து தீர்மானிக்கிறது என்பதை உணராமல், தங்கள் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வதை தவிர்க்கிறார்கள். அக்கறையுள்ள பெற்றோ-ரையோ அல்லது பராமரிப்பாளர்களையோ கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பெரியவரால் தனது உணர்வுகளை முழுமையாக உணர முடியும். 

குழந்தைப் பருவத்தில் துன்புறுத்தப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் இந்த திறனை இழக்க நேரிடுகிறது; இதனால் அவர்கள் எதிர்பாராத உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள். வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்த பெற்றோரின் நடத்தை முறைகளை மீண்டும் பின்பற்றுவதில் இருந்து, வெறும் மன உறுதியைக் கொண்டு மட்டும் நம்மை விடுவித்துக் கொள்ள முடியாது. அவர்கள் நமக்கு இழைத்த துன்பத்தை முழுமையாக உணர்ந்து ஒப்புக் கொள்ளும் போது மட்டுமே நாம் அதிலிருந்து விடுபடுகிறோம். நியாயமான உணர்ச்சிகளை உணர்வுபூர்வமாக அனுபவிப்பது விடுதலை அளிப்பதாகும்; இது உடலில் நீண்ட காலமாகத் தேங்கியிருக்கும் இறுக்கத்தை வெளியேற்றுவது மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் குறித்த யதார்த்தத்தை நமக்குக் காட்டி, பொய்கள் மற்றும் மாயைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது. 

இதிலிருந்து பெறப்படும் தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால், மக்கள் தங்கள் வாழ்க்கையை சரியாக அமைத்து கொள்ள தங்கள் உணர்வுகளை அணுகும் திறன் பெற்றிருக்க வேண்டும். பகுத்தறிவுடன் செயல்பட, அவர்களுக்குத் தங்கள் உண்மையான உணர்வுகளுடனும், தங்கள் உண்மையான சுயத்துடனும் தொடர்பு தேவைப்படுகிறது. ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்லலாம்: பல சிகிச்சையாளர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் ஏற்கனவே அறிந்திருக்கும் ஒரு விஷயத்தை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. அதாவது, பகுத்தறிவு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடு என்பது நமது அறிவுசார் திறன்களின் சீரான செயல்பாட்டை மட்டுமல்லாமல், நமது உண்மையான உணர்வுகளை நாம் எந்த அளவிற்கு அணுகுகிறோம் என்பதையும் சார்ந்திருக்கிறது. தொழில்நுட்பத்தால் மூளையின் இந்தச் செயல்பாட்டை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. எனவே, நமது உணர்வுகளைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவேயாகும்.” 

குழந்தைகள் வளரும் போது குடும்பத்தில் குதூகலம் பொங்கி வழிகிறது.  மிட்ச் ஆல்பம் (Mitch Albom) தனது "Tuesdays with Morrie: An old man, a young man, and life's greatest lesson" என்ற புத்தகத்தில், "மற்றொரு மனிதருக்கு முழுப் பொறுப்பேற்கும் அனுபவத்தையும், ஆழமான முறையில் அன்பு செலுத்தவும் பிணைப்பை ஏற்படுத்தவும் கற்றுக் கொள்ளவும் நீங்கள் விரும்பினால், உங்களுக்கு குழந்தைகள் வேண்டும்" என்று கூறுகிறார். ஆனால் அதுவே, வளர்ந்து பெரியவர்களாகி, 'தனக்கென்று ஒரு பெர்சோனாலிட்டி' வந்து,  விருப்பு வெறுப்புகள் தோன்றி, 'என் வழி தனி வழி' என்று பெற்றோரை (கூட்டை) விட்டு 'பறந்து/பிரிந்து போகும்போது, புலம்பலோ புலம்பல்தான். கவி ஞானி முன்பே பொட்டில் அறைந்து சொன்ன "மனித வாழக்கையில்  யாவுமே மனதினால் வந்த நோயடா" என்ற மகா பெரிய தத்துவத்தை "அண்ணன் என்னடா, தம்பி என்னடா" பாட்டில் (படம்: பழனி) பார்த்தோம். 

"இவ்வுலகின் எதிர்காலத்தை காண விரும்பினால், ஒரு குழந்தையின் கண்களைப் பாருங்கள்" என்பது ஒரு புகழ்பெற்ற பொன்மொழி. ஆனால், தங்கள் சொந்தக் குழந்தைகள் 'தங்கள் எதிர்காலத்தை' வீட்டை விட்டு வெளியே தேடும்போது, ​​மனிதப் பெற்றோர்கள் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளத் திணறுகிறார்கள்; மாறாக, 'சிந்தனைத் திறன் அற்றவை' என்று கருதப்படும் பறவைகள், தேனீக்கள், விலங்குகள் மற்றும் மீன்கள் போன்றவை, வாழ்வின் இயல்பையும் அடுத்த தலைமுறையின் பரிணாம வளர்ச்சியையும் உணர்ந்து, அதை எளிதாக ஏற்றுக் கொள்கின்றன. வாழ்க்கையின் சவால்களை தாங்களே எதிர்கொள்ளும் வகையில் ஆரம்பக்கட்டத்திலேயே அவற்றை வலிமைப்படுத்துகின்றன. மனிதர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை சுயசார்பு கொண்டவர்களாக மாற்ற 18 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதும், நண்பர்கள், பள்ளி மற்றும் சமூகத்தின் தாக்கத்தால் முழு வளர்ச்சி அடைந்த ஒருவராக அவர்கள் வெளியே செல்லும் போது பெற்றோர்கள் வேதனைப்படுகிறார்கள் என்பதும் ஆச்சரியமளிக்கும் விஷயமாகும். குறிப்பாக நம் கவனத்தை ஈர்க்கும் வரிகள் இவைதான்: 

"தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா

சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தம் என்பதும் ஏதடா?

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா

கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா?

பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா..

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா!" 

ஆனால் இந்த வரி கவிஞரின் குசும்பு மட்டுமல்ல, பிராக்டிக்கல் உண்மையும் கூட: "வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் வருந்தவில்லையே தாயடா!" கூட்டை விட்டு பறக்கும் குஞ்சுகளுக்காக பெற்றவள் வருந்துவதை விட, தகப்பன் பண்ணுகிற அலம்பல் புலம்பல் ஜாஸ்தி. கண்ணதாசன் அதையும் படம் பிடித்திருக்கிறார் தன் பாடல்களில் (படம்: எங்க ஊர் ராஜா): 

"யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க

என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு

பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா

பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா

சோதனையைப் பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக

நினைத்தால் முடிப்பேன் சரியாக

நீ யார் நான் யார் போடா போ

ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்

தேடிவரும், காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடிவரும்!" 

கவிஞானியின் தனித்தன்மை, படு சோகமான பாடலிலும் கடைசி சரணத்தில் நம்பிக்கை வரிகளை போடுவார். "உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!" என்ற மகாகவி பாரதியாரிடம் கடன்வாங்கி பாடலை தொடங்கி, கண்ணதாசன் பிள்ளைகள் வீட்டைப் பிரிந்தபின் தலைவியிடம் சரணாகதியாகி பாடுகிற தலைவனுக்கு வரிகள் தந்து வருந்த வைக்கிறார் (படம்: வியட்நாம் வீடு): 

"ஆல‌ம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன

வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

 

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும்

பிள்ளை குலமடியோ என்னை பேதைமை செய்ததடி

பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு

என் தேவையை யார் அறிவார்

உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்!" 

சர்வதேச அளவில் புகழ் பெற்ற மனநல மருத்துவரான விக்டர் இ. ஃபிராங்கிள், நாஜி மரண முகாம்களில் பல ஆண்டுகள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார். அந்தத் துயர அனுபவங்களின் ஊடாகவும், ஒரு வகையில் அவற்றின் காரணமாகவும், அவர் 'லோகொதெரபி' (logo therapy) எனப்படும் உளவியல் சிகிச்சைக்கான ஒரு புரட்சிகரமான அணுகுமுறையை உருவாக்கினார். வாழ்வின் அர்த்தத்தை தேடுவதே மனிதனின் முதன்மையான உந்துசக்தி என்பது அவரது கோட்பாட்டின் மையக் கருத்தாகும். "Man's Search for Meaning" (வாழ்வின் அர்த்தத்தை தேடும் மனிதன்) என்ற தனது நூலில் விக்டர் இ. ஃபிராங்கிள் இவ்வாறு கூறுகிறார்: "ஒரு மனிதனின் துயரம் வாயுவின் நடத்தையை போன்றது. ஒரு காலி அறைக்குள் குறிப்பிட்ட அளவு வாயு செலுத்தப்பட்டால், அந்த அறை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், வாயு அதை முழுமையாகவும் சீராகவும் நிரப்பிவிடும். அதுபோலவே, ஒரு மனிதனின் துயரம் பெரியதோ அல்லது சிறியதோ எதுவாக இருந்தாலும், அது அவனது ஆன்மாவையும் உணர்வுபூர்வமான மனதையும் முழுமையாக ஆக்கிரமித்து கொள்கிறது. எனவே, மனிதத் துயரத்தின் 'அளவு' என்பது முற்றிலும் சார்புத்தன்மை வாய்ந்த ஒன்றாகும்." 

‘வளர்த்த/வளர்ந்த பிள்ளைகளே பெற்ற பெரிசுகளை முதியோர் இல்லத்தில் தள்ளி விடும் இந்த காலத்தில், சிறிய குழந்தைகளை கையில் மொபைலை திணிக்காமல், 'பொறுப்புள்ளவர்களாக' எப்படி சார் வளர்க்க முடியும்?’ ஸ்டீவ் பிடால்ஃப் (Steve Biddulph) எழுதிய "The Secret of Happy Children" (மகிழ்ச்சியான குழந்தைகளின் ரகசியம்) என்ற புத்தகம், பச்சிளம் பருவம் முதல் பதின்வயது வரை பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தில் உங்களுக்கு வழிகாட்டுகிறது. ஒரு பெற்றோராக உங்களை நீங்களே முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளவும் – அதாவது வலிமை, அன்பு, உறுதியான நிலைப்பாடு மற்றும் நிம்மதியான மனநிலை ஆகியவற்றுடன் இருக்கவும் – இது ஊக்கமளிக்கும் ஒரு நூலாக பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது, ​​பழைய எதிர்மறையான அணுகுமுறைகளைக் கைவிட்டு, உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவும், உங்கள் சொந்த வாழ்க்கையை மீண்டும் முழுமையாக அனுபவிக்கவும் தேவையான ஆற்றலை பெறுவீர்கள். 

இந்திய எழுத்தாளர் பிரசாந்த் பிரஹ்மானே (Prashant Brahmane) தனது "Making Best of Childhood" (குழந்தைப் பருவத்தை அர்த்தமுள்ளதாக்குதல்) என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "சிறு சிந்தனை கொண்டவர்கள் கடந்த கால நிகழ்வுகளை பற்றிப் பேசுகிறார்கள்; பெரிய சிந்தனை கொண்டவர்கள் நிகழ் காலத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்; மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் எதிர்கால நிகழ்வுகளை பற்றிப் பேசுகிறார்கள். உங்கள் பலம் என்னவென்று உங்களுக்கு தெரியாவிட்டால், அதுவே உங்கள் பலவீனம். உங்கள் பலவீனம் என்னவென்று உங்களுக்குத் தெரிந்தால், அதுவே உங்கள் பலம்." 

முந்திய எபிசோடில் நாம் கவி ஞானியின் பாப்புலர் பாடலான "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று" என்று கொஞ்சமாக தொட்டு விட்டு வந்தோம். இப்போது விலாவாரியாக அதை பார்ப்போம். பெற்றோர்கள் தன் கடந்த கால கஷ்டங்களில் மூழ்கி உழலாதீர்கள் என்கிறார் கவியரசர்: 

"நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று" 

பழைய அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்டு தங்கள் பெற்றோரின் தவறுகளை தாமும் சுய உணர்வு இல்லாது எமோஷனல் ஆகி ரிப்பீட் செய்யக்கூடாது நம் குழந்தைகளிடம். இப்போ நமக்கு கிடைப்பது partially DNA formatted புதிய குழந்தை(கள்). இதை கண்ணதாசன் தெய்வம் ஏன் குழந்தை அருகில் இருக்கிறது என அருமையாக வடிக்கிறார்: 

"பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது

அந்தப் பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது

வயது வந்த பிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது

அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது" 

பெற்றோரின் உள்ளமும் திறந்திருக்க வேண்டும், இல்லை அலை பாயும் உணர்வுகள் கணவன்-மனைவிக்கு இடையே குழந்தை வளர்ப்பில் பேதம் உண்டாகும் என்கிறார் கவிஞர்: 

"உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது

நம் உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது

பேசி கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

 

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்

அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்

என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்!" 

'பெற்றால்தான் பிள்ளையா?' எனக் கேட்டு கவிஞர் மருதகாசியும் முன்னரே பாடிவிட்டார், தனக்கு பிறக்காத குழந்தையும் தெய்வமும் ஓன்றே என்று  (படம்: வண்ணக்கிளி): 

"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

ஐக்கியம் ஆகிவிடும் இது உண்மை ஜெகத்திலே

 

மழை போல் கருணையுள்ள மனமிருந்தாலே

வாரி அரவணைக்கும் குணமிருந்தாலே

மாற்றாந்தாய் என்பதையே மறந்துவிடும் பிள்ளை

மலர் முகம் காட்டி வந்து அமர்ந்திடும் மடியிலே

 

பெற்றால் தான் பிள்ளை என்பதில்லையே

அதற்கு சுற்றமென்றும் சொந்தமென்றும் இல்லையே

வற்றாத அன்பு என்னும் அமுதையே

யார் வழங்கினாலும் மயங்கும் தெய்வம் குழந்தையே!" 

கவிஞர் வாலி மட்டும் சளைப்பவரா என்ன? அவரும் "பெற்றால்தான் பிள்ளையா?" (படம்) என்று கேட்டு "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி" என்று பாடி தன் அப்பா-அம்மாவிடம் என்ன வாங்கலாம் என்றும் சொல்லி விட்டார்: "அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம், இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்!" 

‘அன்பு கொட்டுவது ஒரு கஷ்டமும் இல்ல சார். குழந்தைகள் என்றால் தானே பொங்கி வரும். அவர்களுக்கு 'பொறுப்பு' என்பதை எப்படி சொல்லிக் கொடுப்பது? அப்போதானே, வயதான காலத்தில் முதியோர் இல்லத்துக்கு போகாமல் இருக்க முடியும்?’ "Teaching Your Children Responsibility" (குழந்தைகளுக்குப் பொறுப்புணர்வை ஊட்டுதல்) என்பது நேரடியான மற்றும் தெளிவான ஒரு புத்தகம். இதில் எழுத்தாளர்கள் லிண்டா மற்றும் ரிச்சர்ட் ஐயர் (Linda & Richard Eyre) ஒரு முக்கிய கருத்தை வலியுறுத்துகிறார்கள்: "பெற்-றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய விழுமியங்களிலேயே மிக முக்கியமானது 'பொறுப்புணர்வு' ஆகும்." 

இளம் பெற்றோர்களுக்கு அவர்கள் இவ்வாறு வழிகாட்டுகிறார்கள்: "நம் குழந்தைகளின் எதிர்காலத்தில் உள்ள பல்வேறு நிச்சயமற்ற தன்மைகளைப் பற்றி நாம் தொடர்ந்து கவலைப் படுகிறோம்; அவர்களை எல்லா வகையிலும் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சிக்கிறோம். ஆனால், அவர்களைப் பாதுகாப்பதற்கான உண்மையான மற்றும் நிலையான வழி, அவர்கள் தங்களுக்குத் தாங்களே பொறுப்புடன் இருக்கக் கற்றுக் கொடுப்பதுதான். இந்தப் பயிற்சியை அவர்கள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கும் முன்பே நாம் ஆரம்பிக்கலாம். அவர்கள் தொடக்கப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு இதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. பொறுப்புணர்வு என்பது குடும்பம், சுயநலம் மற்றும் சமூகம் ஆகியவற்றின் மீது பொறுப்புடன் செயல்படும் முதிர்ச்சியைக் குறிக்கிறது... அதாவது நமது வாழ்க்கை, சூழ்நிலைகள், திறமைகள், ஆற்றல், உணர்வுகள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் சுதந்திரம் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்பதாகும். 

ஒரு குழந்தையின் ஆற்றல் கற்பனைக்கு எட்டாதது; இருப்பினும், அதை நாம் கற்பனை செய்து பார்க்க முயல்வதன் மூலம், அக்குழந்தை அந்த ஆற்றலைச் சென்றடைய உதவ முடியும். உழைக்கக் கற்றுக்கொள்ளாத குழந்தைகள், பெரியவர்களாகும் போது பயனுள்ள சாதனைகளைப் படைப்பதில் தோல்வியடைவது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் அடிப்படை மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு ஆகியவற்றில் ஒன்றையும் இழக்கிறார்கள். நவீன சமூகத்தில் உள்ள பெற்றோர்களாகிய நாம், குழந்தைகளுக்கு உழைப்பால் கிடைக்கும் நன்மைகளை உணர்வதில்லை. பொறுப்புகளை ஏற்க அவர்கள் மிகவும் சிறியவர்கள் என்றோ அல்லது சிறிய வேலைகளை செய்ய அவர்கள் மிகவும் வளர்ந்துவிட்டார்கள் என்றோ நாம் கருதுகிறோம். மனித குலத்தின் மிகப்பெரிய சவால் உலகில் அமைதியை உருவாக்குவதாகும்; அதேவேளையில், ஒரு தனிமனிதனின் மிகப்பெரிய சவால் தனக்குள்ளேயே அமைதியை உருவாக்கிக் கொள்வதாகும்." 

‘சிறு குழந்தைகளுக்கு வீட்டு வேலை கொடுப்பதா? என்ன அநியாயம்! குருவி தலைல பனங்காய வைக்கலாமா சார்?’ முந்தைய அத்தியாயத்தில், "Connecting with our Children: Guiding Principles for Parents in a Troubled World" (நமது குழந்தைகளுடன் இணைந்திருத்தல்: சிக்கலான உலகில் பெற்றோருக்கான வழிகாட்டுதல்கள்) என்ற புத்தகத்தின் மூலம் ராபர்ட்டா எம். கில்பர்ட்டை நாம் சந்தித்தோம். பெற்றோர்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மாறாக தங்கள் குழந்தைகள் தங்கள் சொந்த அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ள உதவினால் போதுமானது என்றும் அவர் வெளிப்படையாகக் கூறுகிறார்: 

"எல்லா பதில்களும் தெரியும் என்று பாசாங்கு செய்யாத போது, ​​​​குழந்தைகளிடம் வளங்களைச் சரியாகப் பயன்படுத்தும் திறனையும், சிந்தித்துச் செயல்படும் திறன் கொண்ட சிக்கல் தீர்க்கும் ஆற்றலையும் நாம் ஊக்குவிக்கிறோம். படிப்படியாகவும் நிலைப் படியாகவும் வளர்ந்து, தங்கள் வாழ்க்கையின் பொறுப்புகளைத் தாங்களே ஏற்றுக் கொள்வதன் மூலமே அல்லவா குழந்தைகள் பொறுப்புள்ள பெரியவர்களாக மாறமுடியும்? எல்லா பதில்களையும் நாமே வழங்கிக் கொண்டிருந்தால், அவர்கள் எப்படித் தாங்களாகவே சிரமப்பட்டு தீர்வு காணக் கற்றுக் கொள்வார்கள்? சரியான அளவில் மன அழுத்தம் இருக்கும் போது, ​​ மனிதர்கள் சிறப்பாக சிந்திக்கிறார்கள், ஆக்கப்பூர்வமாகப் பதிலளிக்கிறார்கள், மேலும் வாழ்க்கையை மன நிறைவு தருவதாக உணர்கிறார்கள். 

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மன அழுத்தமே இல்லாத நிலை ஒரு சலிப்பான வாழ்க்கையாக உணரப் படுகிறது; அந்தச் சூழலே கூட ஒரு வகையான மன அழுத்தத்தை உருவாக்கக்கூடும். நகைச்சுவை என்பது ஒரு வகையான விளையாட்டு; அது பதற்றத்தைத் தணித்து, சரியான கண்ணோட்டத்தை மீட்டெடுக்கிறது; சந்தேகத்திற்கு இடமின்றி இது மூளையின் வேதியியல் செயல்பாட்டையும் சீரமைக்கிறது. இந்த மாற்றங்களின் விளைவாக, மனநிலை மேம்படுகிறது, ஆற்றல் அதிகரிக்கிறது, மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் பழகுகிறார்கள். ஒரு சூழலில் என்ன நடக்கக்கூடும் என்பதைப் பற்றி குழந்தைகள் முடிந்தவரை நன்கு தெரிந்து கொள்ள உதவுங்கள். என்ன நடக்கும் என்று முன்கூட்டியே தெரிவது, அறியாதவற்றை குறித்த பயத்தை குறைக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்வது, அதற்கேற்பத் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளவும், ஒருவேளை அதில் மகிழ்ச்சியைக் கண்டறியவும் குழந்தைகளுக்கு உதவுகிறது. இதன் மூலம், 'நினைத்தது போலவே நடக்கும்' (self-fulfilling prophecy) என்ற வெற்றிகரமான மனநிலை அந்த அனுபவத்திலேயே கட்டமைக்கப்படுகிறது." 

‘நாங்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்துவதாலும், குழந்தைகள் அங்கு நீண்ட நேரம் செலவிடுவதாலும், இவை அனைத்தையும் பள்ளிகளிலேயே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்று வாசகர்கள் நினைக்கலாம். ஆனால் கில்பர்ட் ஒரு முக்கிய உண்மையை வலியுறுத்துகிறார்: "பல்வேறு தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகளைக் கொண்ட நமது கல்வி முறை, பெரும்பாலும் குழந்தைகளிடம் சுயமரியாதையை வளர்ப்பதற்கு உதவுவதில்லை. தவறான பதில்களே குறிக்கப்பட்டு கவனிக்கப்படுவதால், எதிர்மறையான மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தும் வகையிலேயே தேர்வு முறை அமைக்கப்பட்டுள்ளது. நேர்மறையான வெற்றியை வளர்க்கக் கூடிய, குழந்தைகள் சரியாகச் செய்யும் விஷயங்களுக்கான அங்கீகாரம் அவர்களுக்கு கிடைப்பதில்லை; மாறாக, அவர்களின் தோல்விகளின் அடிப்படையிலேயே அவர்கள் மதிப்பிடப் படுகிறார்கள். 

பெரியவர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கக் கூடிய மிக முக்கியமான திறன்களில் ஒன்று, சிக்கல்களுக்கு மாற்றுத் தீர்வுகளைக் காண ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் நெகிழ்வுத்தன்மை என்று நான் கருதுகிறேன்: அதாவது, உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறிவது." மனிதர்களில் உள்ள பிரதிபலிப்பு நரம்பணுக்களைப் (mirror neurons) பொறுத்தவரை, 'குரங்கு பார்த்தால் குரங்கு செய்யும்' என்ற உண்மையை நாம் ஏற்கனவே கண்டிருக்கிறோம். பெற்றோர்கள் தாங்களே தங்கள் குழந்தைகளுக்கு முன் முன்மாதிரியாக திகழ முடியும், இது எதிர்காலத்தில் மீண்டும் செய்வதற்காக அவர்களின் நடத்தையை பின்பற்ற குழந்தைகளுக்கு உதவுகிறது. 

தனது முன்னோடி ஆராய்ச்சியின் அடிப்படையில், டாக்டர் புரூஸ் லிப்டன் தனது "நம்பிக்கையின் உயிரியல்" என்ற புத்தகத்தில், "நம்மில் பெரும்பாலோர் குழந்தைகளாக இருந்தபோது, ​​நமது ஆழ்மனதில் பதிவிறக்கம் செய்யப்பட்ட, நம்மை மட்டுப்படுத்தும் அல்லது சுய-நாசப்படுத்தும் நம்பிக்கைகளை எவ்வாறு தவிர்க்க முடியாமல் பெற்றோம் என்பதை நனவான பெற்றோர் வளர்ப்பு விவரிக்கிறது. அந்த ஆழ்மன நிரல்களை விரைவாக அணுகி மறுநிரல் செய்ய, சமீபத்திய மனம்-உடல் ஆராய்ச்சியைப் பயன்படுத்தும் பல்வேறு "ஆற்றல்" உளவியல் நுட்பங்கள் உள்ளன. சிறு குழந்தைகள் தங்கள் சூழலைக் கவனமாக கவனித்து, பெற்றோர்கள் வழங்கும் உலக ஞானத்தை நேரடியாக தங்கள் ஆழ்மன நினைவகத்தில் பதிவிறக்கம் செய்கிறார்கள். இதன் விளைவாக, அவர்களின் பெற்றோரின் நடத்தையும் நம்பிக்கைகளும் தங்களுடையதாக மாறுகின்றன" என்று கூறுகிறார். 

கடந்த அத்தியாயத்தில், உலகப்புகழ் பெற்ற மனித உளவியல் கோட்பாடான 'T.A.' (Transactional Analysis) பற்றிப் பார்த்தோம். "ஐயா, இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், பள்ளி முடிந்ததும் குழந்தைகளை ஒரு சிறப்பு வகுப்பிலிருந்து இன்னொரு சிறப்பு வகுப்புக்கு என பெற்றோர்கள் அலைக்கழிக்கும் சூழலில், அவர்களை முதிர்ச்சியடைந்த பெரியவர்களாக வளர்க்கும் வகையில் எப்படி உணர்வுப் பூர்வமாக 'வடிவமைக்க' (program) முடியும்? இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது?" என்று நீங்கள் கேட்கலாம். குழந்தைகளைப் பெற திட்டமிடும் தம்பதியினருக்கான தீர்வு இதோ: அந்தக் குழந்தையை வடிவமைக்கும் பணியை கருவிலேயே தொடங்கிவிடலாம். ஆச்சரியமாக இருக்கிறதா? 

"சட்டி சுட்டபின் கைவிட்ட" கதையை பாடி "ஆலய மணி'யை (படம்) அடித்த கவிஞானி "பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா" என்றும் கோடி காட்டினார். ஜனிக்கும் முன் குழந்தைகள் சுடாத களிமண் தானே! பிறக்கும் முன் குழந்தைகளை எப்படி வடிவமைக்க முடியும் என பார்ப்போமா.....? அடுத்த எபிசோடில்..... 

-ஜேயெஸ் (www.jeyes.in)


 

 

 

Comments

Popular posts from this blog

Book Review: Most and More by Mahatria Ra

Book Review - The 80/20 Principle by Richard Koch

Book Review: Jugaad Innovation by Navi Radjou, Jaideep Prabhu & Simone Ahuja