கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-29)
குழந்தைகளுடன் விளையாடுவது பெற்றோர்கள் ஈடுபடக்-கூடிய மிக முக்கியமான செயலாகும். உண்மையில், குழந்தைகள் இத்தகைய தரமான நேரத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள்; அத்துடன் இதன் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். "விளையாட்டு இல்லாத உழைப்பு ஒருவனை மந்தமானவனாக்குகிறது" (All work and no play makes Jack a dull boy) என்பது ஒரு பிரபலமான பொன்மொழி. சொல்லப் போனால், குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடும் போது, இருவருக்கும் ஆக்சிடோசின் (oxytocin), டோபமைன் (dopamine), அட்ரினலின் (adrenaline) போன்ற நேர்மறையான வேதிப்பொருட்களின் சுரப்பு தூண்டப்படுகிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், குழந்தை மேம்பாட்டு நிபுணரும், புகழ்பெற்ற பெற்றோர் கல்வி ஆலோசகருமான டாக்டர் ராபின் கோல்ட்ஸ்டீன், ஜேனட் காலண்ட் என்பவருடன் இணைந்து எழுதிய "The Parenting Bible: The First Five Years and the Answers to Parents' Most Common Questions" (பெற்றோருக்கான வழிகாட்டி: முதல் ஐந்து ஆண்டுகள் மற்றும் பெற்றோரின் பொதுவான கேள்விகளுக்கான பதில்கள்) என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: "விளையாட்டு என்பது வளர்ச்சியின் ஒரு இன்றியமையாத பகுதியாகும். ஒரு குழந்தை சுதந்திரமாக விளையாடும் போது, அது தனது ஆர்வத்தை தணித்துக்கொண்டு, பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கண்டறிகிறது; திட்டமிடவும் வகைப்படுத்தவும் கற்றுக்கொள்கிறது; மதிப்பிடுதல், கணித்தல், கேள்வி கேட்டல், கண்டறிதல், முடிவுகளை எடுத்தல் மற்றும் சிக்கல்களை தீர்த்தல் ஆகியவற்றைத் தொடங்குகிறது; மேலும் தனது சம வயதுடையவர்களுடன் பழகவும், தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் போலச் செயல்படவும் (அவர்களைப் பின்பற்றவும்) கற்றுக் கொள்கிறது.
குழந்தைகள் பல விஷயங்களைத் தாங்களாகவே செய்து பார்க்க விரும்புகிறார்கள். தாங்களாகவே செயல்பட விரும்பும் குழந்தையின் விருப்பத்தை மதிக்கும் பெற்றோர்கள், அக்குழந்தைக்கு வலுவான சுயசார்பு உணர்வை (தன்னம்பிக்-கையை) வளர்க்க உதவுகிறார்கள். சுதந்திரத்திற்கான குழந்தையின் விருப்பத்திற்கு பெற்றோர்கள் அளிக்கும் எதிர்வினையை பொறுத்தே குழந்தையின் சுய-பிம்பம் (தன்னைப் பற்றிய கண்ணோட்டம்) ஓரளவு தீர்மானிக்கப் படுகிறது; எனவே, வேலைகளை தாங்களாகவே செய்ய அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் தங்களைப் பற்றி நல்லெண்ணம் கொள்கிறார்கள். மறுபுறம், பெற்றோர்கள் அடிக்கடி அவர்களைத் தடுத்தால் அல்லது ஊக்கத்தைக் குறைத்தால், அவர்கள் தங்கள் சொந்தத் திறன்களின் மீது சந்தேகம் கொள்ளத் தொடங்குவார்கள்."
ஒரு பொதுவான உண்மை உள்ளது, அது குறிப்பாக குழந்தைகளுக்கு பொருந்தும். அது என்னவென்றால்: "நீங்கள் சொல்வதை யாரும் கவனிப்பதில்லை, ஆனால் நீங்கள் செய்வதை அனைவரும் கவனிக்கிறார்கள்!" ஒருவர் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே உள்ள முரண்பாட்டை (Saying & Doing Gap) சுற்றியுள்ளவர்கள் கவனிக்கும்போது, அந்த நபரின் நம்பகத்தன்மையும் அவர் மீதான நம்பிக்கையும் வெகுவாக குறைகிறது. வாசகர்கள் முன்பு குறிப்பிடப்பட்ட 'தொப்பி வியாபாரியும் குரங்குகளும்' (Cap seller and the monkeys) போன்ற கதைகளை நினைவுகூரலாம்; மனிதர்களாகிய நாமும், அதிலும் குறிப்பாக நம் குழந்தைகளும், நம்முடைய நடத்தையையே பின்பற்றுகிறோம். ஏனெனில், நம்முடைய நடத்தைகள் எப்போதும் (24 மணி நேரமும்) அவர்களின் பார்வைக்குத் தெரியும் வகையில் உள்ளன; அவர்கள் அதைப் பார்த்துப் பின்பற்றி கற்றுக் கொள்கிறார்கள்.
இந்த முக்கியமான அம்சத்தை அந்த நூலின் ஆசிரியர்களும் வலியுறுத்துகிறார்கள்: "குழந்தைகள் உங்கள் வார்த்தை-களிலிருந்து மட்டுமல்ல, உங்கள் செயல்களிலிருந்தும் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையிடம் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டு, அவளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டினால், அவளும் உங்களைப் போலவே நடந்து கொள்ளத் தொடங்குவாள். குழந்தைகள் மனநிறைவுடன் இருக்கும் போது, பொதுவாக அவர்கள் நன்றாக நடந்து கொள்கிறார்கள்; மேலும் நீங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை எளிதாக ஏற்றுக் கொள்கிறார்கள். கண்ணியத்துடன் நடத்தப்படும் போது, கண்ணியமான நடத்தை என்றால் என்ன என்பதையும் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
நீங்கள் அதிருப்தி அடையும்போது கட்டுப்பாடுகளை விதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது உங்கள் குழந்தையின் செயலில் மகிழ்ச்சி அடையும்போது அவளைப் பாராட்டுவதும் ஊக்கப் படுத்துவதும் ஆகும். மரியாதை என்பதை ஒரு குழந்தை கற்றுக் கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. மரியாதையான நடத்தையைப் பற்றித் தன் பெற்றோர் சொல்வதை அவன் செவி மடுக்கிறான்; அதே சமயம், அவர்கள் உண்மையில் நடந்து கொள்ளும் விதத்தையும் அவன் அப்படியே பின்பற்றுகிறான். இறுதியில், அவர்களின் வார்த்தைகளை விட அவர்களின் செயல்களிலிருந்தே அவன் அதிகம் கற்றுக் கொள்வான்.”
குடும்பம் ஒரு கதம்பம் தானே? சந்தோஷம் சிலருக்கு என்றால், சிக்கல் வேறு சிலருக்கு. பெற்றோர்களின் இன்பமும் துன்பமும் ஒரே பாட்டில் வருமா? பிறந்த பிள்ளைகள் மேல் தாலாட்டாக வழிகிற கவிஞானி கண்ணதாசனின் வார்த்தை வண்ணத்தில் சாத்தியம் (படம்: குழந்தை உள்ளம்):
"பூமரத்து நிழலும்
உண்டுபொன்னி நதி பாட்டுமுண்டு
காவலுக்கு அன்னையுண்டு ஆராரோ…..
ஆராரோ…..
அந்தக் கடவுளுக்கு வேண்டியவர் யார் யாரோ!"
குழந்தைகளே பாடும் மனதை பிழியும் சோக பாடலை கவிகள் வாலியும் போட்டிருக்கிறார்: "கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே, கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே" (படம்: குழந்தையும் தெய்வமும்). மேலும், மற்றொரு மனதை பிழிந்த சோக பாடல், எழுதிய கண்ணதாசன், பின்னணி பாடியவர் என்று எல்லோரையும் அழ வைத்த: "ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ? இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க, இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே?" (படம்: பாகப்பிரிவினை).
குழந்தை உளவியலாளர்கள் கூறுவதன் படி, விரும்பப்படாத சூழலில் பிறக்கும் குழந்தைகளின் மனநிலையில் ஒரு வலுவான எதிர்மறைத் தாக்கம் ஏற்படுகிறது. அன்பற்ற சூழலில் கழிந்த அந்தப் பருவத்தின் வலியை, அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தாழ்வு மனப்பான்மையாகவே சுமந்து செல்கிறார்கள். முந்தைய அத்தியாயத்தில் நாம் கேட்ட பாபி கானர் (Bobbi Conner) தனது புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: "எல்லாக் குழந்தைகளும் தங்கள் சிறு வயதில் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். சூழல் சார்ந்த சிறிய அளவிலான மன அழுத்தம் உங்கள் குழந்தையைச் சிறப்பாக செயல்பட தூண்டக்கூடும். ஆனால், அதிகப்படியான மன அழுத்தம் குழந்தையை நிலை குலையச் செய்து, அவளது வளர்ச்சியையும் முடக்கக்கூடும்." ரோபர்ட்டா எம். கில்பர்ட் (Roberta M. Gilbert) தனது "Connecting with our Children: Guiding Principles for Parents in a Troubled World" என்ற புத்தகத்தில் இதை உறுதிப்படுத்துகிறார்: "ஒரு தனி நபருக்குக் கவலை அல்லது பதற்றம் அதிகரிக்கும் போது, மூளை மற்றும் உடலின் வேதியியல் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. நடத்தையிலும், ஏன் உடல் அமைப்பிலும் கூட மாற்றங்கள் நிகழலாம். அடிக்கடி உடல் ரீதியான வன்முறை நிகழும் குடும்பங்களில் வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் தாங்கள் மேற்கொள்ளும் நெருக்கமான உறவுகளிலும், பிற செயல்பாடுகளிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்."
அப்படியானால், சாதாரணக் குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளின் சுயமரியாதையை (self-esteem) எவ்வாறு மேம்-படுத்துவது? கில்பர்ட் தொடர்ந்து கூறுகிறார்: "பெற்றோர் தங்கள் சொந்தக் கவலைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றை தங்களுக்குள்ளும் தங்கள் முதிர்ந்த உறவுகளுக்குள்ளும் கையாண்டு சரி செய்யும் போது, குழந்தைகள் இயல்பாகவே சிறப்பாக செயல்படத் தொடங்குவார்கள். ஒரு மனிதராகக் குழந்தையின் சமமான மதிப்பை அங்கீகரிக்கும் வகையிலான உறவுமுறை அவசியம். குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனிப்பு, ஆதரவு மற்றும் ஊக்கம் ஆகியவை தேவைப் படுகின்றன. அதேவேளையில், அவர்கள் வளர்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும், முதிர்ச்சி அடைவதற்கு அவர்க-ளுக்குத் தனிப்பட்ட சுதந்திரமும் (space) தேவை. இவை இரண்டையும் சரியான அளவில் வழங்குவதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரை பெற்றோரே சிறந்த 'ஆலோசகர்கள்' (therapists); இந்தப் பணியை வேறு யாராலும் அவர்களுக்குச் செய்துவிட முடியாது."
கவிஞானி இந்த சாராம்சத்தை அட்டகாசமாக ஒரே பாடலில் மொத்த குடும்ப படமாக/பாடமாக பிடித்து வைத்து விட்டார். கூட்டாளி கண்ணனையும் வீட்டில் விளையாட விட்டிருக்-கிறார்! (படம்: தங்கப்பதக்கம்):
"நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்…
அன்பு மணி வழங்கும் சுரங்கம், வாழ்க வாழ்க!
எங்கள் வீடு கோகுலம், என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ தங்கமான
மன்னனாம்
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது
பிள்ளைச் செல்வம் என்னும்
வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது, நன்மை செய்யும் மனம் கொண்டது,
எங்கள் இல்லம் என்னும் பேரை
கண்ணன் வளர்ப்பான்
மாயம் செய்யும் மகன் வந்தது, ஆயர்பாடி பயம் கொண்டது
அந்தப் பிள்ளை செய்யும் லீலை
நானறிவேன்
இந்தப் பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து
நான் வளர்ப்பேன்
கோலம் கொண்ட பாலனே, கோவில் கொண்ட தெய்வமாம்!
தாயில் பிள்ளை பாசமே தட்டில்
வைத்த தீபமாம்
பாசம் என்று எதைச் சொல்வது? பக்தி என்று எதைச் சொல்வது?
அன்னை, தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா?
பிள்ளை என்னும் துணை வந்தது, உள்ளம் எங்கும் இடம் கொண்டது!
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா?"
பேட்ரிசியா எச். பெர்ன் (Patricia H. Berne) மற்றும் லூயிஸ் எம். சேவரி (Louis M. Savory) ஆகியோர் தங்கள் "Building Self-Esteem in Children" என்ற புத்தகத்தில், சவால்களை எதிர்கொள்ளும் பெற்றோருக்கான வழியைக் காட்டுகிறார்கள்: "குழந்தைகளிடம் சுயமரியாதையை வளர்ப்பது, வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் நேர்மறையான சுய-பிம்பத்தை (positive self-image) ஏற்படுத்த உதவுவது ஆகியவை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணிகளாகும். நீங்கள் கவலைப்படும் எந்தவொரு பொருள் சார்ந்த விஷயத்தையும் விட, குழந்தைகளுக்கு நீங்கள் அளிக்கக்கூடிய மிக முக்கியமான விஷயம் 'சுய நம்பிக்கை' (self-confidence) ஆகும். சுயமரியாதை என்பது அதீத தன்னம்பிக்கை (overconfidence) அல்ல. ஆரோக்கியமான சுயமரியாதை உங்களிடம் இருக்கும் போது, உங்களைப் பற்றியும் உங்கள் பலவீனங்கள் அல்லது வரம்புகளை (limitations) பற்றியும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்; அவற்றை நினைத்து வெட்கப்படாமல், உங்கள் யதார்த்தத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது நீங்கள் விரிவுபடுத்த வேண்டிய ஒரு எல்லையாகவோ அவற்றை அணுகுவீர்கள்."
நமது வாழ்க்கையின் எதார்த்தங்களை—அதாவது நிகழ்காலம் மற்றும் கடந்த கால நிகழ்வுகளை—குழந்தைகளிடமிருந்து மறைக்க வேண்டுமா? ஆசிரியர்களின் அறிவுரை வெளிப்படையானது: "உங்கள் போராட்டங்கள், தோல்விகள், வெற்றிகள், உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்புகள், போட்டிகள் மற்றும் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள். தங்கள் உணர்வுகள் தங்களுக்கு மட்டுமே உரியவை அல்ல, அவை ஒவ்வொரு மனிதருக்கும் பொதுவானவை என்பதைப் புரிந்து கொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது.
கதைகளைச் சொல்வது குழந்தைகளை புதிய மனிதர்கள் மற்றும் புதிய சாத்தியக் கூறுகளுடன் அறிமுகப்படுத்துகிறது; இதன் மூலம் பரந்த உலகில் பல புதிய இடங்களுக்கான பாலங்களை அது உருவாக்குகிறது. சுயமரியாதை குறையும் போது, உணர்வுகளை நேர்மறையாகவும் விளையாட்டுத் தனமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியும் களியாட்டமும் அனைவரையும் ஈர்க்ககூடிய உணர்வுகள்; அவை சுயமரியாதையை வளர்க்கின்றன. பெரியவர்களாகிய நாம், ஒரு சூழலைப் பற்றிய குழந்தையின் கண்ணோட்டத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை; ஆனால், அந்தச் சூழலில் குழந்தைக்கு தோன்றும் உணர்வுகளுக்கான உரிமையை நாம் அங்கீகரிக்கலாம். பல குழந்தைகள் தங்கள் தீவிரமான உணர்வுகளை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள்; ஏனெனில், 'பயப்படாதே, காயப்படாதே, சோகமாக இருக்காதே, அழாதே, கோபப்படாதே' என்று அவர்களிடம் சொல்லப்பட்டிருக்கும். கோபப்படுவது ஒரு கெட்ட விஷயம் என்ற எண்ணம் எப்படியோ குழந்தைகளுக்குள் விதைக்கப்படுகிறது."
பாபியின் (Bobbi) கருத்துக்கும் வருவோம்; அவரும் இந்த எதார்த்தமான கண்ணோட்டத்தை ஒப்புக்கொள்கிறார்: "தங்கள் சொந்தக் கோபத்தைக் கையாள்வதற்கும், மற்றவர்-களின் கோபத்திற்கு பதிலளிப்பதற்கும் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள குழந்தைகளுக்கு உதவுவதில் நமக்கு மிக முக்கியமான பணி உள்ளது. பல ஆண்டுகளாக நான் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மை என்னவென்றால், கடினமான தருணங்களை எதிர்கொள்ளும் போது தான் நாம் வளர்ச்சியடைகிறோம். நம் குழந்தைகளும் அப்படித்தான் வளர்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் சண்டை போடுவதற்கு பதிலாக, இணக்கமாகச் செயல்படுவது எப்படி என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது நிச்சயமாக அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு தருணமாகும். பயம் என்பது மனித இயல்பின் ஒரு உள்ளார்ந்த பகுதி என்று நான் நினைக்கிறேன். கவலை மற்றும் பயம் கொள்ளும் திறன் நமக்கு இல்லையென்றால், நாம் நீண்ட காலம் உயிர் வாழ முடிந்திருக்காது. சிறு குழந்தைகளின் பயத்தை அணுகுவதற்கான மிகச் சிறந்த வழி, கருணையுடனும் நம்பிக்கையூட்டும் வகையிலும் நடந்து கொள்வதாகும். பெரும்பாலும், குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்களின் பயத்தை நாம் அலட்சியப் படுத்தி விடுகிறோம்.
பெற்றோர்கள் தாங்கள் சிறு வயதில் இருந்தபோது நடந்த விஷயங்களைப் பற்றியும், தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பற்றியும் பேசுவதைக் கேட்க குழந்தைகள் விரும்புகிறார்கள். ஆனால், மிகக் குறைவான பெற்றோர்களே இதைச் செய்கிறார்கள் என்பது என் கவனிப்பு. நாம் நிமிர்ந்து நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, நெருப்பு மூட்டி அதைச் சுற்றி அமர்ந்து கதைகள் சொல்லும் பழக்கம் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது, நாம் தொலைக்காட்சியை சுற்றி அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு குழந்தை, பெற்றோர் இல்லாமலேயே வெற்றிகரமாகச் செயல்படத் தயாராவதற்கு உதவுபவரே சிறந்த பெற்றோர் ஆவார்." இக்காலத்தில், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு உண்பது கூட அரிதாகிவிட்டது. ஒவ்வொருவரும் தங்கள் அலைபேசியிலேயே மூழ்கி, பல்வேறு சமூக ஊடகச் செயலிகளில் தங்களுக்கு ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். வளர்ந்து வரும் குழந்தைகள் வேறு எதைத்தான் முன் மாதிரியாகக் கொள்வார்கள்?
நம் பாடலாசிரியர் மற்றும் குழந்தைகளைப் பற்றி குழந்தைகளால் பாடப்பட்ட, அவரது பாடல்களுக்கு மீண்டும் வருவோம். கவியரசர் கண்ணதாசன் தனக்கு மிகவும் பிடித்த கண்ணனை குழந்தையாக மட்டுமல்ல பல பாடல்களில் காதலனாகவும் பாராட்டுகிறார்: 'கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல, கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல." (படம்: வெண்ணிற ஆடை) "கட்டான கட்டழகு கண்ணா உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா" (படம்: குடும்ப தலைவன்). "என் கண்ணனுக் கெத்தனை கோவிலோ, காவலில் எத்தனை தெய்வமோ, மன்னனுக் கெத்தனை உள்ளமோ, மனதில் எத்தனை வெள்ளமோ" (படம்: வேட்டைக்காரன்). வாலியும் சளைப்பாரா? கண்ணன் என் காதலனும் என்று உரிமை கொண்டாடுகிறார்: "கண்ணன் ஒரு கை குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை, கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை, கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ, மைவிழியே தாலேலோ, மாதவனே தாலேலோ" (படம்: பத்ரகாளி).
கவியரசர் "குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று" (படம்: குழந்தையும் தெய்வமும்) என பாடியவர், குழந்தை கண்ணனை கடவுளாகவே பாடியதும் நிறைய பாடல்கள்: "கங்கை கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே கண்ணன் நடுவினிலே, காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே எதிலும் அவன் குரலே" (படம்: வானம்பாடி). "கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்" (படம்: ராமு). அதே படத்தில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு சூசகமாக காதல் சொல்லும் பாடலும் உண்டு: "முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும், முத்தமொன்று சத்தமின்றி பிறந்து வரும்". பெண்ணின் ஆதங்கமும் கண்ணனிடம்தான் சொல்ல முடியும் அல்லவா? “கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண் இல்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை" (படம்: நானும் ஒரு பெண்).
தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் இல்லாத குழந்தை-களை தத்துவம் பேசி தாங்கும் பாடல்களையும் கவி ஞானி எழுதி இருக்கிறார்: "பிள்ளைக்குத் தந்தை ஒருவன், நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்! நீ ஒருவனை நம்பி வந்தாயோ? இல்லை இறைவனை நம்பி வந்தாயோ?" (படம்: பார்த்தால் பசி தீரும்). குழந்தையை பறிகொடுத்த இது மாதிரி 'ஆரி ராரி ராரோ ஆராரி ராரோ' கஷ்டங்களும் பாட்டில் உண்டு "மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க காணிக்கையாக யார் கொடுத்தாள்? அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள்? மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க, காணிக்கையாக ஏன் கொடுத்தேன்? அது கடமையென்றே நான் கொடுத்தேன்!" (படம்: பணம் படைத்தவன்).
இதைவிட இன்னும் சவாலான சந்தர்ப்பங்களிலும் குழந்தைப் பாட்டு எழுதி இருக்கிறார், கவிஞர். உதாரணமாக, பிள்ளை பிறந்த வீட்டின் பெரியவர்கள் பார்வை, பேச்சு, கேட்கும் குறைபாட்டுடன் இருந்தால், தத்துவமும் சேர்த்து பாடுவதில் கில்லாடி கவியரசர்: "இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட, அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட!" (படம்: உயர்ந்த-வர்கள்). கடைசீயாக, கண்ணதாசனும் பாடிய கடைசீ திரைப் பாடலும் ஒருவித தாலாட்டுதான், ஆனால், 'வளர்ந்தும் வளராத' 'மூன்றாம் பிறையான' (படம்) பெண்ணை உறங்க வைத்த குழந்தை பாடல் இது: "கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே, அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன், ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்". கவி ஞானி கடைசீயாக கடவுளிடம் என்ன கேட்டாரோ?
குழந்தைகள் பிறந்த போது ஜாலியாக கொண்டாடிய தம்பதிகள் முறுக்கிக் கொள்வது, அந்த குழந்தைகள் வளரும் போது. பிறந்த குழந்தை யாரை போல இருக்கு, யாரிடம் அதிகம் ஒட்டிக் கொள்கிறது என்கிற செல்ல கோபங்கள் தான் குடும்பத்திலே, கவிஞனுக்கு “நேரமிது நேரமிது" ஒரு பாட்டெழுத (படம் ரிஷிமூலம்):
"திங்கள்
ஒளி திங்களைப்போல், உங்கள் பிள்ளை உங்களைப்போல்
உங்களைத்தான் நாடுகிறான், என்னிடம் ஆசையில்லை
நீ பெற்ற பிள்ளையின் வேகமும் கோபமும்
உன்னைப் போலத் தோன்றுதே!"
ஆனால், குழந்தைகளை மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் அப்பா-அம்மா இருவரில் ஒருவர் இருக்கும் போது, அது பெரிய மோதலுக்கு வழிவகுக்கிறது. "அடியாத பிள்ளை படியாது" (அதாவது, தண்டிக்காவிட்டால் குழந்தை கெட்டுப் போகும்) என்று அவர்கள் நம்புகிறார்கள். அக்காலத்தில் நாங்களும் அப்படித்தான் வளர்க்கப்பட்டோம். எங்கள் குடும்பத்தில், நான் ஒரு கிளர்ச்சியாளராக இருந்ததால், என் தந்தையிடமிருந்து அதிக அடிகளை வாங்க வேண்டியிருந்தது (அவரும் தன் தந்தையிடமிருந்து அடி வாங்கியவர், அதை அப்படியே என்னிடமும் கொடுத்தார், வட்டியும் முதலுமாக சேர்த்து!).
முந்தைய அத்தியாயம் ஒன்றில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்ட 'பரிமாற்றப் பகுப்பாய்வு' (Transactional Analysis - T.A.) என்ற சிறந்த கோட்பாட்டை வாசகர்கள் நினைவுகூரலாம். இந்தத் தலைப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், அன்றாடக் குடும்பச் சூழலை மேம்பட்ட கண்ணோட்டத்துடன் அணுகி மகிழவும் சிலர் கூகுளில் தேடியிருப்பார்கள் என்று நம்புகிறேன். ஒரு பெற்றோர் 'விமர்சிக்கும் பெற்றோர்' (Critical Parent - CP) என்ற மனநிலையில் இருக்கும் போது, மற்றொருவர் 'அன்புடன் வளர்க்கும் பெற்றோர்' (Nurturing Parent - NP) என்ற பாத்திரத்தை ஏற்றால், வீட்டில் ஒரு சமநிலை நிலவும். ஆனால், தங்களின் ஆழ்மனதில் பதிந்துள்ள வளர்ப்பு முறை மற்றும் முரண்பட்ட நம்பிக்கைகள் காரணமாக, பெற்றோர் பல நேரங்களில் முற்றிலும் மாறுபட்ட வளர்ப்பு முறைகளால் ஏற்படும் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் 'இயல்பான குழந்தை' (Natural Child), 'பொருந்திப் போகும் குழந்தை' (Adaptive Child), 'சிறு பேராசிரியர்கள்' (Little Professors) அல்லது 'கிளர்ச்சியாளர் குழந்தை' (Rebel Child) எனப் பல்வேறு நிலைகளில் வளரக்கூடும்.
'நான் சரி / நான் சரியல்ல' அல்லது 'நீ சரி / நீ சரியல்ல' (‘I am Ok vs I am NOT Ok’, or, ‘You are Ok vs You are NOT Ok’) என்பது போன்ற பல்வேறு 'வாழ்க்கை நிலைகளை' (Life Positions) அவர்கள் அறியாமலேயே தங்களுக்குள் அமைத்துக் கொள்கிறார்கள். வெளிப்படையான உரையாடல்கள் மூலம் பகுத்தறிவுள்ள 'பெரியவர்' (Adult - A) மனநிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்த்தால் ஒழிய, குடும்பத்தின் இந்த வளர்ப்பு முறை சார்ந்த நாடகம் தலைமுறை தலைமுறை-யாகத் தொடரும் வகையிலான 'வாழ்க்கை திரைக் கதைகள்' (Life Scripts) அவர்கள் மனதில் பதிவாகி விடுகின்றன.
இத்தகைய கசப்பான சூழலில் வளரும் குழந்தைகளை பெற்றோருக்கிடையிலான மோதல்கள் கடுமையாகப் பாதிக்-கின்றன. ராபின் கோல்ட்ஸ்டீன் மற்றும் ஜேனட் காலண்ட் ஆகியோர் தங்கள் "தி பேரண்டிங் பைபிள்" (The Parenting Bible) என்ற புத்தகத்தில் இதை உறுதிப் படுத்துகின்றனர்: "குழந்தைகள் காணும் மிகவும் பொதுவான மற்றும் மனதை வருத்தும் பிரச்சனை பெற்றோருக்கிடையிலான திருமண உறவு சார்ந்த மன அழுத்தமே ஆகும். பெற்றோருக்கு இடையிலான வாக்குவாதங்களை ஒரு குழந்தை கேட்க நேரிடும்போது, அது பயம், இயலாமை மற்றும் கவலைக்கு ஆளாகிறது. இரு பெற்றோரும் உள்ள குடும்பங்களில், அம்மாவும் அப்பாவும் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
டீனேஜ் வயதினர் வாக்குவாதங்களில் மிகச் சிறந்த எதிராளி-களாக (சவாலானவர்களாக) இருக்கக்கூடும். பெற்றோரின் வாதங்களில் உள்ள ஓட்டைகளை கண்டறிவதிலோ அல்லது ஒரு பெற்றோருக்கு எதிராக மற்றவரை பயன் படுத்துவதிலோ அவர்களுக்குத் தனித்திறமை உண்டு. முடிந்த போதெல்லாம், தங்கள் டீனேஜ் வயது குழந்தைகளிடம் பேசுவதற்கு முன்போ அல்லது வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கு முன்போ, அம்மாவும் அப்பாவும் கலந்தாலோசித்து, விதிமுறைகள் மற்றும் அவற்றிற்கான விளைவுகள் குறித்து முன்கூட்டியே ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும்."
எழுத்தாளர் கில்பர்ட்டும் இதை ஒப்புக் கொள்கிறார்: "தம்பதியினர் ஒருவருக்கொருவர் வெளிப்படையான, தனித்துவமான மற்றும் சமமான உறவை உருவாக்க முயன்றால், அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு கூட்டுத் தலைமையைக் கொண்டிருப்பார்கள். உறவுகளை புரிந்து கொள்வதே நம் சமூகத்தின் மிகப்பெரிய தேவையாக உள்ளது. தனிப்பட்ட உறவுகளே ஒருவரின் வெற்றிக்கும், அடுத்த தலைமுறையை சரியாக வழிநடத்திச் செல்வதற்கும் அடிப்படையாக அமைகின்றன. இதற்கான தீர்வுகள் தங்களுக்குள்ளும் தங்கள் குடும்ப உறவுகளுக்குள்ளும் தான் உள்ளன என்பதை மிகச் சிலரே புரிந்துகொள்கிறார்கள்.
குடும்ப பிரச்சனைகளில் தங்கள் சொந்தப் பங்களிப்பு என்ன என்பதை ஆராய்ந்து, அதை மாற்றியமைக்க நேரம், உழைப்பு மற்றும் பணத்தை செலவிட யாரும் தயாராக இருப்பதில்லை. நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், சூழ்நிலையை உண்மையாக மேம்படுத்துவதற்கான ஒரே பயனுள்ள வழி இதுதான். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்கள் உறவு முறை சார்ந்த அல்லது பிற கவலைகளை அவை எழும்போதே தீர்த்துக் கொள்ளாவிட்டால், அவர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளில் ஒருவரிடம் ஏதோ தவறு இருப்பதாக கருதி, அதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவார்கள்."
பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டிகளுக்கு இடையே நிகழும் இத்தகைய தொடர்ச்சியான, ஆழ்மனம் சார்ந்த 'குறுக்கு பரிமாற்றங்கள்' (Crossed Transactions) குடும்பங்களில் தீவிர-மான உணர்வு பூர்வமான விரிசல்களை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதை விளக்கும் 'கவி ஞானி'யின் சில பாடல்களை அடுத்த எபிசோடில்... ஆராய்வோம்...
-ஜேயெஸ் (www.jeyes.in)
Comments
Post a Comment