கண்ணதாசன் — ஒரு ஞானி (Part-28)
கல்யாணமாகி சில மாதங்களிலேயே 'ஏதாவது விசேஷம் உண்டா?' என்று ரொம்ப சூசகமாக கேட்டு ஜோடிகளை சங்கடம் செய்வார்கள் சுற்றி இருக்கும் பெரிசுகள். அந்த கேள்விக்கு எல்லோருக்கும் அர்த்தம் புரியும். அது அந்த காலம். இப்போ இருவரும் வேலைக்குப் போவதால், கல்யாணமே அவசியமா என்று யோசிக்க, ‘குழந்தை எப்போ?’ என்றால் அடிக்க வருகிறார்கள். GenZ இன்னும் சூடாக 'பெத்துப் போட்டால் நீ வளர்க்க வருவாயா?' என்று பதில் கேள்வி கேட்பார்கள். போகிற ஸ்பீடில், இப்போது பிள்ளைகளை பள்ளிக்கூடத்து பட்டியில் அடைத்து பிராய்லர் கோழி வளர்ப்பது மாதிரி, Elon Musk சொல்வதுபோல், இருவரும் DNA செல் கொடுத்து லபோரட்டரியில் வைத்து மாஸ் ஸ்கேல்-ல் மனிதக் குழந்தைகளை தயாரித்து வளர்ப்பார்கள் போலிருக்கு. அது சரி, நம்ம ஜோடி என்ன பண்றாங்க என்று அசந்தர்ப்பமாக கேட்கக் கூடாது. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றிக் கொள்ளாமலா போய் விடும்?
காதல் சக்கரவர்த்தி கண்ணதாசன் பாடின மாதிரி (படம்: வெண்ணிற ஆடை) "சித்திரமே சொல்லடி, முத்தமிட்டால் என்னடி?" என்று அவன் கேட்க, "அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன், அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே, ஆஹா பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே!" என்று அவள் சொல்ல (படம்: காதலிக்க நேரமில்லை), "போதுமோ இந்த இடம்? கூடுமோ அந்த சுகம்? எண்ணி பார்த்தால் சின்ன இடம், இருவர் கூடும் நல்ல இடம்" (படம்: நான்) பாட்டில் கண்ணதாசன் சொன்ன மாதிரி, "பூவை போலே சூடவா? போர்வையாலே மூடவா? காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா?" என்று இவன் பதில் கேள்வி கேட்க, கவியரசர் "கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா?" பாடலில் சொன்ன மாதிரி (படம்: எங்கள் தங்க ராஜா) "சொல்லில் தோன்றுமோ மன்மதக்கலை அள்ளி பார்க்க வேண்டும்!" என்று இயற்கை தன் பணியை தவறாமல் செய்கிறது.
பெண் உடம்பில் கூடுவிட்டுப் பாய்ந்து அவளின் மெல்லிய உணர்வுகளைப் படம் பிடிப்பதில் எம்டன் ஆன கவியரசர் இது மாதிரி சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவாரா? பல பாடல்களில் பெண்ணின் ஹார்மோன் வெள்ளத்துக்கு 'பச்சை விளக்கு' (படம்) காட்டிவிட்டது போல அடித்து விளாசி இருக்கிறார் இந்த பாடலில்:
"அவள்
மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை
ராதை
காதலன் காதலி நாடகம் ஆயிரம்
நாளொன்று போனது இனிமையிலே!"
காதலோ, ஆசையோ அல்லது அதன் காரணமான நாணமோ, கவிஞருக்கு அல்வா சாப்பிடுவது போல. ஆட்கொண்ட பெண்ணின் உணர்வுகளை உடல் அசைவுகளாகவும் வீடியோ காட்சியாகி இருக்கிறார் இந்த பாடலில் (படம்: மாட்டுக்கார வேலன்). என்ன சார் முக்கால்வாசி அல்வாவை நீங்களே முழுங்கிடீங்க என்பவர்களுக்கு: பல மேடை பேச்சாளர்கள் கண்ணதாசன் எப்படி பழைய தமிழ் பொக்கிஷங்களில் இருந்து எடுத்தாண்டு இந்த பாடலை மெருகேற்றி இருக்கிறார் என்று முன்பே சொல்லிவிட்டதால், நேயர்கள் இந்த இசைக் கவிதை விருந்துகளை ‘வசதியான’ சந்தர்ப்பத்தில் யூடியூப்பில் போட்டு பார்த்து/கேட்டு வரிக்கு வரி பிரித்து மேய்ந்து ஆனந்தம் கொள்ளவும்:
"ஒரு பக்கம்
பாக்கிறா! ஒரு கண்ணை சாய்க்கிறா!
அவ உதட்டைக் கடிச்சுக்கிட்டு
மெதுவாக சிரிக்கிறா!
காலாலே நிலத்திலே கோலம் போட்டு
காட்டுறா!
கம்பி போட்ட ஜன்னலிலே
கன்னத்தைத் தேய்க்கிறா!
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா!"
'காலால் கோலம் போட்டு, கன்னத்தை கம்பியில் தேய்த்து, கறந்த பாலை கையை தொட்டு வாங்கின'தெல்லாம் காலம் காலமாக கண்ணனின் கண் சிமிட்டும் லீலை தானே. இது ஆண் பாடுவது. ஆனால் நாயகியோ டைரக்ட் ஆக சொல்லி விடுகிறாள், 'பார்த்தது போதும், பாடினது கூடவே கையாலும் சேட்டைகள் செய்யுங்கள்' என்று பெர்மிஷன் கொடுக்கிறாள் இப்படி (படம்: வல்லவன் ஒருவன்):
"இன்னும்
பார்த்து கொண்டிருந்தால் என்னாவது?
இந்த பார்வைக்கு தானா பெண்ணானது,
நான் கேட்டதை தருவாய் இன்றாவது?
மாலைக்கு மாலை காதலர் பேசும்
வார்த்தைகள் பேசிட வேண்டும்
பேசிடும்போதே கைகளினாலே
வேடிக்கை செய்யவும் வேண்டும்
அதில் ஓடி வரும் இன்பம் கோடி வரும்!'
இருவரும் "சேர்ப்பதை சேர்த்து பார்ப்பதை பார்த்து வாழ்ந்திட துடிப்பதனாலே" இயற்கை சும்மா இருக்குமா? தன் வேடிக்-கையை காட்டுகிறது. கையால் வேடிக்கை செய்யச்சொல்வது கவிஞருக்கு வாடிக்கை ஆகிவிட்டது போலும்! "நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை' பாடலிலும் (படம்: எதிரிகள் ஜாக்கிரதை) "மாலையைச் சூட்டுங்கள், வேடிக்கை காட்டுங்-கள்" என்கிறார். கட்டினவள் "கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை?" ‘காதலிக்க நேரமில்லாத’வனா என்ன? "அந்த வேலை போனபின் இந்த வேலையில் காலத்தைக் கழிப்பேனே!" என்று ஓடிவந்து விடுகிறான். எப்படியாயினும், "அங்கே மாலை மயக்கம் யாருக்காக? இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக" (படம்: ஊட்டி வரை உறவு). தவிர "இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்?" மேலும், "கேட்டுக் கொள்வது காதலின் இனிமை, கேட்டால் தருவது காதலின் கடமை, இன்பம் என்பது இருவரின் உரிமை, யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை".
மன்மத லீலை ஆரம்பித்தாலே கண்ணை மூட சொல்லுகிறார் கவிகள் மேலே குறிப்பிட்ட "போதுமோ இந்த இடம்?" பாடலிலும்! (இந்த எபிசோட் முழுவதையும் வயது வராதவர்-களின் கண்களை மூடிக்கொண்டு படிக்கணும் போலிருக்கு!) ஆனால் வாய் சும்மா இருக்குமா, பாடத்தான் செய்வார், இது போல, "சுகம் தானா சொல்லு கண்ணே?" (படம் : மன்மத லீலை):
"மணமானது
எந்தன் உள்ளம் தாயானது
பிள்ளை ஒன்றை மனம் நாடுது
கொள்ளை இன்பம் உடல் தேடுது
ஒன்று சேர தடை இல்லையே?
நாள் வந்தது தெய்வம் வந்து எனை
கண்டது
தூது சொல்லி துணை நின்றது
மங்கை உன்னை தொட சொன்னது
இந்த நேரம் தடை இல்லையே?
எதை சொல்வது?
சொந்தம் தானே சுகம் கேட்பது
வெட்கம் என்ன இதில் வந்தது
அக்கம் பக்கம் யார் பார்ப்பது!"
மேலும் பிற்காலத்து பாடலில் "இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு" என்ற கவிஞர் "ஒரு பொழுதில் ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்" என பாடி, இது விதிக்கப்பட்டது என்று முடிக்கிறார் (படம்: பகலில் ஒரு இரவு):
"தன்னை
மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு தேக
சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?
மங்கை இனமும் மன்னன் இனமும்
குலமும் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் களைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே, இந்த நிலைதான் என்ன விதியோ!"
‘இயற்கை தப்பா செய்யும்? இயற்கை சொல்வதை தானே இதயமே கேட்கும்?' என்று கேட்கிறார் கவி ஞானி "இதயம் பொல்லாதது" பாடலில் (படம் : அன்று கண்ட முகம்):
"கண்ணெதிரே
பெண்ணழகை கண்ட பின்னே
இளமை வேகம் கொள்ளாமல் நிற்காது
காட்டுக்கு ஓடிய முனிவர்களும்
வீட்டிற்கு திரும்பிய விஷயமிது
காவலை மீறிய போதையிது கண் மூடி
நடக்கிற பாதை இது
சட்டமும் இதை மறுத்ததில்லை
தருமமும் இதை வெறுத்ததில்லை
பட்டங்கள் வாங்கியும் பயனும்
இல்லை
பயிர் செய்யாவிடில் நிலமும்
இல்லை
ஆசையில் இதயம் கனிந்திருக்கும்
சந்தோஷம் கண்ணில்
மலர்ந்திருக்கும்
நினைவுக்குள் நினைவு
வளர்ந்திருக்கும்
இல்லையென்றால் எது பிறந்திருக்கும்?"
இது 'ஆண்டவன் கட்டளை' (படம்) என்ற பாடலாசிரியர் கண்ணதாசன், இன்ப வழியில் ஓடம் ஓட, முனிவர்களே மூடாதபோது, வழி இருக்கும் போது ஏன் தேவைகளை தவிர்க்கவேண்டும், என கேட்கிறார்:
"அழகே வா
அருகே வா அலையே வா தலைவா வா
ஒரு கேள்வியை உன்னிடம்
கேட்டுவிட்டேன்
நான் கேட்டதை எங்கே
போட்டுவிட்டாய்
என்ன தேடுகின்றாய் எங்கே
ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை ஏன்
மூடுகின்றாய்?
இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்
அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும்
நம் முன்னவர்கள் பெரும்
முனிவரில்லை
அவர் தனித்திருந்தால் நாம்
பிறப்பதில்லை
ஒரு மொழி அறியாத பறவைகளும்
இன்ப வழி அறியும் இந்த
உறவறியும்
இரு விழி இருந்தும் நல்ல மொழி
இருந்தும்
இங்கு வழி இருந்தும் ஏன் மயங்குகிறாய்?"
'கட்டில் வந்தால் பின்னே தொட்டில் வரணுமே?' (ஜோடிகள் furniture லோன் வாங்கணுமே!), என கண்ணதாசனும் நாசூக்காக சொல்லுகிறார், "நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே" பாடலில் (படம்: பார் மகளே பார்):
"ஆண்: நான்
காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
பெண்: அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே"
மேலும் கவிஞர் சரியாக தாளம் போடுகிறார் (படம்: தப்பு தாளங்கள்):
"அழகான
இளமங்கை கட்டில் கொடுத்தாள்
அதற்காக இள மாறன் தொட்டில் கொடுத்தான்"
அப்புறம் என்ன? கவிஞர் பாடினது போல, "மலர் கொடுத்தேன், கை குலுங்க வளையல் இட்டேன்" (படம்: திரிசூலம்) என வீட்டில் வளைகாப்பு தான், கணவனுக்கு எதிர்பார்ப்புதான்:
"கண்ணான
மணவாளன் சேயாகிறான்
கல்யாண மகராசி தாயாகிறாள்
கட்டில் கொண்டால் அங்கு நான்
பிள்ளையே
தொட்டில் கண்டால் அங்கு என்
பிள்ளையே
மகனோ மகளோ பிறக்கும் என் வீடு
நலமாக
மடியில் தவழும் உருவம் என்
தந்தை முகமாக
என் பாட்டில் ஒரு ராகம்
உண்டானது
என் வீட்டின் எண்ணிக்கை
மூன்றானது
தன் கைகள் கொட்டட்டும் என்
செல்வமே
தாயாக ஆகட்டும் என் தெய்வமே!"
ஒன்று பெற்றால் தான் பிள்ளையா? அடுத்ததுக்கு அடிபோடு-கிறான் அவன். ஆனால், அவள் தடை போடுகிறாள் “நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத, இன்பம் என்னும் சொல் எழுத, நீ எழுத, நான் எழுத, பிறந்தது பேரெழுத" (படம் ரிஷிமூலம்):
"இன்னும்
ஒன்று வேண்டுமென்று தெய்வத்திடம் கேட்டிருந்தேன்
இந்த ஒன்றே போதுமென்றாள் தேவி
என் காதினிலே
ராத்திரி ராத்திரி தூக்கம்
கெட்டாலென்ன
பிள்ளை கூட இன்பமே!"
70 மற்றும் 80-களில் ஒரு பெரிய 'போர்' நடந்தது. திரையில் காதல் கதைகள் பரப்பப்பட்டு மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுக்கொண்டிருந்த வேளையில், 'சிவப்பு முக்கோணம்' (Red Triangle) என்னும் கருத்தாக்கத்தை பரப்பி அதைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் முயன்று வந்தன. ஏறக்குறைய அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களின் சுவர்களிலும் அந்தச் சிவப்பு முக்கோண சின்னம் வரையப்பட்டிருந்தது; ஒரு பதின்ம வயதுச் சிறுவனாக, பெண்கள் ஏன் அத்தகைய விளம்பரங்களைப் பார்த்து கூச்சமடைந்து விலகிச் சென்றார்கள் என்று நான் வியந்ததுண்டு. அதேவேளையில், அவர்கள் ஆண்டுதோறும் குழந்தைகளையும் 'தடை' இல்லாமல் பெற்று தள்ளிக் கொண்டிருந்தனர். இதை இப்போது நாட்டிற்கான, 'மக்கள் தொகை ஈவுத்தொகை' (Demographic Dividend) என்று சந்தோஷப்படுகிறோம்! அப்போது இன்வெஸ்ட் பண்ணியதற்கு, இப்போதான் டிவிடெண்ட் கிடைக்கிறது. தாமே ஒரு டசனுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்த கவியரசர், தனது பாடல்கள் வாயிலாகத் தமிழ்நாட்டு தம்பதிகளை கிண்டல் செய்கிறார் "பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்" பாடலில் (படம்: திருவிளையாடல்):
"அறுவடையே முடிக்கும்
முன்னே விதைக்கலாகுமா
அட ஆண்டவனே உன் படைப்பில்
இத்தனை வேகமா
பத்து புள்ள பெத்த பின்னும்
எட்டு மாசமா
இந்தப்பாவி மகளுக்கெந்த நாளும் கர்ப்ப வேஷமா!"
லாரி பின்னாலே தத்துவம் எழுதுவார்கள் இந்தியாவில். ஆனால் கவி ஞானி லாரி டிரைவர் பாடுகிற மாதிரி பாட்டில் தத்துவத்தையும் வைத்து மக்கள் பெருக்கத்துக்கு கடவுள்தான் காரணம் என்று பரந்தாமனுக்கு அப்ளிகேஷனும் போடுகிறார் (படம்: கிரகப்பிரவேசம்):
"உலகம் பெரிது
சாலைகள் சிறிது ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
சுமைகள் அதிகம், சொந்தமும் அதிகமும் இறைவனின் கணக்கில் இதுதான் உலகம்
வருஷா வருஷம் ஒவ்வொரு கோடி
மக்கள் கூட்டம் பெருகுதடா
வழிகள் தோரும் தலைகளை
பார்த்தால்
பொதுக்கூட்டம் போல் தெரியுதாடா
படைக்கும் தொழிலை கொஞ்சம் நிறுத்திக் கொண்டால் என்ன பரந்தாமா?"
தமிழில் 'குழந்தைச் செல்வம்' என்பார்கள். கவிஞர் அந்த செல்வம் அதிகமாக கிடைத்துவிட்டால் கடவுளே வழி காட்டணும் என்கிறார். (படம்: கண்ணே பாப்பா):
"கண்ணே
பாப்பா என் கனிமுத்து பாப்பா
தங்கச் சிலையே நானும் நீயும்
தலைவன் விளையாட்டு
சாலை வழியே செல்வம் வந்தால் இறைவா வழிகாட்டு!"
‘சொல்லி தெரிவதில்லை, மன்மதக் கலை' என்பார்கள். அது எப்படி புத்தகம் படித்து வரும்? "அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே!" என்று வேறு பாலக்காட்டு அப்பாவி ராஜா அப்போவே ஒத்துக்கொண்டு விட்டார் (படம்: வியட்நாம் வீடு). ஆனா இப்போதான் குழந்தைகளே வந்து விட்டதே, எனவே, குழந்தை செல்வம் பற்றி புத்தகங்கள் என்ன சொல்கின்றன என இப்போது சோதிப்போம். ஜோடிகள் கட்டிலில் விளையாடியது போதும், எடிட்டர் கத்தி போடாமல் அரிவாள் எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். எனவே குழந்தைகள் பக்கம் நாமும் திரும்புவோம்.
குழந்தைகள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பது இந்திய ஞானம் கூறும் கருத்தாகும். ஜெரால்ட் ஜி. ஜாம்போல்ஸ்கி (Gerald G. Jampolsky) தனது "Love is Letting Go of Fear" (அன்பு என்பது பயத்தைக் கைவிடுதல்) என்ற நூலில், வாழ்க்கை முறையைப் பற்றி நம் குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் என்று குறிப்பிடு-கிறார்: "கைக்குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்-காலம் எனப் பிரிக்கப்பட்ட கால ஓட்டம் அல்லது கால வரிசைமுறை எனும் கருத்தாக்கத்திற்கு அவர்கள் இன்னும் பழகி இருக்கவில்லை. அவர்கள் உடனடி நிகழ் காலத்துடன், அதாவது 'இந்தத் தருணத்துடன்' மட்டுமே தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்! உலகம் துண்டு துண்டாக பிரிந்திருப்பதாக அவர்கள் பார்ப்பதில்லை என்பதே என் கணிப்பு. உலகின் அனைத்துடனும் தாங்கள் இணைந்து, ஒரு முழுமையின் அங்கமாக இருப்பதாகவே அவர்கள் உணர்கி-றார்கள். என்னைப் பொறுத்தவரை, அவர்கள் உண்மையான கள்ளங்கபடமற்ற தன்மை, அன்பு, ஞானம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார்கள்."
பாபி கானரும் (Bobbi Conner) மேற்கூறிய கருத்தை ஏற்கிறார். "Everyday Opportunities for Extraordinary Parenting: Simple Ways to Make a Difference in Your Child's Life" என்ற தனது புத்தகத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார்: "வளர்ந்து வரும் குழந்தைகளின் அப்பாவித்தனம் மற்றும் மென்மையான இயல்பு ஆகிய-வற்றின் மீதான மரியாதையை இழந்து விட்ட ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம்." குழந்தைகளின் வளர்ச்சிக்குரிய அழகை நமது வாழ்க்கை முறைகள் சிதைத்துக் கொண்டிருக்கும் தற்போதைய சமூகச் சூழலோடு ஆசிரியர் இந்தக் கருத்தை இணைத்துப் பேசுகிறார்.
அவர் பிரச்சனைகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், நடை-முறைக்கு ஏற்ற தீர்வுகளையும் வழங்குகிறார்: "தொலைக்காட்சிச் செய்திகள், வானொலி, அச்சு ஊடகங்கள் மற்றும் திரைப்படங்கள் என எங்கும் வன்முறை காட்சிகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. குழந்தைகள் வளர்வதற்கு இது ஒரு உகந்த சூழலாக தெரியவில்லை." இதைச் சமாளிக்க வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உதவ, இன்றைய பெற்றோர்களும் தாத்தா-பாட்டிகளும் என்ன செய்ய வேண்டும்? கானர் சில ஆலோசனைகளை வழங்குகிறார்: "நகைச்சுவையின் சிறப்பம்சம் என்னவென்றால், அதை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வாழ்க்கையின் பல சூழல்களில் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் குழந்தையுடன் ஒரு நகைச்சுவையையோ, வார்த்தை விளை-யாட்டையோ அல்லது வேடிக்கையான விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
இன்றைய குடும்பங்களில் கதை சொல்லும் பழக்கம் மறைந்து போகும் அபாயம் உள்ளது. பல குடும்பங்களில் 'குடும்பத்தினர் ஒன்றுகூடி கதை சொல்லும்' நேரத்தை காணொளிகளும் video game விளையாட்டுகளும் ஆக்கிரமித்துவிட்டன. இது ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும். நாம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் திறன்களை விட, நாம் உருவாக்கும் சூழலே அவர்களின் நீண்ட கால வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் மிக முக்கியமானது. அதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை வளர்ப்பது என்பது பெரும்பாலும் பெற்றோர்-களுக்கும் ஒரு கற்றல் அனுபவமாகவே அமைகிறது. இது மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு மட்டு-மல்ல, அவர்களிடமிருந்து நாமும் கற்றுக் கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு கூட."
குழந்தைகளை பொறுத்தவரை நாம் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன? பாபி இவ்வாறு எச்சரிக்கிறார்: "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் குழந்தைகளை அவசரப்படுத்தக் கூடாது என்று நான் நினைக்கிறேன். விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு அளிப்பது ஒரு சிறந்த பரிசாகும். மூன்று அல்லது நான்கு வயதில் அவர்களுக்கு அந்த வாய்ப்பை நாம் வழங்காவிட்டால், மீண்டும் ஒருபோதும் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. குழந்தைகள் பஞ்சு (sponge) போன்றவை. தங்கள் சூழலில் காண்பவற்றை அவர்கள் அப்படியே உள்வாங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் கற்றுக் கொள்வது என்பது அடிப்படையில் இதுதான்; எனவே, கருணை அல்லது இரக்க உணர்வைக் கற்றுக்கொள்ளும் போது, அது என்ன என்பதை அவர்களுக்குச் செய்து காட்ட ஒரு முன்மாதிரி தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது ஒரு தீவிரமான செயல்; எனவே, நாம் அதில் குறுக்கிடக்கூடாது."
குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் கொள்ளை ஆசைதான். கவியரசரை பற்றி கேட்கவா வேண்டும். அவர் பாடல்களில் கொஞ்சி தள்ளியிருக்கிறார். உதாரணமாக யாரால் மறக்க முடியும் இந்த தேனமுதை? பிள்ளை பாசத்தோடு உடன் பிறந்தவர் பாசத்தையும் மீட்டும் மலரை? (படம்: பாசமலர்):
"மலர்ந்து மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை
பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில்
தலைசீவி நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி
மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே"
கவிஞர் குழந்தைகளை கொஞ்சுவது கொஞ்சமா நஞ்சமா? கண்ணனையே கண்டதுபோல் கற்கண்டு போன்ற வரிகளில் தேன் குடித்த நரியாகி இருக்கிறார்: "சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ? கண் இரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா!" (படம்: வாழ்க்கைப் படகு). "அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து, சின்னக் கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்?" (படம்: காக்கும் கரங்கள்). குழந்தையை தாலாட்டி கொண்டே தன் பெண் கதையை இப்படி பாடாத மங்கையினம் தமிழ்நாட்டில் உண்டோ? "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே!" (படம்: சித்தி). சந்தோஷமாக இப்படியும் பாடியிருக்கிறார் கவிஞர் (படம்: பார் மகளே பார்):
"நீரோடும்
வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை
காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில்
பாலூற்றும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன்
குலமகளே!
மகளே உன்னைத் தேடி நின்றாளே
மங்கை இந்த மங்கல மங்கை
வருவாய் என்று வாழ்த்தி
நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை
குயிலே என்று கூவி நின்றேனே
உன்னை என் குலக் கொடி உன்னை
துணையே ஒன்று தூக்கி வந்தாயே
எங்கே உன் தோள்களில் இங்கே
உன் ஒரு முகமும் திரு மகளின்
உள்ளம் அல்லவா
உங்கள் இரு முகமும் ஒரு
முகத்தின் வெள்ளம் அல்லவா
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ"
குழந்தையை தாலாட்டும் போது சோக பாடல்களும் உண்டு. அந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வுகளை பார்ப்போம்... அடுத்த எபிசோடில்...
-ஜேயெஸ் (www.jeyes.in)
Comments
Post a Comment