பொங்கும் பொங்கல் நினைவுகள்
கிராமத்திலேயே பிறந்து இருபது வருடங்களுக்குப் பின் மும்பை நரகத்தில் மூச்சைத்
தொலைத்து, திரும்பவும் மண்வாசனையால் பொங்கி வரும் பொங்கல் நினைவுகளை எழுதுகிறேன். தமிழிலேயே
யோசித்து, தமிழில் பேசி, தமிழ் எழுதியவனுக்கு, முப்பது வருடங்களின் இந்தி ஆங்கில தாக்கத்தால், தமிழ் தடுமாறுகிறது.
பொங்கல் என்றாலே முதல் நினைவு தம்பி மூன்றாவது படித்தபோது எழுதிய கட்டுரையில் ‘காலி’ல்லாத கடைசீ சிரிப்பு வரி:
“எல்லோரும் பெங்கலோ பெங்கலென்று பெங்கினார்கள்”. இதைச்
சொல்லியே தங்கை இத்தனை வருடங்களும் தம்பியின் ‘காலை’ வாரிக் கொண்டிருக்கிறாள்.
அப்பா ரெயில்வே அதிகாரி. அந்தக் காலத்தில் அந்த வேலைக்கு கிராமங்களில் மரியா’தை’. அதனால், ‘தை’ வந்தால் ஊர் விவசாயிகள்
பொங்கலுக்கு புது அரிசி தருவார்கள். அம்மா பானைக்கு இஞ்சி மஞ்சள் மாலையிட்டு
சர்க்கரைப் பொங்கல் வடிப்பாள். என் குறியெல்லாம் பானையின் அடியில்
ஒட்டிக்கொண்டிருக்கும் வெல்லத்திலேயே இருக்கும். செங்கரும்பைக் கடித்து பல் உடைந்த
நினைவும் வருகிறது.
‘கட்டை’ப் பையனாக இருந்த எனக்கு
உயிரோட்டமும், உணர்வோட்டமும் கொடுத்தவர்கள், தமிழ் நாவல் படிக்கும் அம்மாவும் வெள்ளமாய் கவிதை எழுதும்
அண்ணன் ‘ஜெயலன்’ அவர்களும். பொது நூலகத்திலிருந்து திருடியாவது வந்து சண்டை போட்டு தமிழ்
படித்த நாட்கள் அவை. அதனால் பொங்கிய பொங்கல் புதுக்கவிதை இது:
ரேஷன்
அரிசியில் கல்;
அதனால்
இந்த
வருடம் கொண்டாட
பெயரிலேயும்
பொங்’கல்’.
இளமையின் எழுதும் உத்வேகத்தில் கதை கவிதைகளை ‘வடிகால்’ என்று கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தி வெளியிட்ட
நினைவுகளும் வருகின்றன. அதில் பொங்கல் அன்று வந்த ‘ஏழை விவசாயியின் நிலை’ சொல்லும் ஜெயலன் கவிதை இது:
பொங்கல் இனிக்கவில்லை ஏனெனில் பொங்கவில்லை
பொங்கவிலை என்பதனால் இனிக்கத் திங்கவில்லை
கங்குல் பிரியவில்லை கழனிக்குச் சென்றுவிட்டோம்
உங்கள் உணவெல்லாம் எங்கள் உழைப்பாலே
எங்கள் உணவினிலே இருப்பதுவோர் உவர்கல்லே
கண்கள் பார்க்கவில்லை கதிர்கள் வெடித்தலையே
கருங்கல் மனங்கொண்ட காற்றும் அழித்ததுவே
பெண்கள் புலம்புகின்றார் ஆடவர்யாம் என்செய்வோம்
சொந்தங்கள் மாளிகையில் சொக்கட்டான் ஆடுகிறார்
சந்தங்கள் நிறைந்த பெரும் கவிதைகளைப் பாடுகிறார்
வந்தெங்கள் குறைதீர்க்க யார்வழியை நாடுகிறார்?
பந்தங்கள் இருந்தென்ன பற்றத்தான் எண்ணையில்லை
எங்கும் பரவுபுகழ் எமக்கிங்கு வேண்டாமே
தங்கும் இடமொன்றும் முங்கக் குளமொன்றும்
மங்கும் சிறுவிழிகள் மங்காது இருக்கசிறு
பொங்கும் உணவும் எமக்குப் போதுமைய்யா!
இன்றைய விலைவாசி உயர்வில் இந்த விவசாயி உழைப்புக்கான ஊதியம் கிட்டாமல் இன்னும்
நொந்து நூலாகித்தான் போவான்.
“கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது” என்றார் மஹாத்மா காந்தி. இப்போது கிராமங்களை
காங்க்ரீட் நரகங்கள் விழுங்கி விட்டன. நாம் இயற்க்கை செழிந்த கிராமங்களிலிருந்து ‘ரொம்ப தூரம்’ வந்துவிட்டோம்.
திரும்பவேண்டிய கட்டாயத்தை இந்தத் தைப் பொங்கல் நமக்கு உணர்த்தட்டும்.
ஜேயெஸ்
HI Jeyes
ReplyDeleteI have read this once again this Pongal and enjoyed it for the second time.
Ara...